அவளும் தேர்தலும்
நீண்ட தூரம் என்னைவிட்டு
நீங்கிப்போனவளே! - சொல்..
நின்
நினைவுகளைமட்டும்
என் நெஞ்சில்
நிறுத்திவிட்டு - நீ
போயிருப்பது
எந்த ஊருக்கடி?
ஒரு சாயங்காலப்பொழுதில்
சம்மதகூடக் கேட்காமல் - என்
தற்காலிக மரணத்தை அறிவித்தாய்..
"நான் -
ஊருக்குப்போகிறேன்"
என்று சொல்லி'...
அங்கேபோனதும்
அழைக்கிறேன் என்றாய்...
அழைக்க மறந்தவளே!
அதற்குப் பணமில்லையா?? அல்லது
உனக்கு மனமில்லையா?? - நீ அழைக்காமல்போனால் - நான்
பிணமில்லையா?
சிரித்துச் சத்தமிடும் - என்
செல்பேசியும் - இன்று
மௌனமாய் அழுகின்றதடி...
அடியே!
உன் அழைப்பிற்காகவே
ஏங்குகின்றன
என் செவிகளும்
செல்பேசியும்...
என் நெஞ்சைத்
தணலாக்கி
அந்த நெருப்பில்
குளிர்காய்பவளே!
உன்
நினைவுகளின் வெள்ளம்
என் இதயத்தின் வீதிகளிலேயே தேங்கிவிட்டதால்...
ஏக்க நோயே
எங்கும் பரவிக்கிடக்குதடி...
உன் உறவு
வந்தபின்னால் - என்
இரவுகள்கூட
எனக்கே
எதிரியாகிபோன கதை
உனக்குத் தெரியுமா?
உன்னைப்பிரிந்த
இந்த நாட்களில்
அவைகள்கூட
எனக்கு
ஆறுதல் சொல்லின...
சகியே! - நீ
"சகி" என்பதால்தானடி - இன்னும்
சகித்துக் கொண்டிருக்கிறேன் -
என் துன்ப இரவுகளை...
இங்கே நான்விடும்
பெருமூச்சு - அங்கே
உன் குழல் கலைத்தால்...
நினைத்துக்கொள்...
உன்னைப்பிரிந்த நான்
தலைப்பில்லாத கவிதையாய்
தவித்துக் கொண்டிருக்கிறேனென்று...
நீர்குடித்த பஞ்சாய்
கனத்து கிடைக்கிறேனென்று...
வானத்தில் -
தொலைந்துபோன
நட்ச்சத்திரமாய்
இன்றும்
இன்னும்
உன்னைத் தேடுவேன்...
தேடிக் கிடைக்கவில்லை -
என்றாலும்
தேவி நீ
வரும்வரைக் காத்துக்கிடப்பேன்-
தேர்தலுக்குக் காத்துக் கிடக்கும்
எங்கள்
கிராமத்தின்
பிய்ந்துபோன சாலைகள் மாதிரி...