உங்களுக்காக ஒரு கடிதம் - 40

உங்களுக்காக ஒரு கடிதம் - 40
19 / 03 / 2024
அன்பு நண்பர்களே,
ஆறு நீண்ட......மாதங்கள் ஓடிவிட்டன. இடைவெளி சற்று பெரிதாய்தான் ஆகிவிட்டது. சரி.போனது போகட்டும். இனியாவது தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன்.எதை பற்றி எழுதுவது?
எப்போ எழுத உட்கார்ந்தாலும் குறைகளும்...குற்றங்களும் ....மன வருத்தங்களும் ... விவாதங்களும்... ஆலோசனைகளும்...போதும்...போதும். வாழ்க்கையில் இதை தவிர கொண்டாட.. பின்பற்ற...பகிர்ந்துகொள்ள வேறேதும் இல்லையா? யோசித்துப் பார்த்தேன். இவ்வளவு பெரிய உலகத்தில் ரசிக்க ஏதுமில்லையா? ஆண்டவன் படைத்து வைத்த இந்த பிரபஞ்சத்தில் நாம் பார்க்க வேண்டிய..ரசிக்க வேண்டிய.. அதிசயங்கள்.. ஆச்சரியங்கள் குவிந்து கிடக்கின்றன. வாழ்நாளில் அதில் 1% கூட நாம் அனுபவிப்பதில்லை. இந்த மாயை நம்மை அனுபவிக்க விடுவதுமில்லை. 99% அன்றாட கவலைகளும்....சவால்களும்...தினம் நாளைத் தள்ளுவதே பெரும் பாடாய் நம்மை பெரிய பள்ளத்தில் தள்ளி அமுக்கும்போது எப்படி வாழ்வை ரசிப்பது? என்ற கேள்வி வானளவு அவதாரமாய் வளர்ந்து நம்மை பயமுறுத்துகிறதே..என்ன செய்ய? ஏனென்றால் நாம் சிறு கல்லை கண்ணுக்கு மிக அருகில் வைத்துக்கொண்டு உலகமே இருட்டாய்... கலங்கலாய்... புகைமூட்டமாய் இருக்கிறதென்று நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டிருக்கிறோம்...ஏமாந்தும் கொண்டிருக்கிறோம்.
தேவையில்லாததற்கு எல்லாம் முக்கியத்துவம் கொடுத்து நம்மை நாமே வருத்திக் கொண்டிருக்கிறோம். இதில் யாரை குற்றம் கூறுவது? நம்மையா? இயற்கையையா? இல்லை இறையையா? யாரையும் குற்றம் சொல்ல முடியாது. இது ஒரு சுழற்சி ...மாய சுழற்சி. இதில் மாட்டாதவர்கள் யாரும் இருக்க முடியாது. வாழ்வில் ஒரு முறையாவது இந்த சூழலில்...சுழலில் மாட்டாமல் இருக்க முடியாது. மாட்டாமல் தப்பிப்பதற்கு நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
சரி...சரி... இப்படியே பெனாத்தி கொண்டிருந்தால் எப்படி? இதிலிருந்து விடுபடுவது எப்படி? யோசிப்போம்.தட்டுங்கள் திறக்கப்படும். கேளுங்கள் கொடுக்கப்படும். அதனோடு தேடுங்கள் தென்படும். முதலில் குறை கூறுவதை நிறுத்துவோம். நிறையையை மட்டும் காண முயலுவோம். இது சாத்தியமா? நம் மனித மனம் இருக்கிறதே...பாழும் மனம்….. நல்லதை பார்க்காதே. எப்பவும் குறைகளைத்தான் ஊன்றி...துளைத்து துளைத்து பார்க்குமே. நம்மிடம் ஆயிரம் குறைகள் இருந்தாலும் மற்றவரிடம் இருக்கும் ஒரு குறை போதுமே. அதை ஊதி..பெருசாக்கி அவர்கள் சாகிறவரை குத்தி குத்தி காட்டுவதில் கிடைக்கும் அல்ப சந்தோஷத்திற்கு அடிமையாய் போன ஈனப் பிறவிகள்தானே. இதை மாற்றுவதற்கு முயலுவோம். முதலில் சிரிக்க பழகுவோம். மற்றவரை பார்க்கும்போது...தெரிந்தவரோ..தெரியாதவரோ அவரும் நம்மைப்போல் ஒரு மனித பிறவிதானே... சிறு புன்னகை. அது போதுமே உன் முகம் பூவாய் மலருமே...அதை கண்ட எதிராளியின் முகம் தீபமாய் ஒளிர்ந்திடுமே. குறைகள் மறைந்திடுமே. ஆரோக்கியமான பந்தம் வேர்விடுமே. நட்பு மரம் கிளைவிடுமே.
