வாழ்க்கை இப்படியும் இருக்கலாம்

வாழ்க்கை இப்படியும் இருக்கலாம்

என் பெயர் கீர்த்திவாசன் என் மனைவி பெயர் மைதிலி இருவரும் சென்னையில் பிறந்து பட்டம் பெற்று விட்டு கோவையில் வேலை செய்ய துவங்கி சில வருடங்கள் அங்கு வசித்து வந்தோம். நானும் என் மனைவியும் எப்பொழுதும் வீட்டில் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டு இந்த வேலை நான் அந்த வேலை நீ என்றில்லாமல் யாருக்கு சிறிது நேரம் கிடைத்தாலும் செய்து விடுவோம். என் அம்மா எனக்கு சமையல் மற்றும் வீட்டு வேலைகளையும் சொல்லிக் கொடுத்திருந்தாள் ஆகவே வீட்டைப் பராமிப்பதில் எனக்கு ஒரு வித கஷ்டமும் இல்லை. நான் வேலையில் இருந்து வந்தவுடன் எல்லா வீட்டு வேலைகளையும் செய்து விடுவேன். என் மனைவி வேலை முடிந்து களைப்புடன் வரும் வேளையில் அவளுக்கு சூடான உணவும் மற்றும் வேண்டியவைகளையும் கொடுப்பதில் எனக்கு மகிழ்ச்சி. எங்கள் நெருக்கமான நண்பர்கள் யாவரும் அமெரிக்காவில் வேலை செய்து கொண்டிருந்தனர்.அவர்கள் எங்களிடம் நீங்களும் இங்கு வரலாமே என்று ஒவ்வொரு முறை பேசும் பொழுதும் கூறுவதுண்டு. இங்கு வந்தால் உங்களுக்கு ஒரு வித்தியாசமும் இருக்காது நன்றாக வாழலாம் குழந்தைகளின் படிப்பு வளர்ப்பு எல்லாமே சுலபம் தான்.வீடுகள் யாவும் சுத்தமாகவும் அழகாகவும் இருக்கும் வந்துவிடுங்கள் நாங்கள் எங்கள் அலுவலகத்தில் உனக்கு வேலைக்கு ஏற்பாடு செய்கிறோம் என்று வற்புறுத்தி கூறிட நானும் என் மனைவியும் சிலநாட்கள் நன்றாக சிந்தித்த பின் சென்னை வந்து அமெரிக்கா செல்ல வேண்டியதற்கான பணிகளை தொடங்கினோம். ஒரு மாதகாலம் விசாவிற்கு வேண்டிய பேப்பர்களை ரெடி செய்து பின்னர் அமெரிக்கன் கான்சுலேட் அலுவலகத்தில் அதை அவர்களிடம் கொடுத்து விசா வருவதற்கு வழி செய்துவிட்டு வந்தோம். ஒரு வாரத்தில் எங்கள் விசாவும் வந்தது.
என் நண்பர்கள் எனக்கு வாழ்த்து தெரிவித்து அங்கே எனக்கு ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வைத்து வேண்டிய பாத்திரங்களையும் வாங்கி அந்த வீட்டில் வைத்து விட்டதாக தகவல் கூறினர்.நாங்கள் இருவரும் மிகுந்த மகிழ்ச்சியோடு ஒரு நல்ல எதிர்காலத்தையும் மனதில் கொண்டு சென்னையில் இருந்து விமானம் ஏறினோம். இருபத்திரண்டு மணி நேரத்திற்கு பிறகு டல்லஸ் என்ற ஊரில் விமானம் இறங்கியது.விமானத்தில் சிறிது நேரம் தூங்கினோம் ஆனாலும் பகல் இரவு மாற்றத்தால் எங்களுக்கு மிக அசதியாகத்தான் இருந்தது.
