சுழியத்திலிருந்து சுழியமாகும் மனித அறிவு .....

விருந்துண்ண அழைக்கிறது
விஞ்ஞான யுகம்
விருந்திலும் விஷம் வைக்கிறது
மனிதர்களின் அகம்
தான் வாழ
காவு கொடுத்தான்
உயிர்களை !
பகட்டாக வாழ்வதற்கு
பலி கொடுத்தான்
பல இலட்சம் மரங்களை !
சிட்டுக்குருவிகளின்
இரத்தத்தை உறிஞ்சின
வேவு பார்க்கும் டவர்கள் ......
எலிகளையும் குரங்குகளையும்
ஆய்வுக்காக ஊடுருவின
ஆங்கில மருந்துகள் .........
ஒவ்வொரு
புதுக் கட்டிடத்தின் முன்னும்
அழுது விரவின
அறுக்கப்பட்ட மரங்களின்
துகள்கள் .............
அவசியமில்லா தேவைக்காய்
அவசியமானதை எல்லாம்
அழித்த மனிதன்
இன்று ......
மின்சாரத்திற்காய் தன் சந்ததிகளையே
சமாதியாக்க துணிந்து விட்டான் !
அவனுக்கு .....
சுய அறிவுள்ள சந்ததிகள் வேண்டாமாம்
வெளிச்சம் இருக்க
பார்வையின்றி தவிக்கப் போகும்
பிள்ளைகளே வேண்டுமாம் !
சிறகடித்து பறக்கும்
பட்டாம் பூச்சிகள் வேண்டாமாம்
பட்டனில் ஆடி நிற்கும்
பஞ்சு பொம்மைகளே போதுமாம் !
மிஞ்சி விட்டது மனித அறிவு
செவ்வாய் கிரகத்திற்கு
குழந்தைகளை அனுப்பிவிட்டு
பூமிப் பந்தில்
மின்விளக்குகளாம்.......
இயற்கையாய் உள்ள
சூரியனின் ஒளி வலையை
வேண்டாமென்று ஒதுக்கி விட்டு .......
அணுவின் யுரேனிய உலையை
தீண்டுகிறான்
புத்தி கெட்டு .........