சீசாவின் பூதம்
நாயர் கடை மசால்வடை
செட்டியார்கடையின் சீனி
இந்தியன்வங்கியின் டி.டி
தபால் ஆபிசின் கார்டு,கவர்
ஸ்டாம்ப்
பேன்சி ஸ்டோரின் கோஷா ஊசி
பிளாஸ்டிக் வயர்,நூல்கண்டு
வாத்தியார் மொபட்டின் பஞ்சர் ஒட்டு
பெரியவாத்தியார் வீட்டு
அலமாரியின் கைப்பிடி
தமிழ்வாத்தியார் வீட்டுத்
துணிச்சலவை
..........இவையெல்லாம்
சிரமமின்றி செய்வான்
வகுப்புக்குள் போகாமல்
வெங்கடேசன்...
ஆசிரியர்களின்
தேவைக்கு ஒரு சீசாவின் பூதம்
வெங்கடேசன்
'இவை யாவும் உன் வேலையா,
படிக்க வந்தாய்-படித்தாயா..? '
புதிய ஆசிரியர் கேட்டார்
பள்ளியின்
கால் நூற்றாண்டுவாசிகள்
மகஜர் எழுதிப் போட்டனர்
புதியவர் மீது ,
"மாணவர்களையும் பெற்றோர்களையும்
தூண்டிவிட்டு
எங்களின் மன நிம்மதி குலைக்கும்
புதிய ஆசிரியர் மீது
நடவடிக்கை எடுக்கவும் !!"
கேட்கவில்லை
ஒருவரும்
புதிய ஆசிரியரைத் தவிர ,
"வெங்கடேசா
ஒரு வருடம் முழுதும்
ஒழுங்காய் ஏன் நீ
படிக்கவில்லை ?? "
புதியதாய் வந்தவர்
புதிராய் போனார்.
"இந்த வருடம் மட்டுந்தானா
இப்படி
கடந்த காலமெல்லாம் இப்படித்தானே ..."
எண்ணிக்கொண்டான் வெங்கடேசன்.
புதிராய் வந்தவர் கேட்டார்,
"தேர்ச்சி பெறுவது எப்படி
வெங்கடேசா..?"
"முடியும்
செய்வார்கள் அவர்கள்
என் மேல் அத்துணை பாசம்"
-சொன்னான் வெங்கடேசன்
தெரிந்திருக்கவில்லை
அவனுக்கு
வாழ்க்கையில் தேர்ச்சி
என்று ஒன்று உண்டு என்று ...
தோற்றான் தேர்வில்
"படித்தால்தானே பாசாக
அவன் முண்டம்
இயற்கையிலேயே
சரி
குமரேசனை கூப்பிடுங்கள்
மசால்வடைக்கு இனி ..."
ஒருமனதாய் தீர்மானம் போட்டன
கால் நூற்றாண்டுவாசிகள்.
"சே,
இதென்ன -வெங்கடேசா,குமரேசா
எரிநட்சத்திரங்களின் சுவாச வீச்சாய்
இருக்க விருப்பமா..?? "
எரிநட்சத்திரங்கள் :
--கொசுறு மதிப்பெண்
--போலிப்புன்னகை
--புழுப்பாசம்
--மிச்சமீதி பலகாரங்கள்
புரிய வைத்தார்
புதிராய் வந்தவர்
இதோ
சீசாவின் பூதங்கள்
தேய்க்கப்படுகின்றன-
இம்முறை தாங்களே
தங்களுக்காக..
.