காலம் கடந்த ஞானம்

காலம் கடந்த ஞானம்

சட்டென விழிப்பு வர எழுந்து உட்கார்ந்தார் பழனிச்சாமி, தலை கனப்பது போல இருந்தது. கொஞ்சம் அதிகமாக குடித்து விட்டோமா? தலையை உதறிக்கொண்டவர், பக்கத்தில் படுத்திருந்த மனைவியை பார்த்தார். நிம்மதியான உறக்கத்தில் இருந்தாள். அவளை எழுப்ப நினைத்தவர் சட்டென அந்த நினைவை உதறினார். இப்பொழுதெல்லாம் தனக்கு அடிக்கடி களைப்பு ஏற்படுவதாக சொன்னது ஞாபகம் வந்தது. ம்..பெருமூச்சுடன், கட்டிலை விட்டு எழுந்தார். தனக்கும் அடிக்கடி களைப்பு ஏற்படுவது புரிந்தது, வயதின் தளர்ச்சியாக இருக்கும் என்று நினைத்தவருக்கு, அப்பாவின் ஞாபகம் கூடவே வந்தது. அவர் இந்த எண்பது வயதிலும் திடகாத்திரமாய் இருப்பதை கண்டு வியந்திருக்கிறார்.
இவர் கார் ஏறி வேலைக்கு கிளம்பும்போது அவர் ஏதாவது ஒரு செடியை கொத்திக்கொண்டோ, அல்லது நட்டு வைத்துக்கொண்டோ இருப்பார். இவருக்கு சட்டென ஒரு எரிச்சல் வரும். தோட்டக்காரன் இருக்கும்போது இவர் எதுக்கு இப்படி? அதுவும் வேலைக்காரர்கள் முன்னால் தன்னை காட்டிக்கொள்ள வேண்டும். அதற்குள் கார் தெருவுக்கு வந்து காலை நேர வாகன பரபரப்பில் கலந்திருக்கும். அதற்கு பின் அது மறந்திருக்கும்.
தனது வாரிசுகளான ரமேசுக்கும், பானுவுக்கும் தாத்தா ஏன் இப்படி இருக்கிறார் என்ற எண்ணம் இருந்திருக்குமோ? ஆனால் தாத்தா என்று ஒருவர் இந்த வீட்டில் வசிக்கிறார் என்றாவது இவர்கள் எண்ணிப்பார்த்திருப்பார்களா? தன்னிடமே காரியம் இருந்தால் மட்டும் பேசுபவர்கள் அப்பாவை எப்படி கண்டு கொள்வார்கள் ! அந்த இரவில் அதை நினைத்து அவருக்கு சிரிப்பு வந்த்து. நானே அப்பாவை பக்கத்தில் பார்த்து நீண்ட நாட்களாகி விட்ட்து. அவருண்டு, தோட்டம் உண்டு, என்று இருக்கிறார். தேவையானால் தோட்டக்காரனோடும், வேலைக்காரர்களோடும் பேச்சு வைத்துக்கொள்கிறார். பின் புறம் தோட்டத்தை ஒட்டி ஒரு சிறு அறை ஒன்றிலேயே அடைந்து கொள்கிறார். அதிகமாக இவர்கள் இருக்கும் வீட்டுக்குள் புழங்குவதில்லை. நான் கூட இதை பற்றி அவரிடம் கேட்காமல் இருந்திருக்கிறேன். நினைத்தவருக்கு, மெல்லிய குற்ற உணர்ச்சி கூட வந்தது.
அம்மா இருக்கும்போது அவர் இப்படி விட்டேற்றியாய் இருந்ததில்லை. அப்பொழுது இவர்கள் மூவர் மட்டும்தான். இவ்வளவு பெரிய வீடும் கிடையாது, வாடகை வீட்டில் சிறு அறைகள் இரண்டு மட்டுமே இருக்கும், ஒன்றில் சமைக்கவும், அடுத்த்தை படுக்கை அறையாகவும் உபயோகித்தார்கள். ஏதோ கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்தார்.
காலையில் எழுந்து அம்மா கொடுக்கும் டிபன் கேரியரை எடுத்து சைக்கிளில் மாட்டிக்கொண்டு போவதை அம்மாவின் மடியில் இருந்து பார்த்த ஞாபகம் இருக்கிறது. அதன் பின்னும் அடித்து பிடித்து வாழ்ந்த காலங்கள் ! விடுமுறை நாள் என்றால் இவனை எடுத்து தோளில் உட்கார வைத்துக்கொண்டு பக்கத்து பெருமாள் கோயிலுக்கு செல்வார். அப்பொழுது அவர் கதைகள் கூட சொல்லிக்கொண்டே சென்றதாக ஞாபகம். எப்பொழுது தனக்கும் அவருக்கும் இடைவெளி அதிகமானது?
தனக்கு வேலை கிடைத்த பின் வேலை பளு காரணமாக வெளியூர் சென்று தங்கியதும், அதன் பின்னர் தனியாக தொழில் தொடங்க அம்மாவிடம் வந்து அவர்கள் சேமிப்பை வாங்கி சென்றது, அடுத்து இவரின் எண்ணமெல்லாம் உழைப்பு வேலை, வேலை..