என் நண்பர்களில் ஒருவன் எங்களை வரவேற்க வந்திருந்தான்.அவனை கண்டதும் எங்கள் அசதி குறைந்து மகிழ்ச்சி வந்திட அவனை கட்டி அணைத்து எங்கள் மகிழ்வை தெரிவித்தபின் அவன் எங்களை வீட்டிற்கு அழைத்து சென்று சுவையான உணவு அளித்து விட்டுஎங்களுக்காக வாடகைக்கு எடுத்துள்ள வீட்டிற்கு காரில் கொண்டு விட்டான்.
அசதியும் நல்ல சாப்பாடும் கண்களில் தூக்கத்தை வரவழைத்தன.உள்ளே அறைக்கு சென்று அழகாக அமைக்கப்பட்ட கட்டிலில் படுத்தோம். சில நிமிடங்களில் நன்றாக உறங்கினோம்.
மாலை என் நண்பர்கள் யாவரும் வீட்டிற்கு வந்து எங்களை அவரவர் வீடுகளுக்கு கூட்டி சென்று அங்கு செய்யவேண்டிய வேலைகளையும் சில முக்கிய இடங்களையும் பற்றி கூறினர். நேரம் சென்றது தெரியவில்லை ஒரு நண்பன் வீட்டில் இரவு உணவை முடித்து விட்டு எங்கள் வீட்டிற்கு வந்தோம்.மீண்டும் அசதிசோர்வு எங்களை ஆட்கொள்ள மறுபடியும் உறங்கினோம். மறுநாள் காலை எழுந்தவுடன் வேலைக்கு போக என் நண்பன் வந்து என்னை காரில் ஏற்றிக்கொண்டு அலுவலகம் வந்ததும் அவனும் என்னுடன் கூட வந்து அதிகாரிகளிடம் என்னை அறிமுக படுத்தினான். முதல் வாரம் அமெரிக்காவில் வேலை சிறிது புதுமையாக இருந்தது.அவரவர் வேலையை மட்டும் எல்லோரும் செய்து யாரிடமும் பேசாமல் அறையிலேயே இருந்து ஐந்து மணியானவுடன் வீட்டிற்கு புறப்பட்டு செல்வர்.நானும் அதேபோல் இருந்து கொள்ள பழகினேன். அலுவலக உரிமையாளர் கேரள நாட்டை சேர்ந்தவர் அவரது மனைவியும் அவள் தம்பியும் அலுவலகத்தில் பெரிய பதவியில் இருந்தனர். நான் வேலையில் சேர்த்து முதல் அறுபது நாட்கள் மிகக் கடினமாக உழைத்து வருவாயை உயர்த்தினேன்.இதனால் அவர்கள் எனக்கு பதவி உயர்வும் மதிப்பும் கொடுக்க அங்கு சில வருடங்கள் வேலையில் இருந்த பலருக்கு இது பிடிக்காமல் போனது.எனக்கு கீழ் பத்து பேர் வேலை செய்ய ஆரம்பித்தனர்.
நாட்கள் உருண்டோடின இது நாள் வரை நண்பர்கள் எங்கு சென்றாலும் அவர்கள் உதவியால் வீட்டிற்கு அன்றாடம் தேவையான பொருள்களை வாங்கி அதைக் கொண்டு என் மனைவி வீட்டை நடத்தி வந்தாள். அமெரிக்கா வந்து இருநூறு நாட்கள் சென்று விட்டது ஒரு நண்பனின் உதவியோடு நாங்கள் எங்களுக்கு ஒரு கார் வாங்கினோம் அதில் தினமும் வேலைக்கு பயணம் பின்னர் மனைவியுடன் வார விடுமுறையில் நண்பர்களின் ஆலோசனைப்படி வெளியே செல்வது .ஓட்டுவதற்கு சாலைகளும் சுற்றுபுறம்களும் மிக அழகுடன் கண்ணை கவரும். எங்கும் புதுமை எல்லா இடங்களும் புகைப்படம் எடுக்க தூண்டும் விதமாக தூய்மையாகவும் அழகாகவும் இருந்தது. நானும் என் மனைவியும் அவைகள் அனைத்தையும் நிறைய புகைப்படங்கள் எடுத்து கொண்டோம்.
