புலி வாழ்ந்த குகை இதோ !
விண் அதிர மறந்தாலும்
மண் அதிரும் படை நடத்தி
போர்க்கள நெறி வகுத்து
புறமுதுகு காட்டியவனை
புல் என இகழ்ந்து
வேல் கொண்டு எரியும் போதும்
விழி இமை மூடாது இமைப்பவனை
வீர மறவன் என உரைத்து
வேல் விழியும் மான் விழியும்
மங்கையின் விழிகளுக்கு
மாண்புறு உவமையாக்கி
கொஞ்சி மகிழும் தமிழ் சொல்லெடுத்து
கூடிக் குலவி கொஞ்சி மகிழ்ந்து
உலகியலுக்கு நாகரீகம் காட்டி
அறிவுரை பல பகர்ந்து
தெளிந்த நீரோடையாய் காட்சி தரும்
என் தூய தமிழே!
வள்ளுவனே! இரண்டடிகளில்
நீ அறம் பொருள் இன்பம் தந்து
ஆற்றல் மிகு தமிழாகி நின்றாய்
இன்னா இனியவை ஆகிய
இரு நாற்பது பாடல்களில்
வாழ்வியலுக்கு
எது தேவை! எது தேவையில்லை!
என்று அறம் பகர்ந்தாய்
அன்பு காட்டி அறம் காட்டி வீரம் காட்டி
வீழ்ச்சியடையா பண்பாட்டை நல்கி
முடிதாளா முகவரி அளித்து
என்னை தமிழனென்று சொல்ல வைத்த
என் தமிழே!
உன்னை என் உடல் தாழ்த்தி
உயிரை உன் காலடியில் வைத்து
வணங்கி வாழ்த்தி விட்டு
நீ தந்த சொல்லெடுத்து
புறநாநூற்றுக் காட்சியொன்றை
வர்ணிக்க நினைக்கிறேன்
நீயும் விழி அசைத்து வழி காட்டு தமிழே!
உன் மகன் எங்கே?
ஒரு தாயிடம் மற்றொருவன் கேட்டான்
சூரிய விழியாலே! சுடர் தரும் மொழியாலே!
அந்தத்தாய் சொன்னாள்
என் மகனா ?
எந்தப்போர்க்களம் புகுந்தானோ!
வாள் பிடித்து வையம் கலங்கிட
தலை எடுத்து தரணி புகழும் புகழ் எடுத்து
புலி நிகர் வீரம் காட்டும்
அந்தப்புலி வாழ்ந்த குகை
இதோ !
என்று வயிற்றைக் காட்டி நின்றாளாம்
இது புறநாநூறு காட்டும் சாட்சியம்மா!