அவரவர் வாழ்க்கை

அவரவர் வாழ்க்கை

கார் ஊர் எல்லையின் முக்கு திரும்பும்போதே நினைத்தாள், தங்கச்சியை பார்த்து விட்டு போகலாமா? என்று. சரி வந்த வேலை முடியட்டும், அப்புறம் பார்த்து கொள்ளலாம், முடிவு செய்தவள், காரை சற்று வேகமாக்கினாள்.
இவள் போய் சேர்ந்த பொழுது, முகாமில் இவளுக்காகத்தான் காத்திருக்கிறார்கள் என்பதை உணர்ந்தவள் சற்று கவலைப்பட்டாள். காரை அவளே ஓட்டி வந்து நிறுத்தியதும் காரில் வந்தவர்கள் வியப்பாய் பார்த்தனர்.
வியப்பை வெளிக்காட்டாமல் “மேடம் உங்களுக்காகத்தான் வெயிட் பண்ணிகிட்டிருக் கோம்”.
சாரி “ட்ராபிக்ல” மாட்டிகிட்டேன். வரதுக்கு லேட்டாயிடுச்சு, நீங்க ஆரம்பிச்சிடுங்க.
இவளை எதிர்பார்த்து எதிரில் போடப்பட்டிருந்த நாற்காலிகளில் உட்கார்ந்திருந்த வர்களின் முகங்களை பார்த்தாள். “அப்பா” இப்பவாவது வந்து சேர்ந்தாளே, இவளுக்கென்ன துரைசாணியாட்டமா கார்ல வந்திறங்கறா, இந்த கோபம், மற்றும் சலிப்புத்தான் தென்பட்டது போல் இருந்தது. உழைத்து களைத்து போன முகங்கள், அரசு கொடுக்கப்போகும் ஒரு தொகைக்காக இப்படி வெயிலில் காத்திருக்கிறார்கள். இவள் வந்து, என்னென்ன சொல்லப்போகிறாளோ, அதற்கு பின் மற்றவர்கள் இவர்களுக்கு அதை விளக்கி, ம்..எப்ப முடியறது? இந்த எண்ணம் அங்கிருந்த பெரும்பான்மையினரிடம் இருந்தது. அதிலும் குறிப்பாக பெண்களின் கண்களில் நன்றாக தெரிந்தது.
ஆயிரமோ, இரண்டாயிரமோ அரசு கொடுக்கிறது, ஆனால் அதை வாங்குவதற்கு அரசு ஒரு வரைமுறை வைத்து கொடுக்கிறது, ஆனால் அந்த வரைமுறை இவர்களுக்கு ஒத்து வரக்கூடியதாக இல்லாததால் பாதி பேர் நம்பிக்கையில்லாமல் இருந்தார்கள். அதற்குத்தான் அரசு அதிகாரியான இவளை இவர்களிடம் பேசுவதற்கு வர சொல்லியிருந்தார்கள். இவள் வருவதற்கு தாமதமாகியதால் காத்திருந்தவர்களுக்கு கோபமும் சிடுசிடுப்பும் ஏற்படுவது இயல்புதானே..!
காத்திருக்கும் அரசு ஊழியர்களுக்கு பிரச்சினையில்லை, அவர்களுக்கு அன்றைய ஊதியம் உண்டு, ஆனால் காத்திருந்தவர்களுக்கு? இந்த பணத்துக்கு ஆசைப்பட்டு ஒரு நாள் கூலியை விட்டு கொடுத்து வந்து உட்கார்ந்திருந்தவர்கள் உண்டு, தோட்டம், காட்டு வேலையை விட்டு வந்தவர்களும் உண்டு. கம்பெனிகளில் தொழிலாளியாக இருப்பவர்களும், இன்றைக்கு விடுமுறை, அப்படி இல்லையென்றால் அனுமதி கேட்டு வந்து உட்கார்ந்திருக்கலாம்.
