வெல்லட்டும்..! பிரித்தானிய தமிழ் பேரவையின் தீர்மானங்கள்..!

வெல்லட்டும்..! பிரித்தானிய தமிழ் பேரவையின் தீர்மானங்கள்..!

இலங்கைத்தீவில் தமிழ் மக்களுக்கு எதிராக ஏவி விடப்பட இனப்படுகொலை ஓர் சர்வதேச தீர்ப்பாயத்தின் முன்பாக விசாரனைக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்பதனை வலியுறுத்தும் மாநாடு லண்டனில் நடைபெறவுள்ளது.

இதனை பிரித்தானிய தமிழர் பேரவையும் தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் குழுவும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளனர். தாயகத்து தமிழர் பிரதி நிதிகள் தமிழ்நாடு மக்கள் பிரதி நிதிகள் புலம் பெயர் தமிழர் அமைப்புகளின் பிரதிநிதிகள் என தமிழ் கூறும் நல் உலகின் பிரதிநிதிகள் அனைவரும் கலந்து கொள்ளும் இம்மாநாடு கார்த்திகை மாதம் முதல் வாரத்தில் பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தில் நடைபெறவுள்ளது.

மாநாட்டின் நோக்கம்.

2009ம் ஆண்டு மாபெரும் மனிதப்படுகொலையுடன் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட நாள்முதல் இன்று வரை நாம் மரணங்களை கணக்கிட்டு வருகின்றோம். ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் சுமார் 40000க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால் இழப்புக்களின் எண்ணிக்கை இதனை விட பல மடங்கு அதிகம். சனல் 4 முதலான ஊடகங்கள் அங்கு இழைக்கப்பட்ட இனப்படுகொலையின் சாட்சிகளை காட்சிப்படுத்திய வண்ணமும் உள்ளனர்.

இந்த நிலையில் தமிழர்கள் அனைவரும் அங்கு நடைபெற்ற நடைபெற்றுவரும் இனஅழிப்பின் மீது ஓர் சர்வதேச சுயாதீன விசாரனையை கோரி நிற்கின்றனர் எனபதனை தமிழர்கள் அனைவரும் இணைந்து ஏகோபித்தகுரலில் கோருவதும் சர்வதேச சுயாதீன விசாரனைக்கான அழுத்தங்களை மேலும் அதிகரிக்க ஏதுவான வழிகளைஆராய்வதும் இந்த மாநாட்டின் நோக்கமாகும்.

பொறுப்புக்கூறலும் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி வழங்களும்தான் ஓர் நிலையான தீர்வுக்கு அடிப்படை என்பது இம்மாநாட்டின் அடி நாதமாக அமையும்.

மாநாட்டிற்கான அழைப்பு

தமிழ் மக்கள் மீது ஏவி விடப்பட்ட இன அழிப்பிற்கான சர்வதேச சுயாதீன விசாரணையைக் கோரும் அனைத்து தமிழ் மக்களின் பிரதிநிதிகளும் அழைப்பப்பட்டிருக்கிறார்கள் மனித உரிமைகள் மீது நம்பிக்கைகொண்டு தமிழ்மக்களுக்கு நீதி கிடைக்க பாடுபடும் தாயகத்தில் வாழும் தமிழ் அரசியற்கட்சிகளின் பிரதிநிதிகளும் சமூக மக்கள்பிரதிநிதிகளும் இந்த மாநாட்டில் கலந்து கொள்வார்கள்.

இந்தியாவிலிருந்து வருகை தருவோர்.

இலங்கை அரசின் செயற்பாடுகளுக்கு இந்தியா ஒரு பக்க பலமாக இருந்து வருவதாக இலங்கை அரசு தொடர்ந்தும் பிரச்சாரம் செய்கின்றது. அத்தோடு இந்திய மக்களும், மக்கள் பிரதிநிதிகளும் தம் பக்கம் இருப்பதாகவும் மேற்குலகை நம்ப வைக்க இலங்கை கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றது இதனை முறியடிக்கும் வகையில், தமிழ் நாட்டின் மாநில சட்ட சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் பிரதிநிதிகள், இந்திய பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகளின் தமிழ் பிரதிநிதிகள், சமூக அமைபுக்களின் பிரதிநிதிகள், தமிழகத்து கலை சார் அமைப்புக்களின் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டு சர்வதேச சுயாதீன விசாரனைக்கு இந்தியாவின் ஆதரவைப் பெறும் வழிவகைகளை ஆராய்வார்கள்.

