காட்டுத்தீயும் மூன்று ரோஜாக்களும் - 13

பாகம் பதிமூன்று
================

(ஒரு புது புரஜக்ட்.. அதில் கலக்க மூவர் கிளம்பி செல்கின்றனர். இவர்கள் எடுத்து அனுப்பிய முதல் வீடியோ ஒளிபரப்பப்பட்டு தமிழ்நாடே அதிர்ந்து போய் இருந்தது. இளமதி டீமுடன் ப்ளூகிராஸும் சேர்ந்து கொண்டது. கூடவே இருந்த வருண், அவனது காலேஜ் நண்பர்கள் பலரை அழைந்திருந்தான். காட்டுத்தீ, கஞ்சா செடி என அடுத்தடுத்த செய்திகளால் பலரது பேவரேட் சேனலானது இளமதி. அதே நேரம் வருணுக்கு அடிபட அவன் ஆஸ்பெட்டலில் அட்மிட் ஆகி குணமடைந்து வருகிறான். சாருமதிக்கு பல வெளிநாட்டு, உள்நாட்டு சேனல்கள் வாழ்த்து தெரிவித்தன. அப்போது மற்றுமொரு அதிர்ச்சி செய்தி அவர்களை வந்தடைந்தது. அது என்ன? வாருங்கள் பார்க்கலாம்)

என்ன தான் ஒருவருக்கு தொடர்ந்து வாழ்த்து மழை பொழிந்து கொண்டிருந்தாலும் சிலருக்கு மட்டும் அது உருத்தலாகவே இருக்கும் என்பது மனித இயல்பு.. அப்படித்தான் இளமதி நிறுவனத்தின் எதிரி நிறுவனம் ஒன்று இவர்களது டிவி மீது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

தீப்பற்றியிருக்கும் விபரம் தெரிந்தவர்கள் பொதுமக்கள், அரசாங்கத்தின் உதவியோடு அதனை அணைக்கும் முயற்சியினை மேற்கொள்ளாமல், தங்களது சுய நலத்துக்காக அதனை வீடியோவாக்கி வைரலாக்கி, அனைவருக்கும் பயத்தை ஏற்படுத்தி விட்டனர். இது முற்றிலும் சுய நலமே. பொது நலமில்லா ஒரு டிவியை இப்படி நாடே கொண்டாடுவது எவ்விதத்திலும் சரியில்லை. இப்படி ஜோடிக்கப்பட்ட பத்து பக்கங்களுக்கு மேல் இளமதி டிவி மேல் குற்றம் கூறி, இவ்வழக்கை உடனே விசாரிக்க வேண்டுமென்றும், அவர்கள் ஒளிபரப்பும், ஒளிபரப்ப இருக்கின்ற, இதுவரை ஒளிபரப்பான அனைத்து வீடியோக்களையும் தடை செய்ய வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டனர்.

வேலை வெட்டி இல்லாத பலருக்கும் உலகத்தில் இது தான் முக்கியமான வேலையே... யார் மீதாவது அடிப்படை இல்லாத குற்றம் சுமத்த வேண்டியது. அப்புறம் அதை நிரூபிக்கச் சாட்சிகளை ஜோடிக்க வேண்டியது. முடியாத பட்சத்தில் பல பொய்களுக்கு அழகாய் ஆடையுடுத்தி மேடையேற்ற வேண்டியது.

அப்படித்தான் ஆனது இங்கும்.. சில பத்திரிக்கைகள் இதை உடும்புப்பிடியாய் பிடித்துக் கொண்டன.

சில டுவிட்டுகள் இதே விஷயத்தை ஆக்கிரமித்துக் கொண்டன.

சில மணி நேரங்களில் மீண்டும் இளமதி டிவி டிரண்டானது. முன்பு வந்த நல்ல விஷயத்துக்கல்ல.. இப்போது புதிதாய் வந்து சேர்ந்த கெட்ட விஷயத்துக்கு...

பேன் இளமதி, தடைசெய் இளமதி டிவி வீடியோ, செல்பீஸ் இளமதி, டவுன் டவுன் சாருமதி என்பவை சட்டென தமிழக அளவில், இந்தியா அளவில், உலக அளவில் டிரண்டாக ஆரம்பித்தன.