குறை இல்லாத மனிதர்கள் யாரேனும் உண்டா? நீ மற்றவரின் குறையை பார்ப்பது போலத்தானே மற்றவர் உன் குறையை பார்ப்பார்கள். சிறு கல்போல் நீ குறையை கண்டால் அவர்கள் பெரிய பாறாங்கல் அளவு உன் குறையை கண்டெடுப்பார்களே. என்ன செய்ய? சபைக்கு அது தெரிந்துவிட்டால் உன் முகத்தை நீ எங்கு போய் வைத்துக்கொள்வாய்? யோசித்துப் பார். மற்றவர் குறைகள் கண்ணில் படும்போது, சட்டென்று நம் குறைகளை நாம் எண்ணி பார்ப்போம். அது உடனே வராதுதான். நாம்தான் அந்த நேரத்தில் புத்தன்...ஏசு...காந்தி ..ஆகிவிடுவோமே. உத்தமன் போல் பேசத் தொடங்கிவிடுவோமே. சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ் ஆகிவிடுவோமே...சின்ன கவுண்டர் விஜயகாந்த் போல் பெரிய நாட்டாமை ஆகி தீர்ப்பு சொல்ல முயலுவோமே. கஷ்டம்தான். பயிற்சிதான் தேவை.
மனதை சாந்தப்படுத்தி...பக்குவப்படுத்த காலங்கள் அதிகம் ஆகும். உண்மைதான். நாம் என்ன முற்றும் துறந்த முனியா?... இல்லை விவேகானந்தரா?... இல்லை பரமஹம்சரா?. சாதாரண மனித புழு. ஒரு நாளில் எட்டிவிட முடியுமா என்ன? தினமும் சாதகம் பண்ண வேண்டும்.பயிற்சி பண்ண வேண்டும். மற்றவரை குறை சொல்ல மற்றவரின் குறை காண நமக்கென்ன தகுதி இருக்கிறது என்று ஒரு நொடி சிந்தித்தால் போதும். தகுதியை நாமே உருவாக்கி கொள்ளக்கூடாது. அதற்கான தகுதியை வளர்த்து கொள்ள வேண்டும். அதற்கு நேர்மறை சிந்தனைகளும், மனிதனை மனிதனாய் மதிக்கும் மனித நேயங்களையும் வளர்த்து கொள்ள வேண்டும். வளர்ப்பது சுலபம்தான். வாழ்நாள் முழுதும் கடைபிடிப்பதுதான் கஷ்டம்.இஷ்டப்பட்டு செய்தால் எதுவும் கஷ்டமில்லை. திருவேங்கடன் பற்றி மூதறிஞர். ராஜாஜி எழுதிய பாடல்தான் காதில் ஒலிக்கிறது. " குறை ஒன்றுமில்லை மறை மூர்த்தி கண்ணா. குறை ஒன்றுமில்லை ".. எண்ணிப்பார்த்தேன். குறையோடு அவன் எதுவும் பெரும்பாலும் படைத்ததில்லை. அதனால்தான் அப்பெருமகனார் இறைவனிடம் வேண்டும்போதும் கூட குறைகளை பட்டியலிடாமல் குறை ஒன்றுமில்லை என்று பாடுகிறார்.நாமும் அப்படியே நம்புவோம். நீ சிவனாக வேண்டுமெனில் நீயும் சிவன்தான் என்று நம்பவேண்டும். அந்த நம்பிக்கையை வளர்ப்போம். நம்பிக்கையோடு வாழ்வோம். குறைகளைக்கூட நிறைவாய் காண முயற்சிப்போம். " குறை ஒன்றும் இல்லை. மறை மூர்த்தி கண்ணா. குறை ஒன்றும் இல்லை"

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (19-Mar-24, 7:52 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 52

மேலே