எங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்றது அதன் அடையாளமாக எங்களின் சந்தோஷத்தை இரட்டிப்பாக்க ஒருநாள் மாலையில் மைதிலி அந்த நற்செய்தியைக் கூறினாள்.அது அவளுக்கு நாள் தள்ளி போனதையும் மருத்துவப் பரிசோதனை அதை உறுதிசெய்ததையும் நான் அப்பா ஆகப்போவதாகவும்.எனது வாழ்க்கையில் அந்த நாள் மாலையை என்றுமே மறக்கவே முடியாது. மாதங்கள் செல்ல செல்ல மைதிலிக்குச் சோர்வு அதிகமானது இதன் காரணமாக நான் வேலையில் இருந்து சீக்கிரம் வீட்டிற்கு வந்து அவளை கவனித்துக் கொண்டு சமையலையும் மற்ற பணிகளையும் செய்து அவளுக்கு உதவி புரிந்தேன். குழந்தையின் வளர்ச்சி நன்றாக உள்ளது என மருத்துவர் கூறிட நாங்கள் மகிழ்த்தோம். மருத்துவர் குறித்த நாளும் வந்தது அன்று தெய்வத்தின் அருளால் எந்தவிதக் குழப்பங்களும் இல்லாமல் பிறந்தாள் எங்கள் குழந்தை. அவள் பிறந்தவுடன் அவளை குழந்தைகள் இருக்கும் ஒரு தனி அறையில் வைத்து உணவிற்கு மட்டும் அம்மாவிடம் கொண்டு வந்தனர் செவிலியர்கள். இது குழந்தைக்கு ஒரு விதத்திலும் எந்த தொற்று நோயும் வராமல் தடுப்பதற்கு கையாளும் வழி முறையாகும். ஒரு வாரம் மருத்துவமனையில் இருந்து விட்டு என் மைதிலியோடு எங்கள் தங்கமும் வீட்டிற்கு வந்தது.அதன் முகம் பார்த்து நாங்கள் பரவசம் அடைந்தோம்.குழந்தைக்கு பெயர் சூட்ட வேண்டும் என்ற பேச்சு வந்தவுடன் நான் சங்கமித்ரா என்ற பெயரை கூறினேன். மைதிலியும் அதை ஆமோதிக்க வீட்டு சாஸ்திரிகளை வரவழைத்து குழந்தையைத் தொட்டிலில் வைத்த பின் பெயர் சூடும் வைபவத்தையும் மந்திரங்கள் கூறி நடத்தினோம்.இதில் என் நண்பர்கள் அனைவரும் பங்கு கொண்டனர்.அமெரிக்கா வந்தபின் இந்த நாள் மிகவும் மகிழ்ச்சியான ஒன்றாயிற்று. குழந்தை பிறந்து ஒரு ஆண்டுகளுக்குள் என்னை டெட்ராய்ட் அலுவலகத்திற்கு மாற்றி அந்த அலுவலகத்தின் அதிகாரியாக்கினார்கள்.

நாங்கள் டெட்ராய்ட் நகரில் ஒரு வீடுவாடகைக்கு எடுத்து அதில் குடியேறினோம். எங்கள் மகள் வந்த வேளை எனக்கு நல்ல முன்னேற்றமும் வளமும் சேர்ந்தது.என் மனைவிக்கும் வேலை கிடைத்தது. குழந்தை வளர்ந்து நர்சரி பள்ளி செல்ல ஆரம்பித்தாள். வாழ்க்கை மிக சந்தோஷமாக சென்றது.மைதிலி மீண்டும் கருவுற்று ஒரு அழகிய மகனை பெற்றெடுத்தாள். அவனுக்கு பிரகலாத் என்ற பெயர் சூட்டினோம். வருடங்கள் ஓடி குழந்தைகள் இருவரும் பள்ளிக்கூடம் செல்லும் அளவிற்கு பெரியவர்கள் ஆகிவிட்டனர்.