இவள் மெல்ல கணைத்து அரசு யாருக்கு இந்த தொகை கொடுக்க சொல்லியிருக்கிறது என்பதை விளக்கமாக சொல்ல ஆரம்பித்தாள். அவள் சொல்லி கொண்டிருக்கும் பொழுதே தள்ளி நின்று கொண்டிருந்த ஒரு சிலர் அவளிடம் வாதாடுவது போல..அதெப்படிங்க, கொடுக்கறதுன்னு முடிவு பண்ணிட்டா எல்லாத்துக்கும் கொடுக்கணும், இப்ப ரூல்ஸ் எல்லாம் போட்டுட்டு இருந்தா…?
அவள் அவர்களை கவனித்தாள். காத்திருந்த கூட்டத்துடன் தாங்கள் உட்கார்ந்திருந் தால் ஊர்க்காரர்கள் என்ன நினைப்பார்கள்? இவன் வாடகைக்கே நாலு வூடு வச்சிருக்கான், இவனுக்கு மூணு ஏக்கரா தோட்டமே இருக்குது, இந்த பணம் வந்து தான்..! இப்படி உட்கார்ந்திருப்பவர்கள் நினைக்கலாம், என்னும் தயக்கத்திலேயே அப்படி ஒதுங்கி நிற்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டாள். அதுவுமில்லாமல் அப்படி தன்மானம் பார்த்து நிற்பவர்களில் கொஞ்சம் பேருக்கு மட்டுமே இந்த உதவி தொகை பெரும் பயனாக இருக்கும். மற்றவர்கள் கிடைத்தால் லாபம், அரசாங்கம் கொடுக்கட்டுமே, என்னும் நினைப்பில் இருப்பவர்கள். வசதியாக இருப்பவர்களாகவும் தெரிந்தது. இப்பொழுது அவர்கள்தான் இவளிடம் வம்படியாக பேச ஆரம்பித்திருந்தார்கள்.
அவள் அவர்களை நேரடியாக கவனிக்காமல் எல்லோரையும் பார்ப்பது போல அரசாங்கம் என்ன சொல்கிறதோ அதை நாங்க செய்யறது மட்டும்தான் எங்க வேலை, வாங்க வரிசையா வந்து நாங்க சொன்ன ஆதார்கார்டு, ஸ்மார்ட் கார்டு எல்லாத்தையும் காண்பிச்சு ரிஜிஸ்டர் பண்ணிட்டு போங்க.
சட்டென பேச்சை அத்தோடு முடித்து விட்டு அங்கிருந்து நகர்ந்து ஒதுக்குபுறமாய் ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டாள். அதை ஒருவன் வேகமாக செல்போனில் படம் எடுப்பதையும் கவனித்தாள். “நாளையே அதை முகநூல், யூ டியூப், எதாவது ஒன்றில் போட்டு “அரசு ஊழியர்களின் லட்சணத்தை பாருங்கள்” என்று விளம்பரப்படுத்துவான். இவர்களின் கோபம் அரசாங்க ஊழியர்களிடமா? அல்லது அரசை ஆளும் கட்சிகள் மீதா? பொது மக்களிடம் அடித்து பிடுங்கும் லஞ்சம், அரசு ஊழியர்களை பற்றிய கோபமாக இவர்கள் மனதுக்குள் பதிந்து போயிருக்கிறது, தன்னைப்போல சமபளத்தில் மட்டும் பணி செய்து கொண்டிருப்பவர்களிடம் கூட அது கோபமாக வெளிப்படுகிறது இந்த மக்களிடம் என்பது புரியத்தான் செய்கிறது. ஆனால்..!
அவர்களுக்கோ மற்றவர்களுக்கோ இவளை பற்றி என்ன தெரியும்? இது வரை ஆறு இடங்களுக்கு போய் வந்து விட்டாள். காலையில் ஆறு மணிக்கு வீட்டில் காப்பியை குடித்து விட்டு கிளம்பியவள் இந்த முகாம் நடக்கும் ஒவ்வொரு இடங்களுக்கும் சென்று அவர்களிடம் பேசி ஆரம்பித்து வைத்து விட்டு களைப்பாய் இருப்பவள். பெண்களுக்கே உரிய சில பிரச்சினைகளை சுமந்தபடியே இந்த வேலையை செய்து கொண்டிருக்கிறாள், அவளுக்கும் களைப்பு வரும், கொஞ்சம் உட்காரலாம் என்னும் எண்ணம் வரும்.
