நெஞ்சினிலே குயில் கூவும்

நெஞ்சினிலே குயில்கூவும்
=======================
சுருட்டுவதைச் சுருட்டியெங்கள் நாட்டைச்
சுடுகாடாய் ஆக்கிவைத்தக் கேட்டைத்
திருத்தியொரு மறுமலர்ச்சித்
தென்றலென வந்துலவக்
கருத்துடனே பாடெழுச்சிப் பாட்டை!
*
பாடுமுந்தன் பாடலினைக் கேட்டுப்
பாமரனும் வந்துநிற்பான் கூட்டு
ஆடுகின்ற வறுமைப்பேய்
ஆட்டத்தை நீநிறுத்திப்
போடுதற்கு வைத்துவிடு வேட்டு.
*
வேட்டுவைத்துஞ் சாகாத ஊழல்
வீரர்கள் சூழச்சியுடன் ஆளல்
நாட்டைவிட்டே ஓடிவிட
நல்லதொரு சாட்டையெடு
ஆட்டமுறும் அச்சமுள்ள சூழல்
*
சூழலினைச் சாதகமாய் ஆக்கிச்
சூதாடும் கயவரினைப் போக்கி
வாழவுள்ள மக்களுக்கு
வழிகாட்டிச் செல்லவிடு
ஊழலிலாச் சமுதாயம் நோக்கி
*
நோக்கநிற்கும் போதினிலே கொள்ளை
நூதனமாய் அடிக்கின்றக் கள்வர்
தேக்கிவைத்தப் பொருளெடுத்து
தேசத்தை மீட்டவரைத்
தூக்கிலிடும் போதிலில்லை தொல்லை
*
தொல்லைகளே வாழ்வான தென்று
தொணதொணக்கும் நிலையுற்றோ மின்று
இல்லையெனும் சொல்லெடுத்து
எந்நாக்கும் பேசுவதை
இல்லாம லாக்கிடுவாய் நன்று
*
நன்றெமது நாடென்று சொல்லும்
நாளொன்று வந்தெம்மைக் கொல்லும்
ஒன்றுமிலா நிலைமாற்ற
ஊரோடு கைக்கோர்த்துச்
சென்றிடவே எதிர்பார்ப்பு வெல்லும்
*
வெல்லுவது நிசமென்று கொண்டு
விரைவுடனே புதியவழி கண்டு
செல்லுகின்ற துணிவெடுத்து
செயல்புரிய முனைந்தாலே
கல்லுமுந்தன் கரங்களில்கற் கண்டு
*
கண்டுவிட்டத் துன்பங்கள் யாவும்
கரைந்தோட உழைப்பார்தம் நோவும்
பண்பட்ட மண்ணுக்குள்
பதுக்கிவிட்ட விதைமூலம்
புண்படுத்தா விலைச்சல்பூத் தூவும்
*
தூவுகின்றப் பூமணத்தில் துயரே
தொலைதூரம் ஓடிவிடும் உயரே
தாவுகின்ற ஆசைகளைத்
தாங்கிநிற்கும் நெஞ்சினிலே
கூவுமின்பக் குரலெடுத்தக் குயிலே
*(குறும்பா)
மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (15-Jun-22, 2:00 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 118

மேலே