அந்தி சாயும் நேரம்..!
அந்தி சாயும் நேரம் -எந்தன்
ஆவி போகும் தூரம்!
வந்து நின்று நீயும் -காதல்
வார்த்தை சொல்லப் போமோ?
கூடி வாழ்ந்த நாட்கள் -அன்பைக்
கொடுத்து வாழ்ந்த நாட்கள் !
வாடி நின்ற நாட்கள் -தேவை
வளர்ந்து நின்ற நாட்கள்
ஓடிச் சென்ற போதும்-இந்நாள்
உணர்வே இல்லா நாட்கள் !
தேடி வந்து நீயும் -அந்நாள்
திரும்பக் கூட்டு வாயோ?
இளமை தந்த மோகம் -புதிய
இணக்கம் தந்த வேகம்,
கழியும் பொது கூடக்-கண்கள்
காண மறுத்த நாட்கள் !
அழகுப் பிள்ளை ராகம் -பின்னர்
அது ந டந்த வேகம்
பழகிக் கண்ட இன்பம் -மீண்டும்
படித்துக் காட்டு வாயோ?
பள்ளி சென்ற பிள்ளை -வந்து
படித்த வற்றைச் சொல்லி
அள்ளி அள்ளித் தந்த-கேள்வி
அணைக டந்தும் ஓட
எள்ளி வியர்த்துத் தள்ளி மீண்டும்
இரவில் நம்முட் பேசித்
துள்ளி மகிழ்ந்த நாட்கள் -இன்னும்
தொடரச் சொல்லு வாயோ?
துள்ளி வளர்ந்த பிள்ளை -தன்னுட்
துடுக்கும் அடங்கி நின்றாள்!
தள்ளி ஒதுங்கிப் போனாள்!-வானைத்
தரையைப் பார்த்துப் பாடி
உள்ளுக் குள்ளே மகிழ -நாமும்
ஒளிந்து மறைந்து கேட்டோம்!
புள்ளி வைத்த நிலையில்- இன்று
புறத்தில் கிடக்கி றேனே!
அந்தி சாயும் நேரம் -எந்தன்
ஆவி போகும் தூரம்!
வந்து நின்று நீயும் -காதல்
வார்த்தை சொல்லு வாயோ?
-௦௦-