கல்யாணம் ஆகி இரண்டு குழந்தகளை கூட இவரால் சரியாக பார்க்க முடியாமல் பெருமூச்சு விட்டார்..கிட்ட்த்தட்ட முப்பது வருடங்கள் ஓட்டிவிட்டோமா? அப்பொழுது கூட அம்மாவையும் அப்பாவையும் தன்னுடன் வைத்துக்கொள்ள இவள் விரும்பவில்லை.. தன்னுடைய் வசதிகள் பெருக பெருக, இவராக ஒரு நாள் அவர்கள் இருவரையும் அழைத்து வந்து இருக்க சொன்னது. அதற்கே இவள் முகத்தை தூக்கி வைத்து கொண்ட்தும் ஞாப்கம் வந்தது. குழந்தைகள் அப்பொழுது வளர்ந்து ஓரளவு விவரம் அறிந்தவர்களாய் இருந்தார்கள். அவர்கள் கூட அம்மாவையும், அப்பாவையும் சாதாரணமாகத்தான் பார்த்தார்கள். அவர்க்ளோடு பழகி பேசியதை கூட இவர் பார்த்ததாக ஞாபகம் வரவில்லை.
அம்மா இருக்கும்போது கூட இவர்கள் வீட்டிற்குள் அதிகமான புழக்கம் வைத்து கொண்ட்தாக தெரியவில்லை. அம்மா இறந்த போது செய்த சாஸ்திரங்கள் கூட இவரின் சமுதாய மதிப்பிற்கு செய்ய நினைத்தாரே தவிர அதில் அதிக ஈடுபாடு காட்டவில்லை.
சட்டென அந்த நடு இரவில் கொத்து கொத்தாய் வந்த நினைவுகளில் இவர் மனம் மூழ்க ஆரம்பிக்க அதிலிருந்து தப்பிக்க நினைத்து தன்னை உதறி வெளி வர நினைத்தார். அவருக்கு ஏனோ அப்பாவை அருகில் சென்று பார்க்கவேண்டும் என்று ஆசை வந்த்து. இந்த நேரத்தில் போய் பார்ப்பதா? சிறிது தய்க்கம் வந்தாலும், அப்பாவை பார்க்க கூட நேரம் காலமா? காலையில் பார்க்க நினைத்தால் இவளிடம் ஏன் எதற்கு என்று விளக்கம் சொல்ல வேண்டும்.
மெல்ல வீட்டின் உள் புறம் நடந்தார். பின் வாசல் வழியாய் நடந்தவர் மனம் ஒரு வித பதட்ட்த்துடன் இருந்த்து. அப்பாவின் கை விரல் பிடித்து நடந்தது, ஒன்றாய் கட்டிலில் அவர் மீது கால் போட்டு தூங்கியது, பதினைந்து வயது வரை தனக்கு குளிப்பாட்டி விட்ட்து, இது ஒவ்வொன்றாய் அவர் மனதுக்குள் பொங்கி வர ஆரம்பித்தன.
அந்த இருளின் அமைதி !... மெல்ல பின் புற கதவை திறந்து நடக்கிறார்.. சற்று அருகிலேயே “சிறிய அறை” அமைதியாய் உறங்குவதாக அவருக்கு தெரிந்தது. கதவருகே வந்தவர் தட்ட யோசிக்குமுன் ஒரு முறை அம்மா சொன்னது ஞாபகம் வந்த்து. நாங்க எப்பவுமே கதை சாத்தி தாழ்ப்பாள் போட மாட்டோம், காரணம் எங்களுக்கு ஏதாவது ஒண்ணு ஆச்சுன்னா நீ எப்படி எங்களை பாக்க முடியும்? சட்டென கண்களில் நீர் துளிர்க்க கதவை மெல்ல தள்ளினார்.
அப்பா ஒரு இரும்பு கட்டிலில் தலைக்கு ஒரு சிறு தலையணை மட்டும் வைத்துக்கொண்டு வெறும்னே படுத்திருந்தது தெரிந்தது. மெல்ல அடி எடுத்து நடந்தார். அருகில் சென்று அப்பாவின் முகத்தை பார்த்தார். நல்ல தூக்கத்தில் இருப்பாரோ? சதைக்கோடுகள் நிறைந்திருந்த அந்த முகத்தில் புன்னகை இழையோடியதாக இவருக்கு தெரிந்தது. அப்படியே ஐந்து நிமிடம் பார்த்துக்கொண்டே இருந்தவருக்கு சட்டென ஏதோ உறைக்க அவர் முகத்தை மெல்ல தொட்டார். சில்லிட்டிருந்த்து. அப்பா..அப்பா…கேவல் அவர் வாயிலிருந்து வெடித்து கிளம்ப நினைத்த வேளையில்
வேண்டாம் ஒருவருக்கும் இப்பொழுது தெரிய வேண்டாம். விடியும் வரை அப்பாவுடனே தனியாய் படுத்திருக்க போகிறேன். இது மட்டுமே இப்பொழுது எனக்கு கிடைத்திருக்கும் பாக்கியம், அதனை கெடுத்து கொள்ள போவதில்லை. அப்படியே மடங்கி உட்கார்ந்து அவர் முகத்தோடு தன் முகத்தை வைத்து குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தார்.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (22-Jan-22, 11:30 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 276

மேலே