குப்பைத்தொட்டியின் குமுறல்
செத்த எலியையும் பூனையையும்
என் தலையில் போட்டீர்கள்
பொறுத்துக்கொண்டேன்
நாற்றமெடுக்கும் குப்பைகளையும்
என் முகத்தில் எறிந்தீர்கள்
அதையும் சகித்துக்கொண்டேன்
கள்ளகாதல் குழந்தையை
என் மடியில் போட்டீர்கள்
பாவத்தையும் தாங்கிக்கொண்டேன்
செல்லாத ரூபாய் நோட்டுகளால்
என் வயிற்றை நிறைத்தீர்கள்
அதையும் பொறுத்துக்கொண்டேன்
எங்கோ நடக்கும் கட்சி கூட்டத்துக்கு
என் உடம்பு முழுவதும் சுவரொட்டிகள்
இனியும் பொறுக்க முடியாது
இனிமேல் உங்கள் வீதியிலே
இருக்க எனக்கு தலைவிதியா?