ஈயார் தேட்டை தீயார் கொள்வர்
மக்கள் வரிப்பணத்தில்
மாளிகைகள் நூறு கொண்டார்!
மகிழுந்து தானேறி
மாடவீதியில் வலம்வந்தார்!
மந்திரி நானென்று
மமதையில் போதை கொண்டார்!
மகனின் மகனுக்கும் பதவிவேண்டி
மாநாட்டில் கொடி அசைத்தார்!
குளிரூட்டிய மகிழுந்து
குடிசைகள் பக்கம் வந்ததில்லை
குடிமக்கள் தான்வாழ
குரல் எங்கும் தந்ததில்லை
குறை சொல்லும் மக்களை
கூர்ந்தும் பார்த்ததில்லை
கும்பிடுவார் என்றால் அது
தேர்தல்வரும் நாளன்றி வேறில்லை!!
காலன் வந்து மகனை
காவல்தாண்டி அழைத்துச்செல்ல
கதறுகையில் அறிந்துநின்றார்
கட்டிவந்த பாவம் இதுவென்று
இரும்புக்கோட்டையில் இருந்தாலும்
ஈசன் போட்டபிடி மாறாது
ஈயார் தேட்டை
தீயார் கொள்வர் என்னும்
அறமும் பிறழாது