இது பற்றி எந்த சிந்தனையில்லாமல் இதுதான் “சமுதாய செயல்பாடுகள்” என்று கிளம்பி, இப்படி செல்போனும் கையுமாக அலைந்து கொண்டு இருப்பவர்களை பற்றி என்ன சொல்ல?
களைப்பாய் வந்தது, காரை அவளே ஒட்டி வந்தது. கார் டிரைவரும் மனிதர்கள் தானே, காலை முதல் இவளுக்காக காரை ஓட்டி வந்தவர் ஒரு கட்டத்தில் மயக்கம் வருவதாக சொல்ல, இவளே அவரை ஹாஸ்பிடலுக்கு அனுப்பி விட்டு வந்ததை பற்றி யாருக்கு தெரியும்? இன்னும் இந்த முகாம் எல்லாம் மாலை வரை, எந்த சிக்கலில்லாமல் நல்லபடியாக முடித்து மறு நாள் இவளுக்கு மேல் உள்ள அதிகாரிகளிடம் இதை ஒப்படைப்பது வரை இவள் பொறுப்புத்தான். இதில் எத்தனை அரசியல் குறுக்கீடுகள், அரசியல்வாதிகள் ஒருவரை ஒருவர் எதிர்ப்பதற்கு இவளை போன்றவர்களை நிற்கவைத்து கேள்வி கேட்டு சங்கடப்படுத்துவார்கள்.
அரைமணி நேரம் களைப்பாய் உட்கார்ந்திருந்தவள் இந்த முகாமை மேற்பார்வை பார்த்தவரிட்ம சொல்லி விட்டு மீண்டும் வருவதாக சொல்லி கிளம்பினாள்.
கார் ஹாரன் சத்தம் கேட்டு கதவை திறந்து பார்த்தவள் “ஹை அக்கா” வா வா இறங்கி அவளை அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்றாள்.
துணிமணிகள் தாறுமாறாய் கிடக்க, அங்கங்கு புத்தகங்கள் சிதறி கிடந்தது. அக்கா இதை கவனிப்பதை கண்டவள் இரண்டு வாலுங்களும் சொன்னா கேக்கறதில்லை, பாரு படிக்கறேன்னு சொல்லி இப்படி பிரிச்சி எறிஞ்சிட்டு போயிருக்கறதை, எடுத்து வைக்கலாமுன்னா, அவங்களுக்கு மதியம் சாப்பாடு ரெடி பண்ணி ஸ்கூல்ல கொண்டு போய் கொடுக்கணும், அதனால இதிய எல்லாம் அப்புறம் எடுத்து வச்சுக்கலாமுன்னு நினைச்சு விட்டுட்டேன்.
காப்பி போட்டு கொண்டு வர்றேன், குடிச்சுட்டு அப்படியே உக்காரு, இரண்டு மூன்று நிமிடத்தில் காப்பி போட்டு கொண்டுவந்தவள் இவள் கையில் கொடுத்து அப்படியே சோபாவில் உட்கார வைத்தாள்.
“பாத்ரூம்” சொன்னவளை மெல்ல கூட்டி கொண்டு போய் விட்டு, காத்திருந்து மீண்டும் கூட்டி வந்து உட்காரவைத்தவள், குடிச்சிட்டு அப்படியே படுத்துக்கோ, இதா பத்து நிமிசத்துல சாப்பாடு ரெடியாயிடும்.
அதுக்கெல்லாம் நேரமில்லை, முணங்கினாலும், காப்பியை குடித்தவள், உடல் அசதியினால் அப்படியே சோபாவில் படுத்து விட்டாள். அருகில் வந்த தங்கை அவள் தலையை கோதி அப்படியே கண்ணசரு, இதா வந்துடறேன், சமையலறைக்குள் வேகமாக சென்றாள்.
