ஏமாற்றுதல் எனப்படுவது . . .

என்போல எவருக்கும் நேர்ந்து விடக்கூடாது
இதுபோல ஒரு வாழ்க்கை.
காற்றில்லாமல் ஆட மறுத்து கண்ணீர் வடிக்கும்
மரக்கிளையை போல
சலனமின்றி அலையும் என் வாழ்வு எளிதன்று.
செம்மண் புழுதியில் இலையுதிர்காலத்தில்
வீழ்ந்து சருகாகும்,
பழுத்த இலைகளைப்போல்
என் இளமை சருகாகிறது காலத்தோடு! .
நீரில்லாத மர வேராய் காய்ந்து போயிருக்கும்
என் புன்னகை
மீண்டு வருவதென்றால். . .?
ஒரு வேளை நீ நினைத்தது போன்று
நான் மரணித்து விடக்கூடும்
மரணத்தின் பின்னும் வாழ்வதற்காய்
நான் எதுவும் செய்யவில்லையின்னும்
அதற்காக
வெற்று தாள்களுக்கேனும் வாழ்வு
கொடுத்தபடி.
ஒரு மழையின் பின்னரான ஈரத்தில்
மண்கொள்ளும் மகிழ்ச்சியாய்
என் மரணத்தில் நீ மகிழ்வதாயின்
இப்போதே மரணிக்கத் தயார் !
இப்படியே
கவிதை எழுதி
உன்னை ஏமாற்றுகிறேன்
கவிஞன் நான் .