'ஆல்கஹால்' அரக்கன்... அழியும் சமுதாயம்...!

வருங்கால இந்தியா
இளைஞர்கள் கையில்...

இளைய சமுதாயமோ
இன்று...
மதுவின் பிடியில்...

நாட்டின் வளமான
எதிர்காலத்திற்கு
பாடு படக்கூடிய இளைஞர்கள்
தங்களை கெடுத்து...
நாட்டின் வளர்ச்சிக்கு
உயிர் கொடுத்து வருகின்றனர்.

கல் சுமந்து....
கண் விழித்து ஆட்டோ ஓட்டி...
கல்லடி பட்டு கட்டிடம் கட்டி...

சம்பாதிக்கும் பணத்தை எல்லாம்,
மதுக்கடையில் கொட்டி...
பாடையில் செல்ல
பாஸ்போர்ட்' எடுக்கின்றனர்.

அன்று...
நாம் அடிமைப்பட்டு கிடந்தோம்...
ஆனால், அப்போது
எந்தன் இளைஞர்கள் ரத்தத்தில்
வீரம் இருந்தது...
மானம் இருந்தது...
வெற்றி பெறவேண்டும்
என்ற வேகம் இருந்தது...

ஆனால், இன்றோ...
ரத்தம் முழுவதும்
'ஆல்கஹால்' அரக்கன் புகுந்து...
அரசு துணையுடன்,
அசுர ஆட்சி புரிகிறான்...!

கருவறையில்
இடம் கொடுத்து,
கண் உறக்கம் மறந்து...
பெற்றெடுத்த
தியாக தாய் வேண்டாம்...

உதைத்த உதைகளை தாங்கி,
தோளில் சுமந்து வளர்த்தெடுத்த
தந்தை வேண்டாம்...

உன் வாழ்க்கையை
பங்கிட வந்த
பூ மகள் வேண்டாம்...
குட்டி குட்டி
குழந்தைகளின்
சிணுங்கும் பூஞ்சிரிப்பு வேண்டாம்...

எதுவும் வேண்டாம்,
ஒரு குட்டி பாட்டில்
'விஷம பானம்' போதும்
என்ற மனநிலையில்
பூமித் தாய்க்கு பாரமாய்...
உணர்வில்லாத உயிர்கள்
இன்றும்
உலா வரத்தான் செய்கின்றன.

மூடர்களே...
உங்கள் வியர்வை
துளிகளை கூட
எந்தன் பாரத தாயின்
பாதத்தில் சிந்தி விடாதீர்கள்...!
கொஞ்சம்.. கொஞ்சம்...
எஞ்சி இருக்கும்
அதன் புனிதமாவது மிஞ்சட்டும்...!!!

எழுதியவர் : கதிர்மாயா (14-Jun-12, 7:55 pm)
பார்வை : 277

மேலே