தாய்மை குணம் பசியும் பரிசும்

தாய்மை குணம் பசியும் பரிசும்

ஆண்டவன் படைப்பில் பல்வேறு அதிசயங்களை நாம் கண்டு வியந்திருக்கிறோம்.எல்லா உயிரினங்களுக்கும் பொதுவாக அவன் கொடுத்ததில் மிகவும் அதிசயமான ஒன்று பசி என்ற ஒரு உணர்வுதான்.
பசி என்ற உணர்ச்சி வந்தவுடன் உயிரினங்கள் இங்கும் அங்கும் அலைந்து தங்கள் பசியை தணிக்க ஒரு வழி காண்கிறது. மனிதன் என்ற படைப்பு ஆகாரத்தை கண்டு எது தனக்கு உகந்தது என்பதை தன் அறிவால் உணர்ந்து அதை சுவைத்து பசியை வெல்கிறது.பசி இல்லாமல் இருந்தால் ஒருவரும் தங்கள் வேலையை செய்யாமல் இருந்த இடத்திலேயே சோர்வுடன் அமர்ந்து உலகமே மந்தமாக தோற்றமளிக்கிறது. பசி வந்தால் அதை தணிக்க எல்லா உயிரினமும் தங்களை அடக்க முடியாமல் மற்ற உணர்ச்சிகளை வெளி கொணர்ந்து அதன் மூலம் ஆகாரத்தை பெருகின்றதை நாம் அன்றாடம் பார்க்கிறோம்
யாரும் எதிலும் நாட்டமில்லாமல் வெறிச்சோடிய நிலையில் நம்மை நாமே வெறுக்க ஆரம்பித்து விடுகிறோம். மற்ற எந்த உணர்ச்சிக்கும் இந்த விசேஷம் இல்லை அவைகள் யாவும் வெளியே தெரியாமல் உள்ளே மறைக்க முடியும் பசியை மட்டும் மறைக்க முடியாமல் அது வெளி வந்து அதனால் பல விளைவுகள் ஏற்படும். பசி வந்திட செய்வது யாது என்பதே தெரியாமல் தடுமாறும் உயிரினங்கள் என பலரும் சொல்லி நான் சிறுவனாக இருந்த பொழுது கேட்டதுண்டு. பல நேரங்களில் மனிதனுக்கு பசி கோபத்தையும் ஏற்படுத்துவதுண்டு.கோபம் ஏற்படும் வேளையில் நாம் எது செய்கிறோம் என்ன கூறுகிறோம் யாரிடம் என்று அறியாமல் பேசுவதுண்டு.இதனால் உறவுகள் பகைவர்களாவதுண்டு. பசியை அறிந்து அதற்கு ஒரு ஆகாரம் தருபவர்களை தெய்வமாக கண்டு வணங்கி வாழ்த்துவதும் நம்மால் பார்க்க முடிகிறது. இயற்கையிலேயே பெண்களுக்கு இந்த தயாள குணம் உள்ளது. சிறு குழந்தையாக இருக்கும் பொழுது அவர்கள் தங்கள் வீட்டிலோ அல்லது வெளியிலோ அவர்களை விட சின்ன குழந்தைகளை பார்த்து கொள்வதை நாம் காண்கிறோம். தன்னிடம் கொடுத்த குழந்தைகளை நல்ல முறையில் கவனித்து தூய்மை படுத்தி பின் தேவை படும் பொழுது ஆகாரம் அளித்து உறங்க வைப்பதையும் விளையாட்டு காட்டி அழுகையை நிறுத்தி சிரிக்க செய்வதையும் பார்த்து வியந்தது உண்டு. பெண் குழந்தைக்கு கருணை அடைக்கலம் பாதுகாப்பு என்ற ஒரு தனி தன்மை இயல்பாகவே இறைவன் கொடுத்து விடுகிறான்.
இவ்வாறு பிறப்பிலேயே மென்மையான குணம் படைத்த பெண்களை அசுரதன்மைக்கு கொண்டு செல்வது நம் சமுதாயமும் அதில் அவள் காணும் நிகழ்வுகளும் அங்கு வாழும் மக்களின் நடத்தையும் தான் என்றால் அது மிகையாகாது.
அந்த அமைதியான பெண்ணை புயலாக மாற்றி அவளது இயற்கையான குணத்தை மாற்றி அவளை கொடுமையானவளாக்கி வாழ வழி செய்கிறோம் என்று சொல்லி அவளை நாம் கடுமையாக தண்டிக்கிறோம் இதையும் நாம் இன்று பார்க்கிறோம். பல நேரங்களில் அவளது இயற்கையான குணம் அவளிடம் மிளிர்வதை காண்கிறோம். பெரியவளானாலும்,சிறுமியானாலும் அவள் தயை வெளிப்படுகிறது. அப்படி ஒரு நாள் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை இப்பொழுது படித்து மகிழ்வோம். பெண்ணை படைத்த பொழுது இறைவன் கொடுத்த குணங்களை போற்றி அவர்களை மென்மையின் சிகரமாக வைப்பது நம் கையில் தான் உள்ளது என்பதை உணர்ந்து செயல் படுவோம். ஒரு சிறிய ஊரில் சிறுவன் கடையில் இருந்து வீடு வீடாக பொருள்களை கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தான்
வீடு வீடாக பொருட்களை விநியோகிக்கும் அந்த சிறுவனுக்கு ரொம்ப பசித்தது. எதையாவது வாங்கி சாப்பிடலாம் என்றால் கையில் பணமே இல்லை. அருகில் இருந்த வீட்டில் ஏதாவது சாப்பிட கேட்கலாம் என்று நினைத்தான்.

