சானித்தியம்
ஒரு "Introvert" நானல்லவா (Diary 1999)
--------------------------------------------------------------------
///புத்தமதம் சுவீகாரம் செய்தபின்பு அசோக சக்ரவர்த்தியிடம்
அபரிமிதமான
மாற்றங்கள் தெரிந்தன.
ஒரு இராஜாவிற்கான வினோதங்களையும்
சுகபோகங்களையும்
வேண்டாமென அவர்
ஒவ்வொன்றாக
விடுத்துக் கொண்டிருந்தார்.
எனச் சொல்லிக் கொண்டிருந்தேன் .
உன் சரிகமபதநி என் இலாவண்யத்தின்
திசைமாற்றுகிறது.
சப்தித்துக் கொள்ளமாத்திரம்
ஒரு குரல்
உலகத்தில் படைக்கப்படாததை
இந்த இயற்கை
அறிவித்துக் கொண்டிருக்கிறது.
மனதளவிலிருந்த
உன் மீதான என் இரகசியங்களை
அது திரையவிழ்த்துக் கொண்டிருக்கிறது.
மனதின் சத்தியாவஸ்த்தைகளை ஒளித்துக்கொள்ள ப்ரயத்தனப் படுகிற போதெல்லாம்
நானறியாமல்
உன் முன்னால் உடைந்துவிடுகிறேன் .
அசூயையினால் இல்லை.
மெல்ல உன்னால்
இப்படி நேரியதை எண்ணி
நீ தனியறையில்
கலங்கிக் கொண்டிருக்கும் அழகு
அடடா
இந்த இரசனைதான்
எத்தனை இரக்கமில்லாதது ம்.
இதுவரை
இவற்றையெல்லாம்
சொல்வதறியாமல்
நாவிலிருந்து
புறப்படும் வார்த்தைகள்
கரணமடிக்கின்றன.
பிரலாபிக்கின்றன.
ஒரு அழகான சுருதிப் பெட்டியை
இயக்கத் தெரியாதவன்
இயக்கியதுபோல்
என் விரல்கள் கிடந்து தந்தியடிக்கின்றன.
தாளமடிக்கின்றன.
எதை எதையோச் சொல்லி
உன் பார்வையை
உன் இசையை
மறுக்க நினைக்கும்தோறும்
அதை ஏற்காமலிருக்கும் தோறும்
நீ என்னைவிட்டு
அகலப் போய்க் கொண்டிருந்தாய்.
அகண்ட முற்றத்தில்
உன் வித்தியாப்பியாசம்
இயம்புவதைக் கண்டு
ஒரு குற்ற உணர்ச்சிக்கு
ஆளாகிறேன்.
அது வெறுமொரு குற்ற உணர்ச்சிதானா ?
இல்லை.
துளசிக்கதிரினுடைய பரிசுத்தமுள்ள
அந்த முகம்,
என் இதயத்திற்குள்
சுட்டிறங்குகின்ற
அந்த சுரமாதிரிகள்,
என் உள் உணர்த்தியதை
எப்படி சொல்ல.
என்னச்செய்வது (நானொரு introvert அல்லவா).
கையில் ஏந்திய விளக்கினைக்கால்
பிரகாசப்பூரணமான விழிகள்
சயித்தியக் கால
துளிர்தலோ ம் ? தெளிவிலில்லை நான்.
என் நினைவிலிருந்து
ஒரு இருவாச்சிப் பறவையின்
இறுக்கம் தளர்த்துகிறேன்.
அந்த சந்திப்புகள்
மீண்டும் மீண்டும் தொடராதா
என ஆசைமீட்டுகிறேன்.
தோணலோ எண்ணலோ
சுருட்டி எடுத்து
புறம் எறிய முடியாதவைகள்தானே ம்.
சமீபகாலம் தாண்டி
ஏகாந்ததை இஷ்ட்டப்படும் எனக்குள்
மனம் பிரியமுடியாத
தற்போதைய உன் அளவலாவல்கள்
சானித்தியம் ஆயின.
ஒரு கனவுநீலத்தில் படர்ந்த வெள்ளைப்பூக்கள் போல். ///
பைராகி