சமர்பிக்கிறேன் உன் காலடியில்

ஒரு நாள்
தலைவலி என்று
களைத்து சாய்ந்தேன்
சோபாவில் . .

ஒரு நிமிடம்
என்னை பார்த்த நீ
மடியில் வாரி
போட்டுக் கொண்டு
இதமாய் தடவினாய்
தைலத்தை . . .

இறுக கட்டி கொண்டு
உன் மடியில் கண் மூடி
படுத்திருந்த என்னை
உறங்குகிறேன் என
நினைத்து மெதுவாய்
தொலைக்காட்சியின்
ஒலியை குறைத்தாய் . . .

பால் குடித்த பிள்ளை
பசியாறி உறங்குகையில்
அதன் எச்சில் துடைத்து
இதமாய் தட்டிக் கொடுக்கும்
அன்னை போல்
காற்றில் கலைந்த
என் சேலையை சற்றே
இழுத்து போர்த்தினாய்

நெஞ்சம் நெகிழ்ந்து
கண்ணீர் விட்டேன்
வலிக்குதாடா இன்னும் .. ?
என்று நீ கேட்ட கேள்வியில்
நொறுங்கி விட்டேன்

நெற்றி சுழிப்பில்
என் நோவு தெரிந்து
இன்னும் ஒரு முறை
மருந்து தடவுகையில்
என் அன்னை
தோற்றாள் உன்னிடம் . . .

உனக்கு தெரியுமா
நான் அன்று
கொஞ்சம் கூட
தூங்கவேயில்லை என்று . .
கஷ்டப்பட்டு என்
பெருமூச்சுகளை
சிறு மூச்சாய்
விட்டு கொண்டிருந்தேன் . . .

விழிப்பது போல்
சோம்பல் முறித்து
எழுந்து உன்னை பார்க்கையில்
தான் தெரிந்தது
விறுத்துப்போன கால்களையும்
ஆட்டாமல் எனக்காய்
நீ அப்படியே வைத்திருந்தது
கலியுக கர்ணனடா நீ எனக்கு . . .

நான் உனக்கு
என்ன செய்யப் போகிறேன்
என் நட்பை உன் காலடியில்
கிடத்துவதை தவிர . . .

எழுதியவர் : honey (30-Jan-12, 11:35 am)
பார்வை : 389

மேலே