புகைசூழ்ந்த சிறிய அறை
புகைசூழ்ந்த சிறிய அறை
பொறுக்கி வந்த ஈர விறகுகள்
இரக்கம் காட்ட மறுக்கின்றன,
பகைசூழ்ந்த சிறிய இருட்டு அறை
தாயவள் கண்ணீரை மூடி மறைக்கிரது;
மற்றவர் அணுகாத மண்ணுக்கடியில்
காலைக் கடன்கள் கழித்த இடத்தில்
தோண்டியெடுத்த மரவள்ளிக் கிழங்குகள்
பிடிவாதத்துடன் வேக மறுக்கின்றன;
பலமுறை சுத்தம் செய்தும்
போகாத மல வாடையை கல்லான மனம்
பொறுத்து கொண்டு விட்டது
இதை விட்டால் வேறு உணவில்லை;
உணற்ச்சியற்று குடிபோதையில்
உறங்குகிறான் கட்டியவன்,
உயிரிருப்பதை அவ்வப்போது இருமி
நினைவூட்டுகிறான்;
எழுந்துவிட்டால் அடி உதை பெண்ணவளுக்கு
மனைவியென்ற காரணமொன்றே போதுமே
வதங்கி கிடக்கும் மழலைகளுக்காக
பொறுத்து பெருமூச்சு விடுகிறாள்;
பெண்ணின் தினமாம் இன்று
இவளும் பெண்ணே, ஆனால்
வாயிற்க் கதவிற்க்கு வெளியே
அங்கீகாரம் இல்லை இவளுக்கு!
சம்பத் குமார்