நீ இருக்க வேண்டுமடி

நீ இருக்க வேண்டுமடி...!
---------------

ஆறிரண்டு ஆண்டுக்கு
ஒருமுறை
பூத்துக் குலுங்கிடும்
நீலக் குறிஞ்சியாய்
நீ இருக்க வேண்டாம்...
தினம் தினம் பூத்து
மனமெங்கும் மணம் பரப்பும்
மல்லிகையாய் நீயும்
பூத்திருக்க வேண்டுமடி.
காவியத்தில் காட்சியாய்
காதலுக்கு சாட்சியாய்
தூது போகும் அன்னமாய்
நீ இருக்க வேண்டாம்.
கையிலிருக்கும் நெல்மணியை
கொத்தி தின்று நாளுமென்
காதில்வந்து கிசுகிசுக்கும்
சிட்டுக்குருவியாய் நீயும்
சிறகடிக்க வேண்டுமடி.
மழைமேகம் கண்டவுடன்
தொகை விரித்து ஆடிடும்
வண்ண மயிலாய்
நீ இருக்க வேண்டாம்.
மனதுக்கு இதமாய்
உயிர் உருகும் காதல்
கீதம் பாடிடும்
கருங்குயிலாய் நீயும்
பாட்டிசைக்க வேண்டுமடி.
தொட முடியா
வான் வெளியில்
குளிர் நிலவாய்
நீ காய்ந்து
தேயவும் வேண்டாம்.
தொட்டு விடும் தூரத்தில்
சின்னஞ்சிறு வீடதில்
அகல்விளக்காய் நீயும்
சுடர்விட்டால் போதுமடி.
உலகத்தின் பந்தங்கள்
உறவாடும் சொந்தங்களின்
ஆதரவாய்
நீ இருக்க வேண்டாம்.
என் உடல் பொருள் ஆவியின்
ஆதாரச் சுருதியாய்
வாழ்க்கை விருட்சத்தின்
ஆணிவேராய் நீயும்
ஆடாமல் இருக்க வேண்டுமடி...!

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (8-Jun-23, 9:09 am)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 120

மேலே