குழந்தைகள் இருவரும் பள்ளியில் சேர்ந்து படிக்க என் மனைவிக்கு அங்குள்ள பொறியியல் கல்லூரியில் வேலை செய்ய, பத்து வருடங்கள் உருண்டோடி விட்டது. நாங்கள் இருவரும் ஒரு வீடு வாங்கி கொடுக்கும் வாடகை பணத்தை அதற்கு கொடுக்கலாமே என்று ஒரு எண்ணத்துடன் எங்கள் நண்பர்களிடம் அதை பற்றி கேட்டோம். அவர்கள் அதற்குள்ள வழியை தெரிவிக்க நாங்களும் ஒரு வீட்டைத் தேடினோம் ஒரு மாதம் தேடிய பின் ஒரு வீட்டை இருவரும் தேர்தெடுத்தோம், வங்கியில் எங்களுக்கு கடனும் கிடைத்தது. வீட்டை வாங்கி குடிபுகுதலும் நடத்தினோம்.
குழந்தைகளுக்கு இந்த புது வீடு மிகவும் பிடித்தது.அவர்கள் மிக மகிழ்ச்சியோடு காணப்பட்டார்கள். வீட்டில் இருந்து நாங்கள் வேலை செய்யும் இடம் இருப்பது 45-50 நிமிட கார் பயணம். காலையில் 5மணிக்கு எழுந்து வீடு வேலைகளை முடித்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு புறப்பட்டால் தான் சரியான நேரத்தில் வேலைக்கு செல்ல முடியும். நான் என்றும் இரவு சீக்கிரமாகப் படுத்து காலையில் எழுந்து விடுவேன்.மைதிலிஎனக்கு நேர் எதிர் இரவு வெகு நேரம் வேலை செய்வாள் காலையில் சிறிது தாமதமாக எழுவாள். என் வீட்டு அமைப்பு வீட்டில் நுழைந்தவுடன் கீழ் தளத்தில் வரவேற்பறை, சப்பாட்டறை, சமையலறை ஒரு குளியலறையை, மேல் தளத்தில் நான்கு படுக்கையறையோடு ஒட்டியதாக ஒரு உல்லாச அறையையும் ஒரு களிப்பறையோடு மூன்று குளியலறையையும் கொண்டது.நான் அதிகாலையில் எழுந்தவுடன் கீழ் தளத்தில் காலைக்கடமைகளை முடித்துக்கொண்டு எனக்கும் மைதிலிக்குமான காப்பியை தயார் செய்துவிட்டு, கையில் காப்பி குவளையோடு மெல்ல மாடிப்படியேறி வரும் பொழுது ஆறு மணி ஆகிவிடும். இரவு வெகுநேரம் அமர்ந்து கணினியில் தான் அன்று பொறியியல் கல்லூரியின் பரிசோதனைக் கூடத்தில் மாணவர்களுக்கு செய்து காட்டிய பரிசோதனைக்கான அறிக்கையை தயார் செய்து மின் அஞ்சலில் சமர்ப்பித்துவிட்டு வந்து படுத்தவள் அவளை காப்பியுடன் எழுப்பும் பொழுது கண்ணெல்லாம் எரிகிறது என்று சொல்லி, கண்ணைக் கசக்கியவாறு சிணுங்கிக் கொண்டு, தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தைகளின் தூக்கம் கலைந்துவிடாது மெல்ல எழ முயற்சிப்பாள். அவளை ஒவ்வொரு நாள் காலை எழுப்புவதே எனக்கு வேதனையாக இருந்தது.
