முதலிரவு முழுநிரல் - பாகம் 2

முல்லை நிலத்திலே பெரும்பொழுது கார்காலம்
இல்லை அத்தனையும் ஓரிரவில் கழியுமென்று
மோகத்தின் முக்திக்கு வழிகாண எத்தனித்து
தாகத்தில் சித்திக்கும் தத்துவங்கள் கற்பித்து

முத்தமிட்டு துவக்கினேன் காமனின் கணக்கை
மெல்லமெல்ல நீக்கினாள் மங்கைதன் பிணக்கை
உச்சிவந்த பால்நிலவும் வெட்கமுற்று ஒளிந்துவிட
பாதைதேடி வந்ததென்றல் பாதையின்றி ஓய்ந்துவிட

வலிக்கவலிக்க விரகம் தணிக்க வெட்கத்தை
விலக்கவிலக்க நித்தம் நடைபயின்று நதிபலவும்
கலக்கக்கலக்க ஆர்ப்பரிக்கும் கடல்போல ஓயாமல்
சலிக்கச்சலிக்க கூடிக் களிக்கும் சுகம்தொடர

நித்தம் புதுசந்தம் தரும் கவிதைஎன
முத்தம் பலதந்தும் சித்தம் தடுமாற
உன் மத்தம் தலைக்கேறி பருவத்தின் வீரியம்
மொத்தம் வியர்வையில் கரைந்து நீராடி

அண்டத்து மலரெலாம் ஓரிடம் திரண்டிருக்க
வண்டொன்று தேன்குடிக்க அவ்வழியே வந்ததுபோல்
திண்டாடிப் போனேன் இன்பத்தின் உச்சம்கண்டு
கொண்டாடி களிப்பதற்கு இப்பிறப்பு போதுமோ??

பளிங்கு மேனியின் பழுதற்ற அழகெல்லாம்
தெளிநீர் சுனையாக்கி விழிபருக வழிதந்தாள்
களித்திருக்கும் கண்களிலே காமம்சிந்த மயக்கம்
அளித்தது இன்னதென்று இனங்காண மாட்டாமல்

அண்டத்தி னுள்ளேபல அதிசயம் செய்தவன்சிறு
பிண்டத்தின் உள்ளேயும் அற்புதங்கள் செய்துவைத்தான்
படைத்தவன் திறன்எண்ணி எளியேன் மலைதேன்!!
பள்ளியறை மத்தியிலே பரமனை நினைத்தேன் !!

ஊனுடம்பு செயல்மறந்து உற்றதேகம் பற்றுமறந்த
படைப்புக் கருவியின் பணிநிறுத்தம் கண்டதும்
பதறினான் பரமன் தொடங்கிய கலவியின்
இடைபட்ட தடைக்கும் விடுபட்ட கதைக்கும்

கடைப்பட்ட பிறவிநான் விடைதேடி சிந்திக்க
என்தொழில் படுக்கும் பெண்குலம் பழிக்கும்
சிந்தனை பிறகுசெய் மாண்புற்ற பெண்குலத்தை
வந்தனை நிதஞ்செய்!! போதையல்ல பெண்மை!!

நீகொண்ட உணர்வுகள் அனைத்தும் கொடுத்து
உன்னைப் போலவே அவளையும் படைத்தேன்
பெரியதோர் இரகசியம் இயற்கையின் இயக்கம்
அரியதோர் பிறப்கொக்கும் எல்லா உயிர்க்கும்

அழகில் மயக்கம் மானுடர் வழக்கம்
அதையும் கடந்தே இயல்பாய் விளக்கம்
பழகப் பழகப் பாலும் புளிக்கும்
அதுபோல் காமமும் ஒருநாள் சலிக்குமென

காதோடு தத்துவங்கள் கேள்என்று சிலசொல்லி
தோதாக சிந்திக்க நியாயங்கள் பலசொல்லி
எனையறம் காக்கும் வழியில் விடுத்து
மனையற சுகமும் பரிசென கொடுத்து

தாமதம் இன்றி சாகசம் தொடங்க
காமனின் தயவிலே விரசங்கள் அடங்க
காதலர் உறவுக்கு அர்த்தங்கள் விளங்க
நல்வாழ்த்து சொல்லி நகர்ந்தான் இறைவன்!!

எழுதியவர் : கார்த்தி கண்ணதாசன் (8-Jun-23, 12:21 pm)
பார்வை : 77

மேலே