யுத்தம்
இந்த வீட்டில் அறை என்று குறிப்பிட்டு சொல்ல முடியாது. ஆனால், ஏழோ எட்டோ அறைகள் உள்ள வீடுதான்.
ஒவ்வொரு அறைக்குள்ளும் மெதுவாக நடந்து வீடை ஒருமுறை சுற்றி வருவதற்கு இருபது நிமிடங்கள் ஆகும்.
துள்ளலாய் ஓடினாலும் சிறிது நேரம் பிடிக்கும். அழகான வீடு என்று சொல்ல முடியாது. எல்லாம் சிதறி இருக்கும்.
இதுபோக தோட்டம் என்பதும் தனியே இருக்கிறது. செடி கொடிகள் தவிர ஓரிரு அரளி மரங்களும் இருக்கிறது. இந்த மரம் வீட்டில் வளர என்ன தேவை என்பது எனக்கு தெரியவில்லை.
வாசனை என்று எதுவும் வீட்டில் இல்லை. அதேசமயம் நாற்றம் இல்லை. ஒன்றுமே இல்லாத இந்த வீட்டில் இருக்கிறேன். நான் மட்டும் அல்ல, என்னோடு பிறந்த, நான் பெற்ற பிள்ளைகள், உடன் பிறந்தோர் பெற்ற பிள்ளைகள்… சொல்லி கொண்டே போகலாம்.
சொல்லக்கேட்டால் அவர்களின் பெயர் நிறம் முடி நிறம், கால்களின் வளர்த்தி என சொல்லிக்கொண்டே போகலாம்.
யாருக்கும் மருத்துவ தேவை என்பது ஏற்பட்டதே இல்லை. இதனால் மாத்திரை டானிக் சப்ளிமெண்ட் வில்லைகள் என்று ஒன்றும் வாங்குவது இல்லை.
உணவு உண்டது போக விளையாட்டு. கும்மாளம். அக்கம்பக்கத்து வீடுகளுக்கு ஒரு நடை என்று வாழ்க்கை அதுவாக போய் கொண்டேதான் இருக்கிறது.
யாரையும் குற்றம் சொல்லவோ பொறாமை கொள்ளவோ நேரம் இருப்பது இல்லை.
ஆனால் அன்றாட உணவு என்பது சிக்கல் கொண்டது என்பதை மறுக்க முடியாது. கிடப்பதை பொறுக்கி தின்னும் வாழ்க்கைதான். பகிர்ந்து உண்போம் என்பது குருதியில் கூட இல்லை.
அவரவர் உணவுக்கு நாங்கள் அவரவர் முயற்சியை மட்டுமே நம்பி இருக்க வேண்டும். இந்த விஷயத்தில் கருணை காட்டுவதும் இல்லை. அப்படியே இது எங்களுக்கு பழகி விட்டது.
மழைக்காலம் வந்தால் சற்று சிக்கல். அப்போது பெரும்பாலும் நிறைய நேரம் தூங்கி விடுவோம். விழிக்கும்போது பசித்தால் கிடைக்கும் மாமிசமும் கூட உணவாகி விடலாம்.
உணவுதான் வாழ்க்கையா என்று நீங்கள் முனகுவது கேட்கிறது. ஒருவேளை உணவுக்காக போராடும் வாழ்வில் வேறெந்த அதிகமான பாவம் செய்ய வாய்ப்புகள் இல்லை என்றே எனக்கு தோன்றுகிறது.
மனம் எல்லாம் கிடைக்கப்போகிற உணவுக்கு மட்டுமே கவனத்தோடு இருக்கும்போது, கிடைக்க வேண்டிய உணவு என்று யோசிப்பது ஒருவிதத்தில் அதிகார மனோபாவம் அல்லவா?
அதற்கு எல்லாம் செல்வம் வேண்டுமே…
இந்த வீட்டில் இரவு ஒரு மாதிரியாகவும், பகல் ஒரு மாதிரியாகவும் இருக்கும். இரவு இரவாகவே இருப்பது இல்லை. யாரேனும் எழுந்திரிப்பது தண்ணி குடிப்பது என்று இருந்தால், அதேபோல் ஒருவர் சிறுநீர் கழிக்க எழுந்து செல்வது என விளக்கு எரிவதும் அணைவதுமாக இருக்கும்.
