இன்றைய இளைஞர்களுக்கு வழிகாட்டி சுவாமி விவேகானந்தர் ...

இன்றைய இளைஞர்களுக்கு வழிகாட்டி சுவாமி விவேகானந்தர் ...

நாட்டுக்கு இன்றைய இளைய தலைமுறையினர் ஆற்ற வேண்டிய நற்பணிகள் குறித்து இளைஞர்கள் கூடி சிந்திக்க வேண்டும் . அவரது தன்னம்பிக்கை மற்றும் ஆற்றலை இளைய தலைமுறை பின்பற்றினால் இந்தியா வல்லரசாகும்..

இனி...
விவேகானந்தர் வாழ்வு, அவரது பணி, அறிவுரைகள் பற்றி பார்ப்போம்....

விவேகானந்தர் யார்?

கொல்கட்டாவில் வக்கீல் விசுவநாத் தத்தர்-புனவேஸ்வரி அம்மையார் தம்பதியருக்கு 1863 ஜன., 12ல் விவேகானந்தர் பிறந்தார். நரேந்திரநாதர் என்பது இளமை பருவ பெயர். அளவு கடந்த உடல், அறிவு மற்றும் மனச்சக்தி மிக்கவர். குழந்தை பருவத்திலேயே ஈகை குணமும், தலைமை பண்பும் கொண்டிருந்தார். ஸ்ரீ ராமகிருஷ்ணரிடம், ""நீங்கள் இறைவனை பார்த்திருக்கிறீர்களா? நான் பார்க்க முடியுமா?'' என கேள்வி எழுப்பினார் நரேந்திரநாதர். ""இறைவனை நானும் கண்டுள்ளேன். உனக்கும் காட்டுவேன்'' என்றார் ஸ்ரீ ராமகிருஷ்ணர். ஆறாண்டுகள் அவரிடம் பயின்ற நரேனிடம், ""மக்கள் சேவையே மகேசன் சேவை'' என ராமகிருஷ்ணர் உபதேசித்தார். 1886ல் ராமகிருஷ்ணர் உடலை நீத்தபின், ஆறு ஆண்டுகள் பாரத நாட்டை சுற்றி வந்தார் நரேன். மன்னர்களுடன் பேசி, மக்களுக்கு தொண்டு செய்யுங்கள் என வற்புறுத்தினார்.1892ல் டிச., 25, 26, 27 தேதிகளில் குமரியில் பாறையில் அமர்ந்து தவம் செய்தார்.அவர் கண்டது என்ன? விவேகானந்தருக்கு பாரத ரிஷி முனிவர்களும் காட்சி தந்தனர். இப்படைப்பு முழுவதும் பரம்பொருள் மயம். பரம்பொருள் ஒன்று. அதன் பெயர்கள் பல. அதை அடையும் வழிகள் பல. மனிதனுள் தெய்வ சக்தி இருக்கிறது. இதுவே பாரதம் கண்ட ஆன்மிக நெறி. யமன் நசிகேதனை தட்டி எழுப்பி, எழுமின் விழிமின் என உசுப்பியதை போல, பாரத மக்களை விழிப்புற செய்வதே தன் கடமை என்று உணர்ந்தார் நரேந்திரர். சிகாகோவில் 1893ல் நடந்த சர்வமத மாநாட்டுக்கு அவர் செல்ல வேண்டும் என ராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதியும், ராஜஸ்தான் கேத்ரி மன்னர் அஜித் சிங்கும் வற்புறுத்தினர். கேத்ரி மன்னர், அவருக்கு சுவாமி விவேகானந்தர் என்ற பெயரையும் சூட்டினார்.1893ல் மே மாதம் மும்பையில் இருந்து புறப்பட்டு சிகாகோ சென்றார் விவேகானந்தர். அங்கு 1893 செப்., 11ல் துவங்கிய சர்வமத மாநாட்டில், ""சகோதர, சகோதரிகளே'' என துவங்கி அவர் ஆற்றிய உரை, அனைத்து மக்களையும் ஆரவாரிக்க செய்தது.