தமிழகத்தில் இதுவரை காலமும் இன உணர்வை ஓர் அணையாத தீயாக தமது பல்வேறு தியாகத்தினால் காத்துவரும் இன உணர்வாளர்கள் இம்மாநாட்டில் கலந்து கொள்வது இம்மாநாட்டின் முக்கியமான சிறப்பியல்பாகும். தமிழகத்தின் இன உணர்வாளர்களை பிரித்தானிய தமிழர் பேரவை வணங்கி வரவேற்கின்றது.

அதேபோல் புலம் பெயர் தமிழ் சமூகத்தில் ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்காக குரல் கொடுக்கும்பெரும்பாலான அமைப்புக்களின் பிரதி நிதிகள் கலந்துகொள்வார்கள்.

தாயகத்து தமிழர் பிரதிநிதிகள் தமிழ்நாடு மக்கள் பிரதிநிதிகள் புலம் பெயர் தமிழர்களின் பிரமுகர்கள் என தமிழ்கூறும் நல் உலகின் பிரதிநிதிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஈழத்தில் நடைபெற்ற அநீதிகளுக்கு எதிராக
குரல்கொடுப்பது ஓர் வரலாற்று முக்கிய நிகழ்வாகும்.

அதேபோல ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்காக குரல் கொடுக்கும் சர்வதேச பிரதிநிதிகள் ஊடகவியலாளர்கள் சமூக ஆர்வலர்களும் இம்மாநாட்டில் கலந்து கொள்வார்கள்.

இம்மாநாட்டில் கலந்து கொள்ளும் பிரதிநிதிகள் இனிவரும் காலங்களில் சர்வதேச சுயாதீன விசாரணைக்கான பரப்புரைகளை தாம் வாழும் நாடுகளில் எவ்வாறு முன்னெடுப்பது என்பது குறித்தான கருத்துக்களை பகிர்ந்து கொள்வதோடு இனிவரும் காலங்களில் அனைத்து தமிழர்களும் ஓர் இணக்கப்பாட்டுடன் பணியாற்றுவது குறித்தும் விவாதிப்பார்கள்.

மாநாட்டின் அமர்வுகள்

இம்மாநாட்டின் இரு அமர்வுகள் பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தில் நடைபெறவுள்ளன. அத்தோடு பிரதிநிகள் கலந்துகொள்ளும் இராப்போசன விருந்தும் மக்கள் சந்திப்பும் ஏற்பாடாகி உள்ளது.

மாநாடு : கால அட்டவணை
இடம் : பிரித்தானிய பாராளுமன்றம்
07.11.2012 : மதியம் 12.15 – 3.00

பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளுக்குமிடையிலான கலந்துரயாடலும் தீர்மானத்தை பிரகடனப்படுத்தலும்

இடம் : பிரித்தானிய பாரளுமன்றம்
7.11.2012 – மாலை : கருத்துப்பகிர்வும் இராப்போசனமும்.

இடம் : பிரித்தானிய பாராளுமன்றம்
08.11.2012 : மாநாடு மதியம் 02 மணி முதல் 06 மணி வரை
.
09.11.2012 : மக்கள் சந்திப்பு 06 மணி முதல் 10 மணி வரை

பிரித்தானிய தமிழர் பேரவை.

பிரித்தானிய தமிழ் பேரவை நடத்தும் தமிழ் மாநாட்டில் கலந்துகொள்ள தி.மு.க. சார்பாக மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு,
டி.கே.எஸ். இளங்கோவன், கே.எஸ்.ராதாகிருஷ்ணன், பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக ஜி.கே.மணி, அருள் போன்றவர்களும் விடுதலைச் சிறுத்தைகள் தொல் .திருமாவும், வலது கம்யூனிஸ்ட் கட்சியின் டி. ராஜா, தா.பாண்டியன் போன்ற அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.பங்கேற்கட்டும், இலங்கை தமிழர்களுக்கு, முகாம் மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வை வழங்க வலியுறுத்தட்டும் என்று வாழ்த்துவோம்.

பழ.நெடுமாறன், வைக்கோ மற்றும் சீமான், கொளத்தூர் மணி, தமிழருவி மணியன், கோவை ராமகிருஷ்ணன் மற்றும் பல தமிழ் உணர்வாளர்களும் இலங்கை தமிழர் நலனில் அக்கறை உள்ளவர்களும் சென்றிருந்தால் இந்த மாநாடு இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும் என்ற எண்ணமும் தோன்றாமல் இல்லை.

மாநாடு முடிவில் அறிந்து கொள்ளலாம், என்னென்ன தீர்மானங்கள் இயற்றப்பட்டன, இந்த தீர்மானங்களால் என்னென்ன நன்மைகள் அல்லது பயன் என்று அறிந்து கொள்ளலாம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (6-Nov-12, 4:06 pm)
சேர்த்தது : சங்கிலிக்கருப்பு
பார்வை : 139

மேலே