துயில் கொள் என் அன்புத் தோழி...(தோழிக்குத் தாலாட்டு)

கவி படைக்கும் என் ஆவிதனை
தோழி உன் துயில் படைக்க ஏவுகிறாய்..!
உயிர்க் கொண்ட உண்மையென நம் உயிர்த்தோழமை ஊறியதால்
என் தனித்தோழி தாரகைக்குத் தாலாட்டுப் பாட முனைகிறேன்..!

சிலிர்க்கின்ற இளங்காற்றில் இக்கவி உன்
சின்னஞ்சிறு செவியோடு சிற்றின்பமாய் ஒலிக்கட்டும்..!
அதோ..வானில் நிற்கும் வெண்ணிலவில் வண்ணம் பல புதைத்துள்ளேன்,
இனி நீ காணும் இருள் கூட உன் கண்களில் குளிரட்டும்...!
கூவும் சிறு குயில் கூட இதோ உன் குரலோடு இசைப் பாடட்டும்...!
மேவிய சுகந் தனை உன் மேனி உன்னில் பரப்பட்டும்..!
காவிய ராணிகள் கூட உன் கவின் உறக்கங் கண்டு காதல் கொள்ளட்டும்...!
அன்பு கொண்ட உன் கண்கள் சற்று அழகாக உறங்கட்டும்..!

ஆம்...
கண்கள் மூடு...கனவுகள் பிறக்கும்...!
பிறக்கும் கனவுகள் உன் பெயர்ச் சொல்ல நிகழட்டும்..!
நிகழும் அதுவோ, இனி உன் நிழல் மட்டும் போட்டியென கொள்ளட்டும்..!
தோள் கொடுக்கும் நான் இதோ உனக்காக தொட்டிலும் இட்டுள்ளேன்..,
தூயவள் உன் துயில் என் மடி மீது பிறக்கட்டும்...
இக்கவியோடு சேர்த்து...!

-ராம் K V

எழுதியவர் : ராம் K V (17-Jan-12, 9:51 pm)
பார்வை : 612

மேலே