தன்னந்தனியாக

பனிக்கால இரவுகளின் குளிரில்
கனவுகளும் நடுங்கிப்போகிறது

இழுத்துப் போர்த்திக் கொள்ள விரும்பும்
என்னையும் உலகையும் நெருங்க
விடியல் தயங்கும்

தெருக்களில் அரசாணிப்பூக்கள்
மலரும் நேரத்தை ஒருநாளும்
பார்க்க முடியாத பனிக்கால உறக்கம்

மார்கழியின் மகத்துவத்தை
மாக்கோலங்களில் உணர்த்தும்
குமரிப்பெண்களின் ஆர்வத்தைக் கண்டும்
நம் சுறுசுறுப்பில் சுணக்கம்

தேன் சிட்டுகளை ஏமாற்ற
மலர்களில் தேனுடன் கலக்கும்
பனித்துளி

உடம்பைக் குலுக்கி
பனித்துளிகளை உதறும் பறவைகள்
வில்லின் வடிவம் கொண்டு
பறக்கத் தொடங்கும்

ஓசைகளை எளிதில் கடத்தும்
பனிக்காலப் பொழுதுகளில்
தொலை தூரத்தில் நடக்கும்
பூசை மணியோசை
துல்லியமாய் காதுகளில் ஒலிக்கும்

கதிரவன் ஒளிக்கரங்கள் வந்து
தழுவும்வரை தலை குனிந்திருக்கும்
மரங்கள்

மருத்துவம் நிறைந்த செடிகள்
கிழுவ மர வேலிகளில் பதுங்கி நின்று
என்னை பரிகாசம் செய்யும்

கதிரவனும் சோம்பல் முறித்தபடி
மெதுவாய் விழித்தபடி
இரவுக்குடிசையிலிருந்து வெளியேறும்

ஒற்றையடிப் பாதையில் பதிந்த
பறவைகள் விலங்குகள் கால்சுவடுகள்
எனக்கு முன்னே நடைப் பயிற்சி
முடித்துவிட்டதை உணர்த்தும்

எல்லாப் பறவைகளும்
காலைப் பொழுதை வாழ்த்திப்பாடி
வரவேற்பதை அறிந்தாலும்
அதில் இணைந்துகொள்ள
மனதில் இடமின்றி
வருத்தங்களுடன் நடக்கிறேன்...

இயற்கையை காப்பாற்றவும் ஆராதிக்கவும்
எள்ளளவும் எண்ணமில்லாத உலகில்
நான் மட்டும் தன்னந்தனியாக !

எழுதியவர் : ரத்தினமூர்த்தி (18-Dec-12, 3:45 pm)
சேர்த்தது : Rathinamoorthi kavithaikal
பார்வை : 121

மேலே