ஒரு மணி நேரம் கழிந்திருந்தது, அக்காவுக்கு சாப்பாடு பரிமாறி அவள் சாப்பிட்டு முடித்த பின், வேகமாய் இரண்டு டிபன் பாக்சில் சாப்பாட்டை போட்டு மூடி கூடையில் வைத்து கொண்டாள்.
சரி வா உன்னைய ஸ்கூல்ல டிராப் பண்ணிட்டு போறேன், இவள் சொல்ல, வேணாம் நீ கவர்ன்மெண்டு டுட்டியில வந்திருக்க, நாளைக்கு ஸ்கூல்கிட்ட உன் கார் நின்னா நாளைக்கு உன்னிய ஏதாச்சும் சொல்லுவாங்க. நீ மெதுவா கிளம்பு, வீட்டை பூட்டி சாவிய இதா இந்த இடத்துல வச்சுட்டு போ, கிளம்பியவளை, வேண்டாம் வேண்டாம், நீயே பூட்டிக்கோ, நானும் கிளம்பறேன், குழந்தைகளுக்கு பெரியம்மா கொடுத்தாங்கன்னு ஏதாவது வாங்கி கொடு, பர்சில் இருந்து பணம் எடுத்து கொடுத்தாள். வேணாம், வேணாம், மறுத்தவளிடம் பிடிவாதமாய் கையில் திணித்து விட்டு வெளியில் வந்து காரை எடுத்தாள்.
தங்கை வேகு வேகு என்று அந்த வெயிலில் குழந்தைகளுக்காக சாப்பாட்டை எடுத்து செல்வதை பார்த்தவள் மனம் சுருங்க, அடுத்த ஊரை நோக்கி செல்ல ஆரம்பித்தாள்.
அலுவலகம் சென்று எல்லா வேலைகளும் முடித்து வீடு திரும்பும் பொழுது இரவு ஒன்பதுக்கு மேல் ஆகியிருந்தது. காம்பவுண்ட் கேட்டை திறந்து விட்ட கேட் கீப்பரிடம் தலையை வெளியில் நீட்டி ஐயா வந்துட்டாரா?
இல்லைங்கம்மா ஓடி வந்து சொன்னவர், கார் செல்ல வழி விட்டு ஒதுங்கி நின்று கொண்டார். உள்ளே சமையல்காரர் செய்து வைத்திருந்ததை டேபிளில் கொண்டு வந்து வைத்த பணி பெண்மனியிடம் நீ போ, நானே பரிமாறிக்கறேன் என்று சொல்லி அனுப்பி விட்டாள். சாப்பிட மனசு இல்லாமல் கண்ணை மூடியபடி அப்படியே உட்கார்ந்திருந்தாள். வெளியே ஹாரன் சத்தம், வந்துவிட்டார் என்று மனம் நினைத்தாலும் உடல் அசதி எழ முடியாமல் அப்படியே உட்கார சொன்னது.
சாரி டியர், எனக்காக சாப்பிடாம உக்காந்திருக்கிருக்கியா? அருகில் வந்து தலையில் முத்தமிட்டபடி இன்னைக்கு வெளியில கொஞ்சம் வேலையிருந்தது அதை முடிச்சிட்டு அங்கேயே சாப்பிட்டுட்டேன். நீ மெல்ல சாப்பிட்டுட்டு வா, அறைக்கு சென்று விட்டார்.
அவருடனே அந்த பழ வாசனையும் சென்றது அவள் நாசிக்கு உணர்த்தியது.
இனி அவள் சாப்பிடவேண்டுமா? நினைத்தாலும் அவள் அந்த வேலையை முடித்தால்தான் பணி பெண்மனி அந்த இடத்தை சுத்தம் செய்து வைத்து விட்டு அதன் பின் அவள் சாப்பிட வேண்டும். இவளுக்காக, வீட்டில் பணிபுரிந்த மூன்று பேரும் சாப்பிடாமல் காத்திருப்பார்கள். எடுத்து போட்டு சாப்பிட்டாள்.