இதையும் ரொம்ப நாட்களாகவே எதிர்பார்த்திருந்தாள் சாரு. தனது சட்ட ஆலோசகர்களை அழைத்து அடுத்த நாம் என்ன மாதிரியான நடவடிக்கைகளில் இறங்கலாம் என்பது பற்றி விவாதிக்க ஆரம்பித்தாள்.

சமூக வலைத்தளங்களில் நல்லதோ, கெட்டதோ.. பற்றிக்கொண்டால்.. எப்படி பரவும் என்றே தெரியாது.. அப்படித்தான் பரவியது செல்பிஸ் இளமதி என்ற செய்தியும்.

இளமதி டிவியின் காட்டுத்தீ டீமுக்கும் இச்செய்தி கவலையைக் கொடுத்தது.

கான்பரன்ஸ் போனில் நால்வரும் நீண்ட நேரம் விவாதம் செய்தனர்.

"இதெல்லாம் ஈசல் மாதிரி. நாளைக்கே காணாமல் போகக் கூடிய செய்தி தான். நல்ல பெயர் சம்பாதித்து வைத்திருக்கும் நம் மீது சேறு அள்ளி பூசும் செயல் இது. இதெல்லாம் கண்டு நாம் பயப்படத் தேவையில்லை", என சாரு சொல்லிக்கொண்டிருந்தாள்.

இதற்கிடையில் ஷாலினி, தர்ஷினி, மேகலா வீட்டிலிருந்தெல்லாம் கால் வந்துவிட்டது. முன்பு பாராட்ட கால் செய்தவர்கள்...

"இப்போது பேரு கெட்டுடும் போல இருக்கே... இத்தன நாளா சம்பாதிச்சு வச்சிருந்த நல்ல பேரெல்லாம் போனா நல்லவா இருக்கும். உடனே மன்னிப்பு கேட்டு ஒரு வீடியோ வெளியிட்டுட்டு கெளம்பி வீட்டுக்கு வாங்க..", போதும் உங்க புரஜக்ட் என பிரசர் கொடுக்க ஆரம்பித்தனர்.

சரி என ஒரு முடிவு எல்லோராலும் எடுக்கப்பட்டது.

"இதுவரை எடுத்த வீடியோக்கள் போதும். நாளை காலை நீங்க கிளம்பி வாங்க.. அடுத்து என்ன பண்ணலாம்னு யோசிச்சு முடிவெடுப்போம்", என்று சொல்லிவிட்டாள் சாருமதி.

இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டதும் மிகவும் வேதனையடைந்தது வருண் தான்..

"பல முயற்சி எடுத்துட்டோம். உலகுக்கே இத கொண்டு போயிருக்கோம்.. இன்னும் ரெண்டு மூனு நாள்ல தீ கூட தானா அணைய வாய்ப்பிருக்கு.. ப்ளீஸ் இப்படி பாதியிலேயே விட்டுட்டுப் போகாதிங்க...", எனக் கெஞ்சினான்.

பிருந்தாவும் அதையே தான் சொன்னாள்.

"வருண் சொல்லறக் கேளுங்க.. ஒரு ரெண்டு நாளைக்கு உங்க பயணத்த தள்ளிப்போடுங்க..", என தீவிரமாகக் கேட்டுக்கொண்டாள்.

சாருமதிக்கும் இந்த விபரங்களைத் தெரிவித்தனர்.

காட்டுக்குள் போகவில்லை.. ஆனால் நாங்கள் திரும்பி வருவதை மாத்திரம் ஒரு ரெண்டு நாள் கழித்து வரலாம் என்று நினைக்கிறோம் எனச் சொல்ல சாருவும் 'சரி'யென்றாள்.

அடுத்து வந்த ஒரு செய்தி அவர்களுக்கு ஆறுதலாக அமைந்தது.

(தொடரும்)

எழுதியவர் : அ.வேளாங்கண்ணி (7-Jan-22, 11:09 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 51

மேலே