நெட்டாற்றுச் சென்று நிரைமனையிற் கைந்நீட்டுங் கெட்டாற்று வாழ்க்கை – நாலடியார் 288
இன்னிசை வெண்பா
இட்டாற்றுப் பட்டொன் றிரந்தவர்க் காற்றாது
முட்டாற்றுப் பட்டும் முயன்றுள்ளூர் வாழ்தலின்
நெட்டாற்றுச் சென்று நிரைமனையிற் கைந்நீட்டுங்
கெட்டாற்று வாழ்க்கையே நன்று 288
- இன்மை, நாலடியார்
பொருளுரை:
சிறுமையாகிய வறுமை வழியில் அகப்பட்டுத் தம்மிடம் ஒன்று இரந்தவர்கட்கு உதவமாட்டாமல் முட்டுப்பாடான முறைமையில் இருந்துகொண்டு முயற்சியோடு உள்ளூரில் உயிர்வாழ்தலை விட தொலைவழி நடந்துபோய் அங்கங்கும் வரிசையாக உள்ளடுகளிற் கைநீட்டி இரந்துண்ணுங் கெடுவழி வாழ்க்கையே நன்றாகும்.
கருத்து:
பிறர்க்கொன்று உதவமாட்டாத வறுமை வாழ்வினும் நாடு கடந்துபோய் இரந்துண்ணும் இழிவு வாழ்வே நன்று.
விளக்கம்:
இட்டாறு - சிறுமை வழி; "இட்டிய குயின்ற துறை" என்புழிப்போல; என்றது, ஈண்டு வறுமை. வாழ்க்கை எளிதாக நடவாமையின், ‘முயன்று' என்றார்;
இரந்துண்ணும் வாழ்வில் உயிர்ப்பண்பு கிளர்ந்தெழாமையாலும், தமக்கும் பிறர்க்கும் இன்னாமை தருவதானாலும் அது 1"கெட்டாற்று வாழ்க்கை" யென்று விதந்து கூறப்பட்டமை பெரிதுங் கருத்திருத்தற்பாலது
"இன்னாமைவேண்டின் இரவெழுக"2 என்றார் பிறரும்.நன்று என்றார் வினையொழியும் வரையில் உயிரேனும் உடம்பில் நிலைத்திருக்க உதவுதலின் என்க.