பாரதத்தை பாம்பாட்டிகளின் நாடு என நினைத்து கொண்டிருந்த மேற்கு நாட்டவர், சிலருக்கு விவேகானந்தர் உரைகள் வியப்பூட்டின. மூன்றரை ஆண்டுகள் 1897 ஜனவரி வரை, அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, பிரான்சு போன்ற தேசங்களில் பயணம் செய்து அறவுரைகள் ஆற்றினார் விவேகானந்தர். குட்வின் என்ற ஆங்கில சுருக்கெழுத்தாளர், விவேகானந்தரின் அறஉரைகளை, எழுச்சி உரைகளை எழுதி வைத்து, மனித குலத்திற்கு பெரும் தொண்டாற்றினார். பல மேலை நாட்டு அறிஞர்கள், பேராசிரியர்கள் என அனைத்து தரப்பினரும் விவேகானந்தரின் சீடராகி, அவர் பணி தொடர வழிவகுத்தனர். மார்க்கெரட் நோபல் என்ற ஐரிஷ் பெண்மணி, அவரது மாணவியாகி சகோதரி நிவேதிதை என பெயர் சூட்டப்பட்டு, பாரதம் வந்து, தன் கடைசி மூச்சு வரை தொண்டு புரிந்தார்.விவேகானந்தர் 1897 ஜனவரியில் இலங்கை வழியாக தாயகம் திரும்பினார். பானகர சேதுபதி ஆண்ட ராமநாதபுரம் சமஸ்தானத்தில் முதலடி எடுத்து வைக்க வேண்டும் என விவேகானந்தர் விரும்பினார்.

1897 ஜன., 26 ராமநாதபுரம் அருகே குந்துகாலில் விவேகானந்தர் கப்பலில் வந்து இறங்கினார். பாஸ்கர சேதுபதி தலைமையில் மக்கள் அவரை வரவேற்றனர். விவேகானந்தர் ஏறி வந்த சாரட்டு வண்டியின் குதிரைகளை அவிழ்த்து விட்டு தானே அதை இழுத்து மரியாதை செலுத்தினார். ராமேஸ்வரம், ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை, மதுரை, குடந்தை வழியாக சென்னைக்கு ரயிலில் சென்றார் விவேகானந்தர். பாரதத்தின் எதிர்காலம், அதன் கடந்த காலத்தை விடஒளிமயமாக இருக்கும் என பேசினார். சென்னையில் இன்று விவேகானந்தர் இல்லம் என்று புகழ்பெற்ற, ஐஸ் ஹவுஸில் ஒன்பது நாட்கள் தங்கி வீர உரைகளை அவர் ஆற்றினார். 1897பிப்., கொல்கட்டா புறப்பட்டார். அவரது உரைகள், "இந்திய பிரசங்கங்கள்' என பெயரில் புகழ்பெற்றன. 1897ல் தொண்டும் துறவும் என்ற மைய சிந்தனையுடன், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் என்ற ஆன்மிக தொண்டு நிறுவனம், சுவாமி விவேகானந்தரால் துவங்கப்பட்டது.

பஞ்சம், பிளேக் நேரத்தில் நிவாரண பணிகளையும் ஆற்றினார் விவேகானந்தர். இறுதி மூச்சு வரை தெய்வ பணி, மனித நேய பணி செய்து, 1902 ஜூலை 4ல் உடலை விட்டு சென்றார். ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அவரது உபதேசங்களை படித்து, தேச விடுதலை பணியில் ஈடுபடுகின்றனர். கல்வி, மருத்துவம், நிவாரண பணி மூலம் இறை வழிபாடு, தொண்டு மூலம் தேசபக்தி, தேசத்தை மறுமலர்ச்சி பெற செய்யும் பணிகளில் ஈடுபடுகின்றனர்.

நற்பணி செய்யும் விவேகானந்த கேந்திரம் :

