பூமியின் சதை
கடற்கரை மருங்கில்
பாய்போல் பரவியிருக்கும்
பாசமிகு மண்ணே!
’நீ கடலின் காதலெனென்று
அந்த சுண்டல்காரன் அறிவானோ?’
கட்டி முடிக்காத
கட்டிடத்தின் காலடியில்
கொட்டிவைத்த மண்ணே!
’நீ பூமியின் சதையென்று’
அந்தக் கொத்தன் அறிவானோ?
மேகம் தெளிக்கும்
மழைத் துளிகளில் நிறம்மாறி
மணம் வீசும்
மாய மண்ணே!
’நீ மழைபேசி வழியே
தொடர்புகொண்டு பேசும்
மேகத்தின் சினேகிதனென்று’
அங்கு குடைபிடித்து நிற்கும்
மானுடன் அறிவானோ?
உழவனின் உழைப்பிற்கு
உயிர்கொடுக்கும் நோக்கிலே
பயிர்கொடுக்கும் மண்ணே!
’நீ மரத்தின் தாய்;
விலங்கின் கடவுள்’ என்று
அந்த உழவன்தான் அறிவானோ?
மாண்புமிகு மண்ணே
இத்தனைத் தகுதிகள் உனக்கிருந்தும்
மனிதனிடம் நீ மிதிபடுவதேன்?
மானுடா!
மண்ணே உனக்குத் தந்தை;
மண்ணே உனக்குத் தாய்;
உன்னை வளர்ப்பதனால்
மண் தந்தையாகிறது;
இறந்த பின் உன்னை சுமப்பதனால்
அது தாயாகிறது.
மனிதன் மண்ணிடம் கொண்டுள்ள
காதலுக்கு
ஆயுள் குறைவு;
அது மழலைப் பருவம் உடையும் வரை!
மண் மனிதனிடம் கொண்டுள்ள
காதலுக்கு
ஆயுள் அதிகம்;
அது மனிதனின் உடல் கரையும் வரை.