எழுந்து விட்டாள் என நினைத்து நான் கீழ் தளத்தில் வந்து வர்ண வர்ணமாய் இருக்கும் உணவு பெட்டிகளில் மதிய உணவுவைத் தயார் செய்து,யாருக்கு என்ன பிடிக்குமோ அவைகளைக் குளிர்சாதனப் பெட்டியிலிருந்து எடுத்து ஆறு வயதான மூத்தவளுக்கு பிரட் நிலைக்கடலை பட்டர்வைத்து சாண்ட்விச் , நான்கு வயதான இளையவனுக்கு மகனுக்கு பிரெட் பட்டர் ஜாம், மைதிலிக்கு சீஸ்சாண்ட்விச், நூடுல்ஸ் இப்படி மூன்று பெட்டிகள் வைத்து விட்டு,எனக்குப் பிடித்த வெஜ் சாலட், வாழைப்பழம், துண்டுகளாக வெட்டிய ஆப்பிள் ஓரிரு குட்டித் தக்காளிப்பழம், சில திராட்சைப்பழங்கள் என ஒழுங்குபடுத்திக்கொண்டு என் லஞ்ச் பாக்ஸில் இட்ட பின், நான் மீண்டும் மைதிலியை அழைக்க அவள் படுத்துக்கொண்டே “ எழுந்து விட்டேன் என்பாள்” அவள் இன்னும் எழவில்லை என்பதை அவள் குரலில் கண்டுபிடித்து விட்டு மாடிப்படிகளில் ஏறிட நான் வரும் சத்தம் கேட்டு, சட்டென்று எழுந்து குளியலறை நோக்கி விரைவாள்.
தூங்கச் செல்லும் முன்பே கம்பளியிலான மெல்லிய மேல், கீழ் ஆடைகளை குழந்தைகளுக்கு அணிவித்து உறங்க வைப்பது அவள் வழக்கம். கம்பளி ஆடைகள் சூழலின் வெப்ப தட்பத்திற்கேற்ப தம்மை இசைவாக்கும் தன்மை கொண்டவை.அவள் தன் காலைக் கடமைகளை முடித்துக்கொண்டு பிறகு மெல்லத் தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தைகளை எழுப்புவாள். மாலை எட்டு மணிக்கெல்லாம் தூங்க வைப்பத்தால் காலையில் எழுப்புவது சிறிது இலகுவாக இருக்கும். மெத்தையை கொஞ்சிய படியே தூங்கும் அவர்களை எழுப்ப கம்பளி ஆடையில் கத கதப்போடு இருக்கும் அவர்களுக்கு பஞ்சுகளை உள்ளே வைத்து தைத்த கனத்த குளிராடையை அணிவிப்பாள்.
மெல்ல அவர்களை ஒவ்வொருவராக கழே இறக்கி கொண்டுவந்து குளிர் பெட்டியில் வைத்து பதனிடப்பட்ட பசும்பாலை கொடுப்பாள். மீண்டும் ஒவ்வொருவராக தொப்பி, கையுறை அணிவித்து, கனத்த, குளிருக்கான காலணிகளை அணிவித்துக்கொண்டிருக்க,நான் வெளியில் சென்று அன்றிரவு கொட்டிய பனியை அகற்றி, பின் காரை இயக்கி வைத்து சூடாக்கியை போட்டுவிட்டு ஷெட்டில் இருந்து காரை வெளியில் எடுப்பதற்கு வசதியாக பனிக்கட்டிகளை ஓரமாக இரு மருங்கிலும் ஒதுக்கிவிடுவேன்.இவ்வளவும் ஏழுமுப்பத்துக்குள் நடந்து முடிந்திருக்க வேண்டும்.