இளமையும் போர்க்களமே

பழிச்சிலுவைப்
பளுவோடு
பாதங்கள் தவழ்ந்திட...

சுடுசொல்லில்
சிக்கிக்கொண்டு
விழிகள் பிதுங்கிட...

தடைகள் என்னும்
வேல்க்கம்பு
தலைக்கு மேலே..

படைகளாய்
தடை முட்கள்
பாதங்களுக்குக் கீழே...

அறிவோ பசிக்கும் - அந்தத்
தடையோ சிரிக்கும்...

வேலைவேட்டு
வெடித்துச் சிதற
வேளை பார்க்கும்...

வார்த்தை ஈட்டிகள்
குத்திக்குதறக்
குறிபார்க்கும்...

கனவுகளின்
தலைகளைத்
தகர்த்தெறிய
கட்டளைக் கணைகள்...

காம நஞ்சு
தடவப்பட்டுக்
காதலம்பு
காத்திருக்கும் ...

தேசத்தின் சுமைகள்
தோள்களை அழுத்த...
எதிகாலச் சுமைகள்
இதயத்தில் கனக்க.. .

எல்லாவற்றுக்கும் நடுவே...
நம்பிக்கை ஒன்றையே
ஆயுதமாய்க் கொண்டு
இளமை...

ஆம்!
யாருக்கான
சிலுவைகளையோ
சுமந்துகொண்டு...

காலத்தின் முரசுகொட்ட...

துரதிருஷ்டத்
துப்பாக்கிக்கு
இலக்கான
இளமையும் போர்க்களமே...

எழுதியவர் : நெல்லை மணி (20-Aug-12, 10:29 am)
சேர்த்தது : நெல்லை மணி
பார்வை : 119

மேலே