ஒரு தொட்டிலின் கதை
தொட்டில் சொல்லும் கதை.
ஆமாம். எனக்கு இப்போ ஞாபகம் வருகிறது என்னுடைய பிறந்த இடம். வேறு எங்கு? சீனாதான்.
பாவிகள். எனக்கு வயது இரண்டு நாள் தான் இருக்கும், எலும்புகளை உடைத்து என்னை ஒரு பெட்டிக்குள் போட்டு அடைத்து விட்டார்கள்.
சோகம் ஒரு பக்கம், மறுபக்கம் என் எலும்புகள் எல்லாம் வலி கொடுத்தது. நான் தூங்கி விட்டேன்.
கண் விழித்துப் பார்த்தபோது ஒரு புதிய இடத்தில் இருப்பது போல் ஒரு உணர்வு. பிறக்கும் போது நான் எப்படி இருந்தே னோ அப்படியே என்னை மீண்டும் உருவாக்கி ஒரு வெளிச்சமான இடத்தில் நிற்க வைத்திருந்தார்கள். இடம் பார்பதற்கு மிகவும் அழகாக இருந்தது. நான் அங்கு நின்றபடியே
வேடிக்கை பார்த்துக் கொண்டே மிகவும் சந்தோஷத்துடன் இருந்தேன்.
ஒரு நாள் இளம் பெண் ஒருத்தி தூரத்தில் நின்றபடியே என்னைக் காட்டியபடி எனது புதிய உரிமையாளருடன் பேசிக் கொண்டு இருந்தாள். பேசிவிட்டு அவள் போய்விட்டாள். எனக்கு இரவெல்லாம் ஒரே யோசனை. தூக்கமே வரவில்லை.
காலையில் அங்கு வந்த இருவர் எனது எலும்புகளை மீண்டும் உடைத்தார்கள். பின்பு என்னை ஒரு வாகனத்தில் ஏற்றி எடுத்து சென்றார்கள். எனக்கோ ஒன்றும் புரியவில்லை.
யோசித்தபடியே இருந்தேன். தீடீரென அவர்கள் ஒரு வீட்டின் முன் வாகனத்தை நிறுத்தினார்கள். ஒரு இளம் பெண் அங்கு நின்று கொண்டு இருந்தாள். உற்றுப் பார்த்தேன். அவளே தான்.
எனக்கு உயிர் மீண்டும் வந்த மாதிரி இருந்தது. அவள் என்னை உள்ளே எடுத்துச் சென்றாள். என் மீது பரிதாபப் பட்டாளோ என்னவோ என்னை பெட்டிக்குள் அடைத்து வைக்காமல் வெளியே எடுத்து மீண்டும் என்னை நான் ஆக்கி ஒரு நல்ல இடத்தில் நிற்பாட்டிவிட்டு அவள் போய்விட்டாள். இடம் பார்ப்பதற்கு நன்றாகவே இருந்தது. ஆனால் இதற்கு முன் நான் நின்ற இடம் போல் இல்லை. அமைதியாக இருப்பது போல் என் மனதில் பட்டது.
எனது கணிப்பு எவ்வளவு தப்பு என சில நிமிடங்களில் தெரியவந்தது. நான் நின்ற இடத்தின் மேலிருந்து கீர்.. கீரென ஒரு சத்தம். அந்தப் பெண் அவசரம் அவசரமாக படி ஏறி போனாள். கொஞ்ச நேரம் சென்று கீழே அவள் தன் இரண்டு கைகளாலும் ஏதோ ஒன்றை துணிகளில் சுற்றி எடுத்து வருவதை வியப்போடு பார்த்து நின்று கொண்டு இருந்தேன். பின் என் அருகே வந்து அவள் தூக்கி வந்த துணிப் பொட்டலத்தை என் உடலில் கட்டி தொங்க விடப்பட்டிருந்ந ஒரு துணியில் உள்ளே மிகவும் பத்திரமாக வைத்த பின், அழகிய குரலில் மெதுவாகப் பாடியபடியே துணியை ஆட்டத் தொடங்கினாள். எனக்கு அவளுடைய பாடலை கேட்க தூக்கம் வந்தது, தூங்கி விட்டேன்.
ஒரே இடம் ஒரே காட்சி . அன்றாடம் இதை அனுபவிக்க வேண்டும் என்பது என்னுடைய விதி போலும். எனக்கும் இரண்டு வயதாகிவிட்டது. ஒரு நாள் அந்தப் பெண் என் எலும்புகளை மீண்டும் உடைத்து வீட்டின் வெளிப்புறத்தில் போட்டு விட்டாள். எனக்கோ மிகவும் கவலையாகப் போய்விட்டது. எவ்வளவு காலம் மழை வெயில் என கேட்பாரற்று இருந்தேன் எனக்கு ஞாபகம் இல்லை. ஒரு நாள் யாரோ ஒருவர், பார்ப்பதற்கு வயது வந்தவர் போல் தெரிந்தது, வீட்டுக்கு வந்திருந்தார். வந்தவர் அந்த இளம் பெண்ணுடன் அன்பாக பேசியதையும் அவளும் அவரிடம் மிகவும்
மரியாதையுடன் நடந்ததை எல்லாம் பார்த்தால் அவர் அவளுடைய அப்பா என எண்ணினேன். இரண்டு நாட்கள் கழித்து அவர் என்னையும் தன்னுடன் எடுத்துக் கொண்டு கிளம்பும் போது அவள் திடிரென குனிந்து அந்த முதியவரின் பாதங்களை தொட்டு தன் கண்களில் ஒத்தி வணங்கினாள். அவர்கள் இருவரின் கண்களும் கசிந்திருப்பதை அவதானித்தேன்.
ஆக்கம்
சண்டியூர் பாலன்.