தேவதை

தேவதை
**********
புன்னகை ஓவியம் பூவிதழ் தீட்டிடப்
பொன்னென வேயவள் மின்னுகின்றாள் - ஒரு
கன்னலின் காவியம் கண்வழி யாளிளங்
கண்மணி யானவள் தீட்டுகிறாள் - தன்
மன்னவன் மேலொரு மாமழை யாய்விழ
மன்மதக் கார்முகி லாகுகிறாள் - நடை
அன்னமுந் தோற்றிடும் ஆரணங் கானவள்
அன்பெனும் நாட்டிய மாடுகின்றாள்
*
தண்ணெழில் பூத்திடுந் தாமரை தாங்கிய
தண்டென வேயிடை தானுடையாள் - கரு
வண்டுக ளோவென வாய்மொழி கூறிட
வைத்திடும் தேவதை வாள்விழியாம் - குலப்
பெண்களின் மானமும் பேரெழில் தேகமும்
பின்னிய தேயவள் சீதனமாம் - நற்
பண்புக ளோங்கிய பாதையி லேசெலும்
பண்டையை மாதரின் பாங்குடையாள்
*
மின்னலி னாலொரு மெல்லிடை கொண்டவள்
மின்மினி போலிமைச் சிறகடிப்பாள் - உயர்
தென்னையு மேயிள நீரினைத் தாங்குவ
தெங்கன மோவது போலியல்பாய் - இவள்
தன்னெழில் மேனியிற் தாங்குவள் மாங்கனி
தன்னுயி ரானவன் தணிவதற்கே - அந்த
இன்னமு தோடையை ஏந்திட வேவரும்
இன்னொரு ராமனுக் கேற்றவளாம்
*
துண்டுக ளாலுடைத் தூவென வேபலர்
துப்பிட வேயணி யாதவளாம் - சிறு
நண்டது வோமழை நாளினில் ஊர்வதை
நங்கையின் நாணமென் றுரைத்திடலாம் - மலர்ச்
செண்டன வேமணம் சேர்ந்திட வேயவள்
சிற்றிடை மேலெழிற் சேலைகொள்வாள் - இவள்
தண்டனை போலிதழ் தாழ்கொள லானது
தாங்கிடு மோகுயி லென்பதற்கே!
*
*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (12-Nov-22, 1:44 am)
பார்வை : 263

மேலே