3 மினர்வா

Lie through your teeth and call it a novel. All will be well.

James Paddock.

அன்புள்ள ஸ்பரி…

ஒரு செய்தியில் அல்லது நமக்கு தேவையான விவரத்தில் நாம் உண்மையான கவனம் கொண்டு புதுப்புது தகவல்களை திரட்டும்போது நம்மெதிரில் மலையாய் குவியும் அத்தனை விவரங்களும் கற்க வேண்டிய அவசியம் உள்ளதா என நீங்கள் கேட்டதை நான் சில நிமிடங்கள் முதல் சில மணி நேரங்கள் வரையும் சிந்தித்து பார்த்தேன்.

கற்க வேண்டிய அவசியம் என்பது ஒரு நிர்பந்தமான செயலா அல்லது இயல்பான ஆர்வமா என்பதை நான் ஒரு பெண்ணாக இருந்து யோசிக்க யோசிக்க அது கால நேரங்கள் என்னும் அளவற்று செல்கிறது. ஒரு ஆணாக இருப்பின் இன்னும் வேறு அளவுகோள்கள் தேவைப்படலாம்.

நாம் ஒவ்வொரு தினத்தையும் ஏதோ ஒரு தகவலை முன்னிறுத்தி அந்த நாளை அறிவு சார்ந்து அல்லது உணர்வு சார்ந்து கற்பதில்தான் செலவு செய்கிறோம் என்று திடமாக நம்புகிறேன் ஸ்பரி…

தொடர்ந்து தகவல்களை நம் மீது எய்து கொண்டே இருப்பவர்கள் நமக்கு பிடித்த பிடிக்காத கட்டுக்கதைகளையும் சேர்த்தே நமக்கு அனுப்பி வைக்கிறார்கள்.

ஒரே திரைப்படத்தை அல்லது நாவலை விமரிசிக்கும்போது, அதை விமரிசிக்கும் எல்லா நபர்களும் ஒன்று போலவே நம் முன் வைக்கிறார்களா? அது நிச்சயமாக இல்லை. ஒன்றுக்கு ஆதரவாகவோ அல்லது எதிர்நிலையில் இருந்தோ எத்தனை எத்தனையோ சிந்தனைகள் மலர்கின்றன.

இத்தனை தகவல்கள் கிடைத்தும் நாம் திருப்தி கொள்வது இல்லையே என்று நீங்கள் கேட்கலாம்.

அதன் கூடவே… ஸ்பரி,

நாம் தகவல்களில் எப்போதும் தடுமாறிக்கொண்டே இருக்கிறோம் எந்த தகவலும் ஒன்றையொன்று விஞ்சி கடந்து செல்கிறது.

முகலாய மன்னர் அக்பர் மீது நான் பள்ளியில் படித்தது வேறு. இன்று அறிந்துகொள்வது வேறு.

தகவல்கள் என்பது நம்மை நாம் அறியாமல் நயவஞ்சகர்களாக அல்லது காரியவாதிகளாக மாற்றி வருகின்றன.

ஸ்பரி, நீங்கள் இப்படி எல்லாம் எனக்கு சொல்ல நினைக்கலாம் என்பதாலேயே நான் யோசித்து இதையெல்லாம் உங்களுக்கு எழுதுகிறேன்.

ஆயினும் நான் எனக்குரிய தகவல்கள் எங்கேனும் சிக்கி இருக்குமா அல்லது மறைத்து வைக்கப்பட்டு இருக்குமா அல்லது பகல் நேர சூதாடிகள் அதை திருடி சென்று இருப்பார்களா அல்லது கடலடியில் இசைக்கப்படும் வீணை போல் காலத்தின் கண்களிலிருந்து மறைந்து இருக்குமா என்றெல்லாம் கூட நான் யோசிப்பேன் ஸ்பரி.

ஏனெனில் நமக்கு அப்பாற்பட்ட உலகம் என்பது கூட நம்மோடுதான் இருக்கிறது, நமது கண்களுக்கு புலப்படாமல் கூட அது இன்னும் அதி தீவிரமாக இயங்கி கொண்டிருக்கலாம்.

அந்த உலகில் கூட நாம் நமக்குரிய தகவலை தவற விட்டு இருக்கலாம். அல்லது அந்த தகவல்களை திரட்டி வைத்திருக்கும் ஒருவர் நமக்காகவே அங்கு காத்திருக்கலாம்.

நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது உங்களுக்கு புரிகிறதா ஸ்பரி, அது புரியவேண்டுமெனில் என் மாமா கோபிநாத் பற்றி நீங்கள் தெரிந்து கொண்டு இருக்க வேண்டும்.

இடுக்கியில் உள்ள வனப்பகுதியான மதிகெட்டான் சோலைக்குள் சருகுகள் நிரம்பிய வறண்ட கால்வாய் அருகே ஒற்றை கொம்பன் தன் கொம்பில் ஒரு மரகதக்கல் பதித்து வைத்திருக்கிறான் என்று அவர் சொன்ன தகவலை எங்கள் ஊரில்  உள்ள யாரும் நம்பவில்லை. ஆனால் சோலைக்குள் கால்வாய் அருகே ஒற்றை கொம்பனை பலரும் பார்த்து உள்ளனர்.

ஆனால் மரகத மோதிரம் அணிந்திருந்த என் மாமா அவ்வாறு சொன்னதை நான் நம்புகிறேன். இன்னும் அவரே அந்த ஒற்றை கொம்பனாகவும் இருக்கவே வாய்ப்புகள் அதிகம்.

கரும்பை விரும்பி சாப்பிடுவார் என்றோ வெல்லம் போட்ட சாயாவை அடிக்கடி குடிப்பார் என்றோ நான் காரணங்களை முன் வைக்க விரும்பவில்லை ஸ்பரி.

ஆனாலும் என் மாமாவை அப்படி நம்புகிறேன். தர்க்க சாஸ்திரிகளை நம்புவதை விடவும்.

தகவல்களை சொல்வதில் எவ்விதமான பிழையும் இல்லை. மாறாக அதை நாம் கற்பிக்க முனைவதுதான் குற்றம். அநீதி.

உருவாகும் செய்திகளை சாயம் நீர்த்து போக செய்துவிட்டால் அது எலும்பும் தோலுமாய் சில தகவல்களாக உதிர்ந்து விடும் என்பது எனக்கும் புரிகிறது.

அதேசமயம் அதை கொடும் ஆயுதமாக மாற்றி யார் யாரால் பயன்படுத்த முடியும் என்பதை தகவல் பயங்கரவாதிகளே முடிவு செய்கிறார்கள் என்பதும் அவர்களுக்கும் அரசியல், திரைப்படம், தொழிலதிபர்கள் பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை சார்ந்தவர்களுக்கும் ஒரு நேரிடையான மற்றும் மறைமுகமான தொடர்புகள் சர்வதேச அளவில் இருக்கிறது என்பதும் தெரியும்.

ஆனாலும் ஒரு தகவல் இன்னொரு தகவலை பின்தொடரவோ அல்லது ஒரு தகவல் இன்னொரு தகவலை சிதைத்து தன்னையே பிரதி எடுத்து கலந்து விடுவதோ இயல்பாக நிகழ்வதுதானே?

ஆக கற்பது என்பது அனிச்சையாக நிகழ்வது. மின்சார வேலி மீது ஒரு பட்டறிவு கொண்ட மானுக்கு எத்தனை விழிப்புணர்வு இருக்குமோ அத்தனை விழிப்புடன் நாம் கற்றுக்கொண்டே இருக்கிறோம் நம்மை அறியாமல்…

எது எப்படியோ ஸ்பரி, இன்று மாலை நாம் சந்திக்க முடியுமா?

இப்படி முடித்து இருந்தாள்.

அன்று மாலை நான் பூர்ணிமாவின் விருப்பப்படி சந்திக்க அவள் வீட்டுக்கு சென்றிருந்தேன்.

நான் செல்லும்போது நாங்கள் பார்த்து பழகிய அந்த ஆரம்ப நாட்கள் எனது நினைவுக்கு வந்தது. அதை நினைத்து கொண்டே நடக்கும்போது முன்பு நடந்ததை உங்களுக்கும் சொல்வதில் எனக்கு மகிழ்ச்சியே.

அதை உங்களுக்கு நான் சொல்ல வேண்டும். அப்போதுதான் தொடர்ந்து வரும் மற்றவற்றை எளிதில் புரிந்து கொள்ள முடியும்.

எழுதியவர் : ஸ்பரிசன் (15-Aug-23, 4:35 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 29

மேலே