என் குழந்தையும் நானும்! (பகுதி இருபத்து)
சிலநேரம் நீ
வயிற்றிற்குள் அசைவதே
இல்லை,
பதறிப் போவேன்..
சூடாக ஏதேனும் குடி அசையும் என்பார் அம்மா.,
சூடு ஒருவேளை உனக்கு பட்டுவிடுமோ என்று அஞ்சி
யாருமில்லா அறைக்கு சென்று
வயிற்றில் கை வைத்து
ஏய்....... என்ன செய்கிறாய் அப்பாவிடம்
சொல்லவா என்பேன்,
எட்டி............ ஒரு உதை விடுவாய் நீ
எனக்குத் தான் சுளீர் என்று வலிக்கும்!!
அவ்வப்பொழுது
வயிற்றில் கீறியது போல்
சுள்..ளென்று வலிக்கும்,
வெளியே வந்ததும் உனக்கு
முதலில் நகத்தை வெட்டிவிடவேண்டும் என்று
எண்ணிக் கொள்வேன்..
நகத்தை நினைத்ததும்
விரல் எப்படி இருக்குமோ
கை கால் முகம் எப்படி இருக்குமோ..
என்னவெல்லாம் செய்வாயோ
எப்படியெல்லாம் பேசுவாயோ என
உன் கனவுகள் - நீ வரும்
நாளுக்காய் நீளும்
நீ மீண்டும் எட்டி ஒரு
உதை விடுவாய்
நகம் வைத்து வயிற்றில் கீறுவாய்
வயிற்றை பிடித்துக் கொண்டு
சுருண்டு படுத்துக் கொள்வேன்
அந்த படுத்திருந்த நாட்கள்
பெற்றபின் -
பெற்ற குழந்தைகளுக்கு
அத்தனை ஒன்றும் பெரிதாகத் தெரிவதில்லை!!