ஸ்ரீ சாயிபாபா தமிழ் மாலை 7
ஸ்ரீ சாயிபாபா தமிழ் மாலைத் தொகுப்பை இயற்றியவர் எங்கள் ஊரைச் சேர்ந்த ச.சோமசுந்தரம் என்ற சனகை.கவிக்குஞ்சரம் ஆவார்.
ச.சோமசுந்தரம், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சோழவந்தான் என்ற ஊரில் தெற்கு ரத வீதியில் வாழ்ந்து வந்த சண்முகம் பிள்ளை – தெய்வானை அம்மையாருக்கு மூத்த மகனாகப் பிறந்தார். இவர் தன் ஐந்தாம் வயதில் தெற்கு ரத வீதியின் மேற்குப் பகுதியில் அமைந்த சிதம்பர விநாயகர் கோயிலின் திண்ணைப் பள்ளியில் ஆசிரியர் அழகர்சாமி தேசிகரிடம் ஆரம்பக் கல்வி கற்றார்.
தன் 12 ஆம் வ்யதில் இவர் தன் மாமனாகிய பெரும்புலவர், இலக்கணக் கடல் அரசஞ் சண்முகனாரிடம் இலக்கண, இலக்கியங்களைக் கற்றார். தன் 14 வயதிலேயே பாடல்கள் இயற்றும் திறமை வாய்க்கப் பெற்றார். இவரது பாடல்களைக் கேட்டு மகிழ்ந்த அரசஞ் சண்முகனாரும், மற்ற புலவர்களும் இவருக்கு ‘கவிக்குஞ்சரம்’ என்று பட்டம் ஈந்தனர். இவர் பின்னாளில் கவிக்குஞ்சரம் பிள்ளை என்றழைக்கப் பட்டார்.
இவர் தன் வாழ்நாளில் சீரடி சாய்பாபா அவர்களின் மகிமையை அறிந்து அவரைப் பற்றி பக்திப் பாடல்களை காப்புச் செய்யுள் நீங்கலாக 28 வெண்பாக்களில் எழுதியிருக்கிறார்.
என் தகப்பனார் கைப்பிரதியாக இருந்த இந்த ‘ஸ்ரீ சாய்பாபா தமிழ் மாலை’யை என் இளைய தம்பி V.K..வெங்கடசுப்ரமணியனின் மாமனார் சின்னாளபட்டியிலிருக்கும் திரு.T.S. இரத்னம் முதலியார் அவர்கள் மூலம் அதே ஊரிலிருக்கும் புலவர் திரு. துரை. தில்லான் உதவியுடன் பதிப்பித்தார்கள்.
'ஸ்ரீ சாயிபாபா தமிழ் மாலை' யிலிருந்து 25 - 28 பாடல்களைத் தருகிறேன்.
உழைப்பவர்க்கு உதவுபவரே
இலங்கும் புவியத்தில் ஏழைமக்கள் நித்தம்
விலங்காய் உழைத்து மெலிந்து – கலங்குதலும்
ஞாயமா உன்னையிங்கு நம்பும் பலனிதுவா
சாயிபா பாவே சரண். 25
ஈகையும் செல்வமும் வழங்குபவரே
வசையில்லா வாழ்வில்யான் வாழவே வேண்டும்
அசையா அறிவுந்தான் வேண்டும் – இசையொடுநான்
ஈயும் படிக்கிங் கிருநிதியும் வேண்டுமே
சாயிபா பாவே சரண். 26
நிழல்போல் தொடர்ந்து காப்பவரே
அழலின் மெழுகெனவே அல்லலுறும் என்னை
நிழல்போல நீகாத்து நிற்பாய் – செழுமைதரப்
பாயும் நதிசூழ் பழனத்தின் சீரடிவாழ்
சாயிபா பாவே சரண். 27
எல்லாரையும் அணைத்துக் காப்பவரே
இளங்குழவி நெஞ்சும் இனியவரும் கண்ணும்
கலங்குவரைக் கண்டணைக்கும் கையும் – விளங்குவஜ்ர
காயமொடு நற்கதியைக் காட்டு பதமுமுள
சாயிபா பாவே சரண். 28
முடிவாக எனது வெண்பா:
உயிர்களிடம் நீயன்பு வைத்திடு
அன்புள்ளம் கொண்டவர்க்கே ஆன்ம பலம்மிக
என்றுமே உண்டாம்; உயிர்களிடம் – என்னாளும்
நீயன்பு வைத்திடென்று நித்தமும் சொல்கின்ற
சாயிபா பாவே சரண்!
(முற்றும்)