மௌனம்

மனங்கள் பேசும் மொழி
மௌனம் அதனின் பெயர் !
கருவறை சிசுவும் பேசும்
மௌன மொழியில் தாயிடம் !
உருவாகும் உணர்வின் உச்சம்
உள்ளத்தில் நிலவும் மௌனம் !
கூடும் சோகத்தின் விளிம்பு
ஒலியற்ற மௌனத்தின் எல்லை !
சுகத்தை உணர்ந்திடும் உள்ளம்
உரைக்கும் மௌன மொழியில் !
நெருங்கிய காதலரின் மனங்கள்
நிகழ்த்திடும் மௌன யுத்தம் !
உருக்கிடும் காணும் உள்ளத்தை
வறியோனின் மௌனப் புன்னகை !
உருவாகும் பனிப்போர் உள்ளத்தில்
உருமாறும் மௌனப் புரட்சியாக !
மௌனம் காப்பதே மருந்தாகும்
வருந்தும் மனதிற்கு விருந்தாகும் !
கற்றிடுக மௌனமெனும் மொழியை
பயணிக்க வாழ்வெனும் பாதையில் !
நிலைத்திட வாழ்வில் அமைதியை
காத்திடுக உள்ளத்தில் மௌனம் !
பழனி குமார்