கயல்கள் வந்தாடும் காவிரிப் பாவையே - கலிவிருத்தம் 1
கயல்கள் வந்தாடும் காவிரிப் பாவையே!
கலிவிருத்தம்
(மா கூவிளம் கூவிளம் கூவிளம்)
முதற்சீர் குறிலீற்று மாவாக இருக்கும்.
விருத்தம் நேரசையில் தொடங்கினால் அடிக்கு 11 எழுத்து;
நிரையில் தொடங்கினால் 12. எழுத்தெண்ணிக்கை தானே வரும்!
2, 3 சீர்களில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையில் தொடங்கும்
விளத்தின் இடத்தில் மாங்காய் வருவதும் உண்டு.
(முதலிரண்டு சீர்களுக்கிடையில் 'மாவைத் தொடர்ந்து நேர்' என்ற நேரொன்று ஆசிரியத்தளை அமையும்;
மற்ற இடங்களில் வெண்டளை அமையும்)
மயிலின் நற்றோகை மாந்தளி ரன்னவே
மயிலின் பீலி மகிழ்ந்தாட நெஞ்சமும்
மயில்கள் ஆடும் மகிழ்கரை தன்னிலே
கயல்கள் வந்தாடும் காவிரிப் பாவையே! – வ.க.கன்னியப்பன்
எடுத்துக் காட்டு:
உலகெ லாமுணர்ந் தோதற் கரியவன்
நிலவு லாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத் தாடுவான்
மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம் - சேக்கிழார்
ஓசை பெற்றுயர் பாற்கடல் உற்றொரு
பூசை முற்றவு நக்குபு புக்கென
ஆசை பற்றி அறையலுற் றேன்மற்றிக்
காசில் கொற்றத் திராமன் கதையரோ - கம்பன்
உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகி லாவிளை யாட்டுடை யாரவர்
தலைவ ரன்னவர்க் கேசரண் நாங்களே! – கம்பன்
கலிவிருத்தம் பல வகைப்படும்: இப்பாடல் ஒரு வகை; இப்பாடல் எழுத்தெண்ணி எழுத வேண்டும்.
மேயேயுள்ள இலக்கணக் குறிப்பை வாசித்து விட்டு யார் வேண்டுமானாலும், குறிப்பாக கவின் சாரலன், சக்கரை வாசன் முதலியோர் முயற்சி செய்யலாம்.