அழுகை மொழி

பிஞ்சிலே பசியிலும்
தவழ்ந்து எழுந்து
விழுகையில்
வலியிலும் ஒலித்தது !

சிறு வயதில்,

கேட்டதைக் கொடுத்த
ஆயுதமாய்
தண்டனைகள் தடுத்த
கேடயமாய்

அதுவே - நாம்
நிறைய பேசியது !

எல்லையற்ற
இன்னல்களில்
பீறிட்டு ஓடியது,

மட்டற்ற
மகிழ்ச்சியிலும்
சொ(மொ)ட்டுகளாய்
மலர்ந்தது !

அதைப் பேசத்
தேவை இல்லை
பக்குவம் ....
பேசாமலிருக்கத்தான் ?!!

வளர்ந்த பின்,

தனிமையிலும்
தனக்குள்ளும் மட்டும்
பேசுவதால்
புதைந்து
போவதில்லை அது...

உறவுகளின்
மறைவிலும்
உணர்வுகளின்
நிறைவிலும்
வெடித்துப் பேசித்தான்
ஆக வேண்டும்
அம்மொழியை !

மற்ற வேளையில்,
குளியலறைச் சுவர்கள்,
தலையணைத் துணிகள்,
கருப்புக் கண்ணாடிகள் தான்
அதன் கள்ள நண்பர்கள் !

அது
சிரிப்பைப் போல
மனிதன் மட்டும் கொண்டதல்ல,
உயிர்களின் பொது மொழி ...
பிறர் சிரித்த
நம் முதல் மொழி,

அதுவே
இறுதியில் - அவர்
நமக்களித்த
அழுகை மொழி !!!

எழுதியவர் : நா முரளிதரன் (11-Dec-23, 8:15 am)
சேர்த்தது : நா முரளிதரன்
Tanglish : azhukai mozhi
பார்வை : 107

மேலே