பார்வையும் வந்தது பாதையும் தெரிந்தது
எல்லாம் தெரிந்திருந்தும்....
எல்லாம் படித்திருந்தும்...
ஏ....மனமே
ஏனிப்படி அலைகின்றாயோ !
எல்லாம் கொடுத்திருந்தும்....
எல்லாம் கிடைத்திருந்தும்....
ஏ.....மனமே
ஏனிப்படி அழுகின்றாயோ....!
ஒவ்வாத செயல்களை - நான்
ஒவ்வொன்றாய் செய்தபோது
எல்லாமே கூடிவந்து
ஏகமாய் உதவியதே...ஐயகோ
சேர்த்து வைத்த செல்வமெல்லாம்
ஒவ்வொன்றாய் போனபோது
எல்லாமே ஓடிப்போய்
ஏளனமாய் சிரித்ததுவே.....!
ஆடிய ஆட்டங்கள் ஆயிரம்...
கூடிய கூட்டங்கள் ஆயிரம்...
கண்டதும் மனதினில்
கட்டிய கோபுரங்கள் ஆயிரம்.
எதை கண்டேன்?....
எதை கேட்டேன்?...
எதை செய்தேன்?....
ஒன்றும் புரியவில்லை....
என்னை அறியவில்லை.
எல்லாம் புரிந்தபோது
ஒன்றும் கையிலில்லை...
ஒட்டும் உறவுமில்லை.
கண்ணன் திருவடி தந்தது நிம்மதி...
வண்ணத்திருவடி வாழ்க்கையைச் சொன்னது.
அற்பமாய் நானும் அலையாய் அலைந்தேன்.
அழிகின்ற செல்வத்தை காத்திட நாளும்
பூதமாய்த் திரிந்தேன்.
பூலோக வாழ்க்கை
நித்தியமென்றெண்ணி
நிலையில்லாமல் திரிந்தேன்...
நிம்மதியை தொலைத்தேன்.
கீதையின் வழி சென்றது மனம்.
திறந்தது கதவு...
காட்சிகள் தெரிந்தது...
பறந்தது என் மனம்
பாடியது அவன் நாமம்.
பார்வையும் வந்தது...
பாதையும் தெரிந்தது.