சுவாமி விவேகானந்தர் தவம் செய்த புனித பாறை கன்னியாகுமரியின் முக்கடல் சங்கமிக்கும் பகுதியில் உள்ளது. அதை விவேகானந்தர் பாறை என்றே அழைக்கின்றனர். 1963ல் ஏக்நாத் ரானடே என்பவர், நன்கொடை பெற்று, காரைக்குடி எஸ்.கே.ஆச்சாரி தலைமையில் இந்த நினைவுச் சின்னத்திற்கான பணி நடந்தது. 1970ல் ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் தலைவர், ஜனாதிபதி நினைவுச் சின்னத்தை தேசத்திற்கு அர்ப்பணித்தனர். சுவாமி விவேகானந்திற்கு உண்மையான நினைவுச் சின்னம் எதுவாக இருக்க முடியும்? அவரின் அறவுரைகளை நெஞ்சில் நிறுத்தி, மக்கள் பணிசெய்வதே அது. எனவே ஏக்நாத் ரானடே விவேகானந்த கேந்திரம் அமைப்பை நிறுவினார். அது கன்னியாகுமரியை தலைநகராகக் கொண்டு நாடு முழுவதும் நற்பணி செய்கிறது. பட்டதாரி இளைஞர்கள் ஆயுள்கால தொண்டர்களாக சேர்த்து செயல்படுகின்றனர்.

அருணாச்சல பிரதேசம், அஸ்ஸாம், அந்தமானில் 57 பள்ளிகளை நடத்துகிறது. மருத்துவமனைகள், கிராம முன்னேற்ற திட்டங்கள், இயற்கை வளஅபிவிருத்தி திட்டம், அஸ்ஸாமில் பண்பாட்டு வளர்ச்சி மையம், டில்லியில் பன்னாட்டு விவேகானந்த பவுண்டேஷன், கேரளா, கொடுங்கல்லூரில் வேத தரிசன மையம், காஷ்மீரில் ஒரு மையம், தமிழகம், மகாராஷ்டிரா, ஒடிசா,அசாம், அருணாச்சல மாநிலங்களில் கிராம முன்னேற்ற பணிகள் நடக்கின்றன. நம் பண்பாட்டை மையமாக கொண்ட வளர்ச்சி என்பதே விவேகானந்த கேந்திரத்தின் முக்கியப் பணி. இதன் 210 கிளைகள் இந்தியாவின் 18 மாநிலங்களில் பணியாற்றுகின்றன. இளையோர் நன்னூல் விவாதக்குழு, யோகா வகுப்பு, பஜனை வகுப்பு நடத்தப்படுகிறது. நன்னூல் விற்பனையும் கேந்திரத்தின் பணிகளில் ஒன்று. கேந்திர பத்திரிகை, யுவபாரதி ஆங்கில இதழ்கள், விவேகவாணி தமிழ் இதழ், சென்னை வெளியீடு, மராத்தி, குஜராத்தி, இந்தி, அஸ்ஸாம், மலையாள பத்திரிகைகள் வெளியாகின்றன. இப்பணிகள் பொதுமக்களின் பொருளாதார ஆதரவுடன் நடக்கின்றன.

தமிழகத்தில் விவேகானந்த கேந்திரம்:

கன்னியாகுமரி விவேகானந்தபுர வளாகத்தில் உள்ள பயிற்சி மையம், ஆயுட்கால, முழுநேர தொண்டர்கள், பல்திறன் படைத்த செயல்வீரர்கள், சமூக தொண்டர்களுக்கு பயிற்சி அளிக்கிறது. அலையும் துறவி, சுவாமி விவேகானந்தர், ஏக்நாத்ஜி வாழ்க்கை வரலாறு, கிராமோதயம் பற்றிய கண்காட்சிகள் உண்டு. விடுதி வசதிகள், உணவுக் கூடம், மருத்துவமனை, வங்கி, அரங்கங்கள் தலைமையகத்தில் உள்ளன. ஆண்டுக்கு எட்டு முறை உடனுறை யோகப்பயிற்சி முகாம்கள் நடக்கிறது. சென்னை, மதுரை, கோவை பகுதிகளில் கிளை மையங்கள் உள்ளன. குறைந்த விலை வீடுகட்டுதல், தண்ணீர் சேமிப்பு, பயோகாஸ், சமையலறை கழிவு எரிவாயு உற்பத்தி, நீலப்பச்சை பாசி மூலம் பால்வளம் பெருக்குதல், ஆளுமை வளர்ச்சி முகாம்கள் இத்துறையின் சிறப்பு பணிகள். இதற்கு உலகத்தர அங்கீகாரம் கிடைத்துள்ளது. மேலும் விவேகானந்த கேந்திரத்தின் கிராம முன்னேற்ற திட்டம் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் செயல்படுகிறது. சத்துணவு, பாலர் பள்ளிகள், மருந்தகங்கள், முதியோரை தத்தெடுத்தல், கண்முகாம்கள் ஆகியவை செயல்படுத்தப்படுகிறது. ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்கும் திருவிளக்குப் பூஜைகள், நூற்றுக் கணக்கில் கல்லூரி, பள்ளிகள் கலந்து கொள்ளும் பண்பாட்டு பயிற்சியும் இத்துறையின் பணிகள் .