பின்னர் படிகளில் ஏறிவந்து வெளிக்கதவிற்கு முன்னால் “என்ன தயாரா” என்று கேட்கவும் அவள் தனது குளிராடையைப் போட்டுக்கொண்டு காலனியை போடவும் சரியாக இருக்கும். குழந்தைகளை கவனமாகக் காரில் ஏற்றிவிட்டு மீண்டும் ஒரு முறை எல்லோரும் தங்கள் மத்திய உணவை எடுத்து கொண்டார்களா எனப் பார்த்துவிட்டு வீட்டுக் கதவு பூட்டப் பட்டிருக்கின்றதா என்று மறுபடியும் சரி பார்த்துவிட்டு புறப்படும்போது கும்மென்ற இருட்டில் பூம்பனி சொட்டச் சொட்ட கிறீச் கிறீச் என்ற வைபரின் (windshield wipers) சத்தம் கேட்டுக்கொண்டிருக்கும்போதே ஐந்து நிமிடத்தில் விர் என்று காரை செலுத்தி நிறுத்திவிட்டு, குழந்தைகள் இருவரையும் பள்ளியில் விட்டுவிட்டு அவர்களைக் காலை உணவு உண்ண செய்துவிட்டுக் கையசைத்து விடைபெறும் போது நேரம் கிட்டத்தட்டஏழு நாற்பதைத் தாண்டியிருக்கும். காரில் வந்து அமர்ந்து மைதிலியின் பொறியியல் கல்லூரிக்குச் செல்லும் பாதையில் பழைய தமிழ்பட பாடல்களை போட்டுக் கேட்டுக்கொண்டு .மைதிலியை கல்லூரியின் வாசலில் இறக்கிவிட்டு, நான் வேலைக்குச் செல்ல காரை வேறு திசையில் திருப்பி தடையில்லா ரோட்டில் (Free way)பயணிப்பேன். பொறியியல் கல்லூரியில் நடக்கும் எல்லா விரிவுரை நிகழ்வுகளுக்கும் மைதிலியால் இருக்க முடியாது ஆகவே ஒரு ஐந்து மணி அளவில் கல்லூரியை விட்டு கிளம்பிவிடுவாள்.நான் அந்த நேரத்தில் அங்கு சென்று அவளை காரில் அழைத்துக் கொண்டு வீட்டில் விட்டு விட்டு , பின் குழந்தைகளை நர்சரி பள்ளியில் இருந்து கூட்டி கொண்டு வருவதற்கு செல்வேன். நான் அவர்களை அழைத்துக் கொண்டு வருவதற்குள் மைதிலி அவர்களுக்கும் எனக்கும் தனக்கும் வேண்டிய இரவு உணவை செய்து முடித்திருப்பாள்.பின் இருவரும் குழந்தைகளுடன் விளையாடி அவர்களுக்கு உணவளித்து படுக்கையில் உட்காரவைத்து அவர்களுக்கு கதை படிப்போம்.படித்து கொண்டிருக்கும் பொழுதே குழந்தைகள் தூங்க தொடங்கும்.
சில நாட்கள் அவர்களுடன் அவளும் படுத்து உறங்குவாள். அவள் இரவு உணவை உண்ணாமல் படுத்துவிட்டதால் அவளை எழுப்புவேன்.அவள் எழுந்ததும் இருவரும் உணவு உட்கொண்டு இருக்கையில் அவளுக்கு அன்றைய அறிக்கை எழுதுவது நினைவுக்கு வர பதைபதைப்போடு உடனே கணினிக்கு செல்வாள்.நான் அவளிடம் என் அறைக்கு செல்வதாக கூறி இனிய இரவு வாழ்த்துக்களைத் தெரிவித்து செல்வேன் அவள் அறிக்கை எழுதி முடித்து மின் அஞ்சலில் அனுப்புவதற்கு நடுநிசி ஆகிவிடும் . ஒவ்வொரு நாளும் இப்படியே நகர்ந்து கொண்டிருந்தது..அந்த நாளும் அப்படிதான் சென்றது. இரவு விழித்திருந்து அன்றைய நாள் கல்லூரி பரிசோதனைக் கூடத்தில் செய்த பரிசோதனை ஒன்றின் அறிக்கையை செய்து முடித்த பின் மின் அஞ்சலில் சமர்ப்பித்துவிட்டு படுத்தவுடன் ரிங் ரிங் என்ற சத்தம் கேட்கவே யார் இந்த நேரத்தில் என்று எண்ணியவாறே ஒரு வேளை இந்தியாவில் இருந்து அம்மாவோ எனப் பரபரப்போடு அவசரமாக தொலைபேசியை எடுக்க கண்ணைக் கசக்கியவாறே எழுந்தாள்.