இரவை இரவாக கடந்துபோவது என்பது சூழ்ச்சியும் திறமையான அறிவும் கொண்ட ஜீவன்களுக்கு சாத்தியம் இல்லை.
நான் இதை எல்லாம் பொருட்படுத்துவது இல்லை. எனக்கு வேலைகள் என்றும் பெரிதாக இல்லை. தரையில் ஏதேனும் துணியோ காகிதமோ இருந்தால் அதை கிழித்து விடுவேன். பின்ன என்ன… ஒரு ஒழுங்கு வேண்டாமா…
இதனால் என் மீது கோபம் கூட வரலாம். பழக்கத்தை மாற்ற முடியவில்லை.
வாழ்க்கை நன்றாகத்தான் போகிறது. அதை குறை சொல்ல தொடங்கினால் பின் நிம்மதி என்பதே இல்லாமல் போய் விடும். வாழ்க்கை என்ன என்பதை நாம் நம் மனதுக்கு கற்றுத்தரவே கூடாது. அது ஓரளவுக்கு புரிந்து விட்டால் பின் நம்மை நிம்மதியாக இருக்க விடாது.
இந்த நாள் இந்த நிமிடம் இதைத்தாண்டி ஒரு மயிரும் இல்லை என்று என் மனம் அடிக்கடி எனக்கு சொல்லும்போது வரும் சிரிப்பை கூட அடக்க முடியாது.
காலையில் பச்சை நிற கேக் சாப்பிட்டேன். மெழுகு போல் அது வாயில் இருந்து வயிற்றுக்கு போனது சுகமாக இருந்தது. அதன் பின்பு வேறு சாப்பிட பிடிக்கவில்லை.
சும்மா இருப்பானேன் என்று தோட்டம் பக்கம் போனேன். காலை வெயில் நல்ல இதம். லேசாய் வயிற்றை கலக்கியது.
சரி குடல் விளக்கம் செய்வோம் என்று அந்த காரியத்தை முடித்துவிட்டு வீடு உள்ளே வந்தேன்.
ஏறக்குறைய எல்லோரும் இன்னும் தூங்கி கொண்டே இருக்க, என்ன எழவு இது என்று முனகி கொண்டே மாடிக்கு சென்று விட்டேன்.
நான் நினைத்ததுபோல் ஜிவ்வென்று தாவி துள்ளி எல்லாம் போக முடியவில்லை. தலை சுற்றியது. இந்த கிறுகிறுப்பு எல்லாம் வந்ததே இல்லை. என் மனைவிக்கு கூட இப்படி வந்தது இல்லை. கேக்கில் ஏதேனும் இருந்து இருக்குமா என யோசனை வந்தது.
இருக்கலாம். இருட்டில் சாப்பிட்டு விட்டேன். அதனால் ஏதேனும் அதில் இருக்குமோ என்ற பயம் வந்தது.
சுந்தரி என்று கூப்பிட அவள் வந்து மட்டும் என்ன செய்ய போகிறாள்… என் வேதனை எனக்கு மட்டும் போதும் என சொல்லிக்கொண்டு முன்பு படித்ததை நினைவுக்கு கொண்டு வர முயற்சி செய்தேன்.
மருத்துவத்துறை இந்த திடீர் சுழற்சிக்கு என்ன பெயர் வைத்திருக்கிறது என்று தெரியவில்லை. குமட்டியது. வாய் ஓரம் எச்சில் வடிந்தது. காது மடல்கள் கண்கள் எல்லாம் எரிய ஆரம்பித்தன. காய்ச்சல் என்று தெரிந்ததும் மனது சமாதானம் அடைந்தது. இதற்கு இப்படி பயந்து இருக்க வேண்டாம்.
சுந்தரி என்னை நின்று ஒரு பார்வை பார்த்துவிட்டு அடுத்த அறைக்கு சென்று விட்டாள். குழந்தைக்கு பால் கொடுக்க போகலாம்.
போனவள் திரும்பி வரும்போது நான் விஷயத்தை சொல்லிவிட வேண்டும். காய்ச்சல் போல் தெரியவில்லை. காது ஓரத்தில் துளி ரத்தம் வந்து விட்டது.
நான் கத்தி எல்லோரையும் எழுப்பி விடலாம். வேறு வழி இல்லை.