விவேகானந்தர் பற்றி இவர்கள் :

ராஜாஜி : விவேகானந்தர் இந்து மதத்தை காப்பாற்றினார். அவர் இல்லாவிட்டால் நாம் நமது மதத்தை இழந்திருப்போம். சுதந்திரத்தை பெற்றிருக்க மாட்டோம். ஆகையால் நாம் சுவாமி விவேகானந்தருக்கு ஒவ்வொரு வகையிலும் கடமைப்பட்டிருக்கிறோம்.

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம்பிள்ளை : ஒருநூறு வருடங்கள் முன்னமே - செல்லஅமெரிக்கா சிகாகோ தன்னிலேநம்பெரும் இந்திய நாட்டவர் - கண்டஞானப் பெருமையைக் காட்டினான்.சத்திய வாழ்க்கையைப் பேசினான் - அருள்சாந்த தவக்கனல் வீசினான்யுத்தக் கொடுமையைச் சிந்திப்போம் - அந்தஉத்தமன் சொன்னதை வந்திப்போம்.

சுவாமி விபுலானந்தர் : "சீர்மருவு காசினியில் ஞானவொளி பரப்பத்தேயத்துட் பாரதமே சிறந்ததென விசைப்பஈரிருபா னாண்டுறைந்தா யெமதுதவக் குறையோஇளவயதி லெமைவிடுத்தா யளவிலருட் கடலே!.'

சுவாமி சித்பவானந்தர் : மானுடப் பிறவியின் முக்கிய நோக்கம் பரமனை அடைதல் என்னும் உயர்ந்த செய்தியை உலகிற்கு விவேகானந்தர் வழங்கினார். சண்முகனிடத்திருக்கின்ற ஷட் ஆதாரங்கள், ஷட் மகிமைகள், ஷட்தர்சனங்கள் இக்காலத்திற்கு ஏற்றவாறு விவேகானந்தர் வாயிலாக வெளியாகியிருக்கின்றன. அதனால் விவேகானந்தரை வேலவனது வரப்பிரசாதம் என மொழிவது முற்றிலும் பொருந்தும்.

பாரதியார் : 1893ம் ஆண்டில் விவேகானந்தர் யாரோ ஒரு சாதாரண சன்னியாசியாக வந்து தென்மாநிலங்களில் சஞ்சரித்துக் கொண்டிருந்த காலத்தில், அவருடைய மகிமையை கண்டுபிடித்து, நாட்டிற்கெல்லாம் பெருமை தேடித் தந்தவர் அழகிய சிங்கப் பெருமாளே. இவருடைய முயற்சிகளாலே விவேகானந்தர் அமெரிக்காவுக்கு போய், ஆரிய தர்மத்தை அந்நாட்டில் பிரகாசப்படுத்தும்படி ஏற்பட்டது.

கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை : சீர்பெருகு வங்கநிலம் சிறக்க வந்தோன்,ஸ்ரீராம கிருஷ்ணபதம் சிரமேற் கொண்டோன்;பார்புகழும் வேதாந்தப் பயிர்வ ளர்த்தோன்,
பாரதத்தின் பெருமையெங்கும் பரவச் செய்தோன்;வேர் பறிய எதிர்வாதம் விரித்துக் கூறிதார்புனைந்த தவயோகி விவேகா னந்தன்தாள்பணிந்து வாழ்வோமித் தரணி மீதே!.

