விருப்பமில்லை எனக்கு
ஆங்காங்கே சிதறிக்கிடக்கும்
உறவுகள் ஒன்று கூடும் ...
குலதெய்வ வழிபாடு ....
பங்காளி , கொண்டான் குடுத்தான் என
எல்லா உறவுகளும் ஒருசேர
ஒரு வாரத்திற்கு முன்பே
கலந்து பேசி தேதி குறித்து ...
பயணத்திற்கு என வாகனமும் தயார் செய்து
சிரிப்பு , கூத்து கும்மாளம் குதூகலம் என
கல கல வென தொடரும் பயணம்
பால்ய நினைவுகளை
அசை போடும் அத்தை மாமாக்கள்
அந்த காலத்துல நாங்க இப்படியா ......
என அலுத்துக்கொள்ளும் தாத்தா பாட்டிகள்
அம்மா எடுத்து வைக்க மறந்த
இலைகட்டுக்கு இரைச்சலிடும் அப்பா
சமாதான படுத்தி அமரும் சித்தப்பாக்கள் .
இவர்களின் கவனத்தை எல்லாம்
திசை திருப்பும்
பாட்டுக்கு பாட்டு நிகழ்வும் ,
பரிகாச நடனங்களும்
அவ்வப்போது நாம் போகும் பாதையை
உறுதி செய்ய ஜன்னலோர இருக்கைக்கு
சண்டை இடும் சகோதர உறவுகள் ...
ஒவ்வொரு நிறுத்தத்திற்கான
அடையாளங்களும் அழியாமல் உள்ளன என்பதை
என உறதி செய்யும் உரையாடல்கள் ....
இப்படி இன்னும் எத்தனை எத்தனையோ
நம்மை கடந்து போகும்
பசுமை நிகழ்வுகளை காண முடியாமலும்
உள்ளம் மகிழ
உறவுகளுக்குள் உழன்று கொண்டிருக்கும்
உல்லாச பொழுதுகளையும் ...
ஒட்டு மொத்தமாய் பிடுங்கி தின்றுக்கொண்ட
பெருமிதத்தில் சத்தமிடும்
இந்த வண்ணத் திரைப் பேருந்தில்
பலிகொடுக்க உடன் எடுத்துச் செல்லும் ஆட்டுடன்......
பயணிக்க சற்று கூட விருப்பமில்லை எனக்கு .
சசிகலா