அப்பாயி

அப்பாயி
...............
கருவறைக்கு விடைகொடுத்து
கண்ணுறங்க தொட்டில் கட்ட
உன் கண்டாங்கி சேலையை
எடுத்து கொடுத்த .. .

கூலிவேலையில் உனக்கு கொடுத்த
அப்பமும் அரிசிஉருண்டையும்
அடிமடியில மறச்சு வச்சு
அந்தி சாஞ்சதும் எனக்கு கொடுத்த ,

தப்புபண்ணி மாட்டிகிட்ட
தகப்பன் என்னை அடிக்கையில,
தாயிக்கு முன்ன தாவிவந்து
உன் நெஞ்சுக்கூட்டுக்குள்ள அடைச்சுடுவா ..

வடை சுட்ட பாட்டி கதையும்,
ஆத்துல அயிரைமீன் பிடிக்கவும்,
வயல் பொந்துல நண்டு பிடிக்கவும்,
சந்தையில பேரம்பேசம் ,
கட்டை விரலுல நுங்கு குடிக்கவும்,
நீதானே கற்று கொடுத்தா..

காலம் ஓடிருச்சு ,
முகமெல்லாம் ரேகை மலர்ந்துருச்சு ,
காதுகள் தான் கண்களா மாறிடுச்சு ,
தனிமை உன்னை தத்தெடுத்துருச்சு
கோழியம் , குருவியும் தான்
பேச்சு துணையாய் மாறிடுச்சு ,
கையில் இருக்கும் குச்சி
இப்ப காலா மாறிடுச்சு ..
காலன் வருவான்னு எல்லோருரிடமும்
விண்ணப்பம் கொடுத்தாயாச்சு..

பொறுத்து கொள் அப்பாயி
நீண்ட ஆயும் கொடு என்று
வேண்டுபவர்களை விட
நல்ல ஆரோக்கியத்தை கொடு
என்பது தான் வேண்டுதலாயிற்று ..

எல்லாம் மாறும்
பாலூட்டா அன்னையே ..

#அப்பாயி
#சிபூ

எழுதியவர் : சிபூ (6-Aug-22, 1:29 pm)
பார்வை : 195

மேலே