குன்றக்குடி அடிகள் : வீறு புகழார் விவேகானந்தர்இமயம் போன்ற எழிலார் தோற்றமும்ஞானப் பேரொளி தவழ்திரு முகமும்தண்ணரு ளார்ந்த நெஞ்சமும், மன்னுயிர்மனத்திருள் போக்கும் ஞானச் செஞ்சொலும்பிணத்தையும் பேச வைத்தன; உயிர்களின்சோர்வினை யகற்றிச் சுறுசுறுப்பினைத்தந்தன; இதயத் தாமரை விரித்தன;சுதந்திரத்தின் சுவையை யூட்டின;ஞான மும்பர மோனமும் நல்கின;

முதல்வர் கருணாநிதி : ஒரு காலத்தில் சொல்லப்பட்டு, இடையிலே மறைந்து விட்ட "சத்தியமேவ ஜயதே' வாய்மையே வெல்லும் என்கிற இந்த வாசகத்தை முதல் முதல் மறுமுறை ஞாபகத்திற்கு கொண்டு வந்தவர், பாஸ்கர சேதுபதி மன்னர் என்றால் அது மிகையாகாது. அதற்கு காரணமாக இருந்தவர் விவேகானந்தர்.

கி.வா.ஜகன்னாதன் : விவேகானந்தரின் உபதேசங்களில் வீணையின் மெல்லிசை இல்லை. வீரமுரசே ஒலிக்கிறது. வில்லின் நாண் ஒலியைக் கேட்கிறோம். தூங்குகிறவர்களை எழுப்ப வந்தவர் அவர். பழைய உபநிடதங்களுக்குப் புதிய மெருகிட்டவர் அவர். பழைய முனிவர்களின் வழியைப் புதிய முறையில் எடுத்துக் காட்டியவர் அவர். அவரால் உலகமே இந்து மதத்தின் பெருமையை உணர்ந்தது.

ப.ஜீவானந்தம் : பாருலகை குலுக்கிய பாரதத் துறவி. துறவிகளிலும் தனக்கு நிகர் தானேயான அரசியல் துறவி. பாரத மணித்திருநாடே தான் என உருவகித்து வாழ்ந்த பரிபூரண தேசபக்தத் துறவி. நவீன இந்தியாவின் ஞானாசிரியர். பாரதீய ஆன்மிக ஞானமும் மேற்கத்திய விஞ்ஞானமும் சேம்மானம் பிசகாது கலந்து உறவாடி ஒளிவிட்ட கூட்டு மேதை.

சுப்பிரமணிய சிவம் : விவேகானந்தரை நினைக்கும் நேரமெல்லாம் எனக்கு புதிதுபுதிதாக ஊக்கமும், உற்சாகமும் உண்டாகிறது. எங்கிருந்தோ எனக்கு தெரியாமல் ஒரு சக்தியை அடைகிறேன். அறிவுப் பாலூட்டும் அன்னையாய், கொள்கைகளுக்கெல்லாம் ஆதாரமாய் என் புறத்தே நின்று கொண்டு, ஜீவிதத்துக்கொரு தூண்டுகோலாய் உள்ளது. அவருடைய சக்தி இருந்து வருகிறாரென்று திடமானதொரு எண்ணம் என் மனதில் பதிந்து கிடக்கிறது.

கவியோகி சுத்தானந்த பாரதியார் : பணியாலும் நினைப்பாலுந் தவத்தாலுங் குருவினிடம் பயின்ற ஞானம்அணியாக நிலவுலகிற் கருளாளுந் துணைவர்தமை யருகு சேர்த்தேதுணிவாகப் பயிற்றுவித்துத் துறவாகச் சுற்றுவழிதுன்னிச் சென்னைதனியாக, அறிவோர்கள் அனுப்பிடவே சம்வமதச்சங்கஞ் சென்றான்.

சவுந்தர கைலாசம் : வயிறதே உணவில் லாமல்வாடிடும் போது ஞானப்பயிரதோ வேர்பி டிக்கும்?பசியிலே வெற்று வாகும்உயிரது தழைக்க எண்ணிஉழைத்திடு முதலில்; தானேதுயரறும் எனவு ரைத்ததுறவிதாள் போற்றி! போற்றி!

செ. சத்யாசெந்தில்,
முதுகலை தமிழ் இரண்டாம் ஆண்டு மாணவி, மைலம் தமிழ் கல்லூரி, விழுப்புரம் மாவட்டம், தமிழ்நாடு - இந்தியா.

எழுதியவர் : செ. சத்யாசெந்தில், (5-Aug-12, 12:22 pm)
பார்வை : 12981

மேலே