சுந்தரி, ராமு, ஆதிகேசவா என்று மாற்றி மாற்றி கத்தினாலும் யாரும் வரவில்லை.
எப்படி வருவார்கள்? நான் மயக்கத்தில் மனதுக்குள்தானே கத்துகிறேன். அது எப்படி அவர்களுக்கு கேட்கும்…
எழுந்து நிற்க வேண்டும் போல் ஒரு வைராக்கியம் இருந்தாலும் கால்கள் தொய்ந்து விட்டது.
இது என்னவாக இருக்கும் என்று யோசித்தேன். கண் மூடி இருந்தாலும் சொக்கி விடவில்லை என்பதால் அப்படியே எனக்கு உள்ளே நடக்கும் மாற்றங்களை கண்டறிய விரும்பினேன்.
கால்கள் உணர்ச்சி இல்லாமல் இருக்க, உடலில் சூடு கூட ஆரம்பித்தது. நாக்கில் புதிதாக கசப்பு பரவியது. இப்போது காதை தவிர மூக்கின் நுனியிலும் சின்ன ரத்தத்துளி இருந்தது. ஒடுங்கி போக ஆரம்பித்து இருந்தேன்.
எல்லோ பாஸ்பரஸ்தான் என்று மனம் கூவியது. ஆஹா… இந்த கெமிக்கல் ஆளை விடாதே என்று தோன்றியது.
வயிற்றுக்குள் காற்று கர் புர் என்று ஓடியது. அப்படி என்றால் தாலியம் இருக்க வாய்ப்புகள் அதிகம். இது நரம்பு மண்டலத்தில் ஓங்கி அடித்து விடலாம் என்று தோன்றியது.
அடித்திருக்கும்… அதான் அசைய முடியாமல் படுத்து இருக்கிறேன். சுந்தரி இன்னுமா பால் கொடுக்கிறாள். இல்லை, கொடுத்தபடியே அவளும் தூங்கி விட்டாளா என்று யோசித்தேன்.
நேரம் போகப்போக வாயில் நுரை வர மஞ்சள் காமாலைக்கு உரிய எல்லா அறிகுறிகளும் வந்து விட்டது.
மூத்திரம் வருவது போல் நுனி எரிய ஆரம்பிக்க ஒன்று இரண்டு சொட்டுக்கள் விழுந்து இருக்கும். தொட்டு முகர்ந்து பார்த்தால் தெரிந்து விடும். காரமான வாடையுடன் இருந்தால் சோடியம் மோனோஃப்ளோரோ அசிடேட் கலந்து இருக்கலாம்.
கலந்திருந்தால் கிட்னி ஃபெயிலியர். சுந்தரி இன்றைக்கு பொட்டை அழிக்க வேண்டியதுதான்…
ஐயோ என்று மனதுக்குள் கவலையும் பயமும் வந்து விட்டது.
கால்கள் வெடவெடவென்று நடுங்கின.
சிங்க் அலுமினியம் பாஸ்பேட்?
உடம்பு வேகமாக குளிர்ந்தது.
ஆர்சனிக்?
வாய் உலர்ந்து உடம்பின் நீர்ச்சத்து வற்றி காய்ந்து கொண்டே இருந்தது. தாகம்… தாகம்… தண்ணி…தண்ணி…
பேரியம் கார்போனைட்?
நேரே கோமாவை நோக்கி போனேன்.
மூளையில் வலி குத்தி எடுப்பது எனக்கு தெரிந்தது. பின்னி இழுத்து கொண்டு இருந்த கால்கள் மெல்ல தளர்ச்சி அடைந்து கட்டுப்பாட்டை விட்டு விலகி போனது.
அம்புட்டுதேன் என்று ஒரு குரல் சொல்ல இல்லை என்று நான் கத்த உடல் ஒரு தரம் விலுக்கென்று துள்ளி விழுந்தது.
ஆதிகேசவன் என் வாலை பிடித்து தலைகீழாய் குப்பை தொட்டியில் தூக்கி வீசும்போது சுந்தரி பாவம்டா பச்சை உடம்புக்காரி என்று சொன்னேன்.
அவனுக்கு கேட்டு இருக்காது. நீங்களாவது சொல்லுங்கள். ப்ளீஸ்…
உணவை தவிர வேறு ஒன்றுக்கும் ஆசைப்படாத ஜீவன் சார் நாங்க…