சத்தம் கேட்கும் திசை நோக்கி விரைந்தாள். மேசைமேல் இருந்த மின்விளக்கின் மங்கலான ஒளியில் கைப்பேசியின் அலாரம், அருகே அலங்கரிக்கப்பட்ட கவர் அதனுடன் ஓர் சிறிய பெட்டி, சிவப்பு ரிப்பன் கட்டப்பட்டு இங்கே வா என்று அழைப்பதுபோல் இருந்தது. பக்கத்து அறையின் திறந்து விடப்பட்ட கதவினூடே சிரிப்பொலி எழுப்பியபடி கட்டிலில் படுத்துக்கொண்டபடியே “இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மைதிலி ” என்றேன்.
அவளுக்கு இன்பமான ஒரு மகிழ்ச்சி.அன்று தனது பிறந்தநாள் என்பதே அவளுக்கு அப்போதுதான் நினைவுக்கு வந்தது. பெட்டியை திறந்து பார்த்தாள், அவள் வெகு நாட்களாக வாங்க வேண்டும் என்று ஆசைப்பட்டுக்கொண்டிருந்த, வெள்ளியில் முத்துக்கள் கோர்க்கப்பட்ட ஓர் கழுத்து மாலை பளபளத்துக் கொண்டிருந்தது... ஓடிவந்து என்னை இறுக அணைத்துக்கொண்டாள்.
அன்றைய காலைப்பொழுதினை ஆங்காங்கே பரிசுப்பொருட்களை வைத்து மைதிலிக்கு இன்ப அதிர்ச்சியூட்ட,அவளுக்கு பிடித்த பூரி மசாலா,ரச வடை, ரோஸ் மில்க்,ரஸ் மலாய்,ஜாமூன் ஆகியவைகளை செய்து அழகாக உணவு மேஜையில் வைத்து விட்டு அவளை கூப்பிட்டேன் ,சிறு சிறு பரிசுப்பொருட்கள் ஒரு பூக்கொத்து கைகளில் இருக்க குழந்தைகளையும் அங்கு பக்கத்தில் நிற்க வைத்துக்கொண்டு நான் நிற்பதை கண்ட மைதிலி குதூகலத்துடன் ஓடி வந்தாள் என்னருகில் வந்து குழந்தைகளைக் கட்டி அணைத்து உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி எனக் கூறிஅவளது உணர்ச்சிகளை வெளியிட்டாள்.
நான் உடனே எனது குரலில் அவளுக்கு மட்டும் கேட்கும் விதமாக பாட ஆரம்பித்தேன் .....
மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம்.
மனது மயங்கியென்ன
உனக்கும் காலம் வரும்
இரவில் நிலவொன்று உண்டு
உறவினில் சுகமொன்று உண்டு
மனைவியின் கனவொன்று உண்டு
எனக்கது புரிந்தது இன்று

அவளும் உடனே…..

நாதமெனும் கோவிலிலே
ஞான விளக்கேற்றி வைத்தேன்
ஏற்றி வைத்த விளக்கினிலே
எண்ணை விட நீ கிடைத்தாய்

எனப் பாடிட
இருவரும் சிரித்தபடி குழந்தைகளைப் பள்ளிக்கூடம் செல்ல தயார்செய்ய ஆரம்பித்தோம்.மீண்டும் நாள் பரபரப்போடு இயங்க ஆரம்பித்தது.

எழுதியவர் : கே என் ராம் (18-Sep-24, 2:50 pm)
சேர்த்தது : கே என் ராம்
பார்வை : 46

மேலே