சீர்-ர்ர்ர்ர்ர்
சீர்-ர்ர்ர்ர்ர்
_________
விந்தையுலகின் வித்தையெல்லாம் கண்டு
சிந்தைநொந்து கலைப்பு கொண்டு
விடுமுறை நாளை கழிக்க கிளம்புகிறேன்....,
வந்திறங்கி சில தூரம் நடக்க,
காலின்மேல் ஆயிரம் வெள்ளை LEDக்கள் ;
......சூரிய ஒளியில் மின்னும் மணல்துகள்கள்.....;
தட்டிவிட்டு தலைநிமிர ,
மெல்லிய ராகத்தில் " சீர் " ஒலி
செவி வழி இதயம் நனைக்கின்றது....,
முன்னேற முடிவுசெய்கிறேன் , பயணம் தொடர்கிறது,...
இருபது நிமிட நடைபயண முடிவினில் ,
என் வரவு நாடி காத்திருந்தாள்,
ஒரு விசாலமான தமிழ்ப்பெண்
அந்த "சீர்" இசையும் அவளுடையதுதான்....
மடிப்புகள் பல நிறைந்த நீலநிற சீலைகட்டி (நீரின்மேல் அலைகள்)
சிற்பிகள் கொண்டு செய்த செந்நிற பாவாடைபூண்ட ( மணல் கரை)
கவர்ச்சியான கன்னியவள் , கானமழை செய்திருக்கிறாள் !
கட்டுமரமெல்லாம் களிநடனம் போட்டுக்கொண்டிருந்தன ...
கன்னியவள் மேனியினில் சிற்றிடை...,
- மறைக்கப் போராடும் சீலைஜரிகைபோல ,
கரையினில் அலைகள்....முன்னும் பின்னுமாய் ...!
அங்கேயே அமர்கிறேன் ...., நேரம் செல்கிறது ....
"சுடுகிறது வெய்யில்,சுரனையில்லையா?"- என கேட்கும்
துண்டுபீடித் தாத்தாவின் தோலிலுள்ள மீன்வலை,,
சீறிப்பாயும் அலைகளின் நுரையோடு உறவாடும்
நயமான நண்டுகள் ....,,,
இச்சையடக்க இடந்தேடிவந்த இளம்பருவஜோடிகள்..,
சிற்றுலக சிந்தனை மறந்து கொண்டாடும் சிறுவர்கள்.,
சுண்டல் பெட்டியில் சிறைவைக்கப்பட்ட சிறுவனின்
- ஏக்கம் நிறைந்த கண்கள் ..,
அத்துணையும் கண்முன்னே ...; கடந்து போனது நேரம்,
சீர் இசை மட்டும் சிதறாமல் கேட்க .....;
வழிப்போக்கன் போல வானில் ஓடிக்கொண்டிருக்கும் சூரியன்
- அவள் அகன்ற நெற்றியின் நெற்றிச்சுட்டி;
வந்தது மாலை நேரம் ; அது அவளின் ஓய்வுநேரம்...,
அணிகலன்கள் அகற்றினாள்...
(மிதக்கும் படகுகள் அனைத்தும் கரை சேர்ந்தன )
நீலச்சீலை கழற்றி கருஞ்சிகப்புச் சீலையனிந்தாள் ;
நெற்றிசுட்டி அகற்றிவிட்டு ,
நிலா வண்ணப் பொட்டோன்று பூண்டாள் ;
மாலைப்பொழுதின் மயக்கத்தினால் "சீர்-ர்ர்ர்" பூபாலமும்
அதிகமாகவே இருந்தது ;
அந்த அழகிய தருணம் நெருங்கி வந்தது ,
என் நெஞ்சு நிறைய உப்புப்படலம்;
சுவாசக்காற்றில் கூட மீன்வாசம் ;
என் தனிமையுனர்ந்து தோழமை செய்ய
பிறந்தது ஒரு சிற்றலை!,..அப்போது....,
நிச்சலன நீர் வந்து ,
நின்றதென் அருகினிலே ;
சில்லென சிலிர்த்துக்கொண்டு
நனைந்தன என் கால்கள் ;
சட்டென மேலேறி
கழுத்து வரை நனைத்ததில்,
மறத்துப்போன நாவில், ஏதோ உவர்ப்புச்சுவை ,
இம்முறை கண்ணிலிருந்திறங்கிய கண்ணீரினால் ....
அவ்வலை, என் உச்சிநிறைத்து , உள்ளம் கரைத்து
உறவாட இழுத்துக்கொண்டு உறைவிடம் சேர்த்தது ....,
கடலினுள் நான் ,
என்னுள் கடல்....!
________________________________MAK___________________________