எல்லோரும் சந்தோஷமாக இருந்தோம் !
பணம் இருந்தும்
கொடுக்க மனம் இல்லாத
உலோபியைப் போல்
நீர் இருந்தும்
வற்றிக் கொண்டிருக்கும்
குளத்தில்
மீன்கள்
தங்கள் இறுதி நாட்களை
எண்ணிக் கொண்டு
சகதியில்
நெளிந்து கிடந்தன !
கரையில் நின்று
கவனித்த எனக்கு
கண்ணீர் வந்தது !
வானத்தைப் பார்த்தேன்
மூச்சை நன்கு இழுத்துக் கொண்டு
வானம் பார்த்து
"ஏ ! இயற்கையே !
எங்களுக்காக இல்லையென்றாலும்
இதோ இந்த
மீன்களுக்காக வேண்டியாயினும்
மழை பொழியக் கூடாதா ?
இவர்களை நீயும்
கைவிட்டால்
வேறு எவர்தான்
அரவணைக்கப் போகின்றார் ?
பாறையைப் போல்
இறுகிக் கிடைக்காமல்
ஒரு தாயைப் போல்
இளகி அன்பால் அவர்களை
மழைக் கரம் கொண்டு
தூக்கி விடு !" என்று
ஒரு தவ யோகியைப் போல்
கண் திறந்து தவம் இருந்தேன் !
நான் அந்த மீன்களின் மேல்
வைத்த பற்றைத் தவிர
வேறெந்த புற்றும் என்னைச் சுற்றி இல்லை !
அதிசயம் என்று பெயரிடுவார்
அந்த வான விளைவை
அடுத்த நாள் கண்டவர்கள் !
கொட்டித் தீர்த்தது மழை
மூன்று நாட்களாய் !
எல்லா நீர் நிலைகளைப் போல
நான் ஏங்கிய குளமும்
நிறைந்து வழிந்தது!
கரையில் நின்று
அன்று கலங்கிய
மீன்களைப் பார்த்தேன்
துள்ளி ஓடின!
நான் சற்று தள்ளி நின்று
ஆகாயம் பார்த்து
"எம் மீது அன்பு காட்டிய இயற்கையே!
என் நெஞ்சார்ந்த
வணக்கங்கள் !
என்றைக்கும்
உங்களுக்கு நன்றி பாராட்டுவேன்
அதில் இருக்காது சுணக்கங்கள் !"
என்று கை தொழுது நெகிழ்ந்தேன் !
சுருண்டிருந்த மேகங்கள்
விர்ரென்று எழுந்தன!
கலைந்தன! அலைந்தன!
ஓடி மகிழ்ந்தன !
ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டன!
கண்களால் சிரிப்பு
மின்னலை வெட்டிக் கொண்டன!
இடி நகையால் நான் சொன்ன
நன்றிக்கு o.k. o.k. என்று கை தட்டி
என்னை ஆட்கொண்டன !
அப்போது
மீன்கள், மேகங்கள் மற்றும் நான்
என எல்லோரும்
சந்தோஷமாக இருந்தோம் !