அந்த வீட்டின் கதவைத் தட்டினான். ஒரு பெண் கதவைத் திறந்தாள். ஏதாவது கேட்கலாம் என்று நினைத்தான். ஆனால் கூச்சம். கேட்க மனம்வரவில்லை.

“கொ… கொஞ்சம் தண்ணி கிடைக்குமா குடிக்க?” தயக்கத்துடன் கேட்கிறான்.

அவள் அந்த சிறுவனின் கண்களில் இருந்த பசியைக் கவனிக்கிறாள். உள்ளே சென்றவள், ஒரு பெரிய கப்பில் பாலைக் கொண்டு வந்து கொடுத்தாள்.

பாலைக் குடித்து பசியாறிய சிறுவன் கேட்டான்… “நான் உங்களுக்கு எவ்வளவு கடன்பட்டிருக்கிறேன்?” “கடனா… அப்படி ஒன்றுமே இல்லை. அன்பான செயலுக்கு விலை எதுவும் இல்லை என்று என் அம்மா சொல்லியிருக்கிறார்.” அவள் சிரித்துக்கொண்டே சொன்னாள்.

“ரொம்ப நன்றி…” சிறுவன் புன்னகையுடன் கடந்து சென்றான்.

ஆண்டுகள் பல கழிந்தன. கஷ்டப்பட்டு முட்டி மோதி படிப்பை முடித்த அந்த சிறுவன் மருத்துவம் படித்து அந்த நகரிலேயே மிகப் பெரிய டாக்டர் ஆனான்.அந்த சமயத்தில் அந்த பெண்ணுக்கோ ஒரு கொடிய நோய் வந்தது.

அவர் பணியாற்றிய மருத்துவமனையிலேயே அவளும் அனுமதிக்கப்பட்டிருந்தாள். அந்த டாக்டரிடமே அவளுடைய பரிசோதனையும் வந்தது. மெடிக்கல் ரிப்போர்ட்டில் அந்த பெண்ணின் ஊர் பெயரை பார்த்ததும் அவருக்குள் ஒரு சின்ன மின்னல். விரைவாக வார்டுக்கு போய் அந்த பெண்ணை பார்த்தார். அவள் தான். தனது பசியாற்றிய அந்த தாயுள்ளம் தான்.

அன்று முதல் தனது உழைப்பையும் கவனத்தையும் செலுத்தி அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளித்தார். நீண்ட சிகிச்சைக்கு பின்னர் அவள் குணமானாள். பல லட்சங்கள் செலவானது. மருத்துவமனை அந்த பெண்ணுக்கு ஒரு நீண்ட பில்லை அனுப்பியது. இதை எப்படி கட்டப்போகிறோமோ என்று பதட்டத்துடன் அதை பிரித்தவள் திகைத்துப் போனாள்.

அந்த பில்லின் கடைசியில் கையால் எழுதப்பட்டிருந்தது.

“இந்த பில்லை நீங்கள் செலுத்தவேண்டியதில்லை. ஒரு கப் பாலில் உங்கள் கடன் முழுதும் தீர்க்கப்பட்டுவிட்டது. இது நன்றி சொல்லும் நேரம்!”

அவளுக்கு கண்கள் பனித்தன.


அந்த சிறுவன் வேறு யாருமல்ல… அமெரிக்காவின் மிகப் பிரபல மருத்துவராக விளங்கிய DR. HOWARD KELLY (1858-1943) தான்.

நான் இந்த செயலை பற்றி என்ன சொல்லி விளக்க வேண்டும் என்று நினைக்கும் பொழுது அத்தனையையும் நம்ம வள்ளுவர் ரெண்டே வரிகளில் சொல்லிட்டார்.

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி. (குறள் 226)

பொருள் : வறியவர்களின் பசியைப் போக்குங்கள். அது தான் (செல்வம் பெற்ற ஒருவன்) அது பிற்காலத்துக்கு தனக்கு உதவுமாறு சேர்த்து வைக்கும் இடமாகும்.
கவியரசர் ஒரு படி மேலே சென்று இந்த தயையையும் கருணையையும் இறைவன் வாழும் இடங்களாக கூறியுள்ளார்
பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்
அவன் கருணையுள்ள நெஞ்சினிலே கோவில் கொள்கிறான்
தாய்மை குணம் நிறைந்து பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு அவர்களின் உண்மை குணம் நிறைவாக நின்று வெளிவர நம்மால் முடிந்த அளவிற்கு வழி அமைப்போம் என உறுதி எடுத்து செயல் படுவோம்.

எழுதியவர் : கே என் ராம் (23-May-24, 6:35 pm)
சேர்த்தது : கே என் ராம்
பார்வை : 49

மேலே