தீர்வு

ஏதாவது ஒரு பிரச்சனைக்கு
இல்லையில்லை
ஒவ்வொரு பிரச்சனைக்கும்
இங்கு தீர்வு
தேவைப்படுகிறது.
என்ன பிரச்சனையென்றால்
பிரச்சனையின் பிரச்சனையை
அறிவதுதான் பிரச்சனையே...!
பிரச்சனையின் ஆணிவேரை
கண்டுபிடிப்பதே பிரச்சனை..
சரிவர புரிதல் இல்லாமல்
தீர்வை காண்பதென்பது
குட்டிச்சுவரில் முட்டிக்கொள்ளும்
கதைதான்.

தீர்வு என்பது தனித்தன்மையானது.
அது ஒவ்வொன்றும்
ஒவ்வொருவரின்
தனிப்பட்டத் தன்மையானது.
என்னை பொறுத்தவரையில்
நான் சொல்லும் தீர்வு
எனக்கு சரியானதுதான்.
நான் நீதிபதிதான்...
மனுநீதிச் சோழன்தான்...
மகாத்மா காந்திதான்....
மற்றவர் பார்வையில்
அப்படியா...?

எண்ணிப்பார்த்தால்...
எந்த பிரச்சனைக்கும்
பொதுவான தீர்வை
போனால் போகிறதென்று
ஒத்துக் கொள்ளலாம்.
தனிப்பட்ட தீர்வு...? - அது
ஆளுக்குத் தகுந்தாற்போல் மாறும்.
அதிகாரத்திற்குத் தகுந்தாற்போல்
மாற்றிக்கொள்ளும்.
மாற்றம் ஒன்றே மாறாதது.- ஆம்
மாற்றம் மாறிக்கொண்டே இருக்கும்.
இன்றைய பிரச்சனை
நாளையத் தீர்வு...
இன்றையத் தீர்வு
நாளைய பிரச்சனை.....

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (29-Oct-22, 9:19 pm)
சேர்த்தது : ஜீவன்
Tanglish : theervu
பார்வை : 203

மேலே