பாவிமகன் நானே

உன்னை சமாதானப் படுத்துவதிலேயே - நான்
என் சுயத்தை இழக்கிறேன்.
உன்னை சந்தோஷப் படுத்துவதற்காகவே - நான்
என் சந்தோஷத்தை தொலைக்கிறேன்.
உன் கோபத்தை தணிப்பதற்காகவே - நான்
என் கோபத்தை விட்டுக் கொடுக்கிறேன்.

நீ
ஊடலில் கோபிக்கும்போது
உரிமையென்று நான் மகிழ்வுற்றேன் - அதுவே
தொடர்கதையானபோது
என்னை நானே நொந்து போகலுற்றேன்.
பலசமயம்
நீ குழந்தையா? கொஞ்சும் குமரியா?
புரியாது குழம்பி போகிறேன்.
ஆனால் எதுவானாலும்
இரும்பென நீ வலுவானவள் என்பது
நிரூபணமாகும் போது
நான் வியந்து போகிறேன்.

லக்ஷ்மணன் போட்ட கோட்டை - சீதை
தாண்டியதால் ராமாயணம் பிறந்தது.
இங்கு
நீங்கள் போட்ட வட்டத்திற்குள்
எங்களை கட்டுப்படுத்தி
வட்டத்தை தாண்டாமல்
பார்த்துக்கொள்ள - எங்களின்
ராமா இனமே நொந்தது.

தொட்டால் கோபம்
பட்டால் பாவம்
கொஞ்சும்போது மாமா...செல்லம்...
கோபப்பட்டால் பன்னி...எருமை..
உந்தனின் வார்த்தைஜாலங்கள்...
பாஷை பரிமாற்றங்கள் ...
புரிபடுவதே இல்லை.
எடுத்தெறிந்து பேசிவிடும்
உன்னை கடைசிவரை
முழுதாய் புரிந்து
கொள்ள முடியாமல்
வாழ்வையே தொலைத்துவிட்டு
தனிமரமாய் நிற்கும்
பாவிமகன் நானே....!

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (16-Jun-22, 10:03 am)
சேர்த்தது : ஜீவன்
Tanglish : paavimakan naaney
பார்வை : 48

மேலே