தமிழ்க் கவிதைத் தரம் தொடர்ச்சி [1.3] ..
நல்ல தமிழ்- செந்தமிழ் என்று நினைக்க வேண்டாம்- பேச வேண்டும் என்று கேட்டுக் கொள்ளும் கவிஞர் அடுத்து ,கவிஞர்கள் எப்படிப் பட்ட பாடுபொருள்களைத் தேர்ந்து பாடலாம் என்பதைப் " பாடுக பாட்டே" என்ற பாடலில் வரிசைப் படுத்துகிறார் அதைப் பார்ப்போமா:
"புரையோடிக் கிடக்கின்ற குமுகா யத்தின்
புண்ணுக்கு மருந்தாகும் பாட்டைப் பாடு!
குரைக்கும்நாய் குரைக்கட்டும் வெறிபி டித்தே
குதிக்கட்டும், கொள்கையினை உரக்கப் பாடு!
திரைமறைவுச் செயல்களினால், தீய நோக்கால்,
தேய்பிறையாய் இளைக்கின்ற பொதுந லத்தை,
அரைகுறைகள் போடுகிற ஆட்டம் தன்னை,
ஆர்ப்பரிப்பை அஞ்சாமல் அதிரப் பாடு!
சழக்கர்களின் முகத்திரைகள் கிழியப் பாடு!
சரிந்துவிட்ட வரலாற்றை மீட்கப் பாடு!
கிழக்கினையே மேற்கென்னும் கிறுக்கர் கூட்டக்
கேடுகளை நாடெங்கும் அறியப் பாடு!
முழங்குவதில் ஒன்றாகச் செயலில் ஒன்றாய்
முன்மொழிவோர் புரட்டுகளை முனைந்து பாடு!
வழங்காத பெருங்கொடியர் இரக்கம் இல்லா
வன்மனத்தர் புனைவுகளை விளங்கப் பாடு!
தென்றலுக்குத் தடைபோடத் துணிவார் உண்டோ?
தென்மாந்தும் வண்டுகளைத் தடுப்பார் உண்டோ?
அன்றாடம் ஏய்ப்போரை , எதற்கும் யார்க்கும்
அடங்காதார் படுத்துகிற பாட்டைப் பாடு!
குன்றத்தைக் கையிரண்டா மறைக்கும்? வானக்
குளிர்நிலவைக் கைகளினால் மறைக்கப் போமோ?
கன்றிழந்த தாயாகக் கதறு கின்ற
கடும்,உழைப்புத் தோழர்களின் உணர்வைப் பாடு!
எல்லோர்க்கும் எல்லாமும் கிடைக்கப் பாடு!
ஏதிலியர் வாழ்விழந்தார் இருளைப் பாடு!
வல்லாண்மைச் செருக்குடையோர் நொறுங்கி வீழ
வழிகாட்டும் போர்ப்பண்ணே பாடு! நாளும்
தொல்லைகளைத் தொடர்ந்தளித்து மகிழ்வோர் போக்கைத்
துணிவோடு நெஞ்சுரத்தால் துலங்கப் பாடு!
நல்லோரின் உள்ளமெலாம் புகழும் வண்ணம்
நாடு,மொழி, இனம்சிறக்க நாளும் பாடு!"
...காதலை, யாருமே சொல்லாமலே, கவிஞர்கள் பாடுவார்கள் என்று கவிஞர் -கடவூர் மணிமாறன் அவர்கள் - நினைத்தாரோ என்னவோ அதை இந்தப் பட்டியலில் விட்டுவிட்டார்!
இன்னும் இது போன்ற சிறந்த பாடுபொருள்களைத் தேடிப் பாடுவதற்கு நம் 'எழுத்து டாட் காம்' கவிஞர் களுக்குச் சொல்லித்தர வேண்டுமா என்ன?
நன்றாகவே நல்ல தமிழிலேயே இன்றுபோல் என்றும் எழுதி நிலைத்து வாழ்வீர்கள் என்ற நம்பிக்கையில்[விசுவாசத்தில்]விடைபெறுகிறேன். நன்றி. வணக்கம்.
....தமிழ்க் கவிதைத் தரம் [1 ] நிறைவுறுகிறது.