கடவுள் பக்தி

----கல் அல்ல கடவுள்----

ஈரோட்டு கிழவனுக்கு
செவி கொடுக்காதவர்கள்.
என் மை பாட்டுக்கா
மனமாறிவிடுவார்கள்?

கொல்லப்படுவோம் என்று தெரிந்தும்
கொசுக்கள் கடிப்பதை நிறுத்துவதில்லை.
அப்படித்தான் என் கவியும்.

நேரடியாக கேட்டுவிடுகிறேன்
நெருஞ்சி முள் கேள்விகளை
உங்களிடம்..

வாரம் ஒருமுறை கோவிலுக்கு
வந்து வணங்குபவனை
வாழவைப்பவன் இறைவன் என்றால்
வருடம் தோறும் வாசலில் கிடக்கும்
பிச்சைக்காரன் இன்று
பில்கேட்ஸ் ஆகியிருக்கவேண்டுமே?

தாய்ப்பால் இல்லாமல்
என் பச்சிளம் பிள்ளைகள்
விடிய விடிய
விரல் சூம்பி
விரதமிருக்க...

இங்கு
வாய் வரைந்த சிலைகளுக்கு
வகை வகையை படையல்கள்.

நெல்லுக்கு பாய்ச்ச நீரில்லை
கல்லுக்கு பாலாபிசேகம்.

யாகம் வளர்த்தால்
மழை வருமென்று
யார் சொன்னது?
அப்படியென்றால்
சிரப்பூஞ்சி மழைக்கு
சிறப்பு பிராத்தனை செய்த
சித்தர்கள் யார்?

தூணிலும் துரும்பிலும்
இறைவன் இருப்பதாய்
துதிபாடுவோரே!

சுவரில் ஆணி அடிக்கிறப் போது
உன் ஆண்டவன்
அரையப்படுகிறான் என்று
அறிந்ததில்லையா ?

ராணுவ வீரர்கள்
எல்லையில்
ரணபடுகிற போது
காவல் தெய்வங்களுக்கு
கிடா வெட்டி
விழா எடுத்து கொண்டிருந்தோம்.

என்னதான்
மார்பிலே பால் சுரந்து
மக்களை காத்தாலும்
அன்னை என்றுமே
அடுப்படி எடுபிடி.

திடிரென
மரத்திலே பால் வடிந்தால்
மகமாயி மகமாயி.....

தேன்நிலவுக்கு போகாமல்
குழந்தை வரம் கொடுக்கும்
கோயிலுக்கு சென்று என்ன பயன்?

கருமுட்டைகளும்
விந்தணுக்களும் மலடாகி
பாலியல் மருத்துவம்
பலனளிக்காமல்
கோவிலுக்கு செல்லும்
கொள்கையுடைய நீங்கள்
ஒரு ஆதரவற்ற குழந்தையை
தத்தெடுப்பதில்
என்ன தர்ம சங்கடம்?

அன்னை திரசா
அண்ணல் காந்தி
இவர்கள் எல்லாம்
ஜீவராசிகளாக
மாறிப்போக

அருள் வேண்டி வரும்
கன்னிகளை
இருள் அறைக்குள்
அன்னையாக்கிவிடும்
சல்லாப சக்திகளை
சாமி என்று
சாயம் பூசிவிட்டீர்கள்.

நான் மனிதன் என்று சொன்னால்
நகைத்து
இவன் பைத்தியம் என்பீர்கள்.

நான் சாமி என்று சொன்னால்
நம்பி
இவனே பரமபொருள் என்பீர்கள்.

பைத்தியமே
உன் பகுத்தறிவு
பாராட்டுக்குரியது.

எங்கோ இருக்கும் கோவிலுக்கு
போய்வந்தால்
எல்லாம் கிட்டும் என்பது
உண்மையாயின்
உன் வீட்டு பூஜையறை
சாமிக்கு சக்தி இல்லையா?

செய்வினையால் ஒருவரை
செயலிழக்க வைக்க முடியுமென்றால்
யாரேனும் ஒருவர்
ராஜபக்சேவுக்கு வையுங்கள்
செத்துமடியட்டும்.

உனக்கு உயிர் தந்தவள்
அன்னை என்பது
உண்மையென்றால்
என் கணக்குப்படி
சிலை தந்த சிற்பி தான்
ஆண்டவனுக்கு அப்பன்.

சிந்தித்துப் பாரப்பா....
உண்டியலுக்கும்
திருவோடுக்கும்
என்ன வித்தியாசம்?
இதில் நீ யாருக்கு பிச்சை இடுகிறாய்?

உதவும் கரத்தை விட
உயர்ந்த கடவுள்
உலகில் இல்லை.

வீதியில்
கிழிந்த உடையுடன்
விழுந்து கிடக்கும்
அழுக்கு முதியவர்களை
அன்புக்கரம் கொடுத்து
குளிக்க வைத்தால்
ஆயிரம் கும்பாபிசேகம்
நடத்தியதற்கு சமம்.

நீ செய்கிற ரத்த தானத்தை விட
ஒரு புனிதமான தீர்த்தம்
இந்த பூமியில் இல்லை.

ரத்தம் கேட்கும்
எந்த இரட்சகரும்
சாமியே இல்லை.

உன் அருகில் உள்ளவன்
அழுகும் போது
அவனை அரவணைத்து
அறுதல் சொல்
அதுவே ஆன்மிகம்.

உன் இறைவனை
உயர்திணையில்
உட்கார வைத்த நீ

அஃறிணைக்கே அருகதையற்ற
கல்லையா கடவுள் என்பது..?

கல்லை வழிபடும்
உங்கள் கூற்றுப்படி
உலகிலே பெரிய கடவுள்
இமய மலைதான்.

கல்லுக்குள் ஈரமே இல்லை.
இறைவன் எங்கிருப்பான்.

ஐயோ என் இறைவா
நீ இல்லை என்றா
கத்துகிறேன்.?

நீ கல் இல்லை என்பதை
இந்த விபரமற்றோர்க்கு
எப்படி விளக்கப் போகிறேன்?


---தமிழ்தாசன்----

எழுதியவர் : ---தமிழ்தாசன்---- (21-Apr-12, 1:49 pm)
Tanglish : kadavul pakthi
பார்வை : 335

மேலே