அறைக்குள் நுழையும்போது கணவன் பாதி தூக்கத்திற்கு சென்றிருந்தார். அலுப்பாய் அவளும் படுத்து கொண்டாலும் தூக்கம் உடனே வரவில்லை. அவள் சிந்தனை தங்கையிடம் சென்றிருந்தது.
இரண்டு குழந்தைகளை வைத்து போராடி கொண்டிருக்கிறாள். தனக்கும் அவளுக்கும் இருந்த வித்தியாசம் இப்பொழுது அவளுக்கு புரிந்தது. தங்கையின் கணவன்
இவளை பெண் பார்த்து பேசி முடிக்க வந்தவர்கள்தான். இவள் அப்பொழுதுதான், தான் பார்த்த வேலையின் மேல் அதிகாரிக்கான தேர்வில் வெற்றி பெற்று பதவியை எதிர்பார்த்து காத்திருந்தாள். பெண் பேசி முடிக்க வந்தவனுக்கு தனியார் நிறுவனத்தில் அலுவலக கணக்காளர் வேலை.
இவள் அவனிடமே தனக்கும் அவனுக்கும் உள்ள இடைவெளியை எடுத்து சொன்னாள். எதிர்காலத்தில் தேவையற்ற சிக்கல்கள் வரும் என்று மனம் புண்படாதவாறு சொன்னாள். அவர்கள் வீட்டார்கள் சொந்தம் விடக்கூடாதென்று அப்பொழுது தான் டிகிரி முடித்து வீட்டில் இருந்த தங்கையை கேட்டார்கள். அவளும் சம்மதம் சொல்ல, முதலில் தங்கைக்கு கல்யாணம் நடந்தது.
அதற்கே உறவுகளிடையே கசமுச என்று புகைச்சல்.இவளுக்கு என்ன? கண்ணும் காதும் வைத்து பேச்சு, கண்டு கொள்ளவில்லை. அதன் பின் இவளுக்கு வந்த வரன் தட்டி போக வருடங்கள் ஓடுவதை பார்த்த பெற்றோர்கள், இவளிடம் கோபித்து கொண்டனர். அதற்குள் இவள் அரசின் முதல் நிலை அதிகாரியாகவே ஆகியிருந்தாள்.
அதற்கு பின் சம அளவு அதிகாரியான இவரது வரன் வர பெற்றோர்களுக்கு பெரும் கவலை விட்டது.
எல்லாமே சரியாகத்தான் போய் கொண்டிருக்கிறது என்றாலும் அவள் மனதுக்குள் நான்கு வருடங்கள் ஓடியிருந்தது ஞாபகம் வந்தது, இருவரும் வாரத்தில் ஒரு நாள் ஒன்றாக, பகல் பொழுது வீட்டில் இருந்ததாக தெரியவில்லை, இருவருக்கும் ஏதோவொரு காரணத்துக்காக வெளி வேலைகளை செய்வதற்கு அரசாங்கம் விரட்டி கொண்டே இருந்தது. பெரும்பாலும் இவர்கள் சந்தித்து கொள்வதே இரவு ஒன்பதுக்கு மேல் ஆகிவிடும். அதன் பின் களைப்பு..உறக்கம்.
ஒரு வேளை தங்கையின் இடத்தில் தான் இருந்திருந்தால் அவளை போல தன்னால் இருக்கமுடியுமா?
சாத்தியமில்லாததாகத்தான் பட்டது. அவரவர்களுக்கு அமைத்து கொண்ட, அல்லது அமைந்து கொண்ட வாழ்க்கை. தனக்கும் இது சரியாக போவதாக நினைத்து கொள்ளத்தான் வேண்டும்… வேறு வழியில்லை, இப்படி அவளது எண்ணங்கள் ஓடி கொண்டிருக்க நித்திரை அவளை அணைத்து கொண்டது.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (27-Jul-23, 9:49 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : avaravar vaazhkkai
பார்வை : 216

மேலே