பாதரசத்தில் பனித் துளிகள்
பாதரசத்தில் பனித் துளிகள்
(கவிதை)
பிறப்பில் மலர்ந்த
புற முகத்தையும்
வளர்ப்பில் நிலைத்த
அக முகத்தையும்
சுற்றம் செதுக்கிய
சுடர் முகத்தையும்
பொய் முகங்களின்
பொம்மலாட்டத்தில்
தொலைத்து விட்ட இந்தியனே!......வா…
பாதரசப் பனித்துளிகளை
பகலவனுக்குப் பரிமாறிவிட்டு…
சகாராவில் சந்தன மரம்
வளர்ப்போம்!
நேச முகம் காட்டி
தேசக்கூன் நிமிர்த்துவோம்!
நதிகளை இணைத்து
பசுமைப் புரட்சிக்கு
நாமாவளி இசைப்போம்!
காஷ்மீரக் கழுத்துத்
தீவிர வாத தேமலுக்கு
காந்தி மார்க் களிம்பு பூசுவோம்!
அஸாம் பெண்ணின்
உல்ஃபா உபாதைக்கு
மனித நேய சூரணத்தை
மகிழ்வோடளிப்போம்!
ஆந்திர வயிற்றின்
நக்ஸலைட் அல்சருக்கு
அஹிம்சை லேகியத்தை
அன்புடன் கொடுப்போம்!
ஸ்ரீரங்கம் கோவிலில்
சலீமுக்கு நிக்கா செய்து
நாகூர் தர்காவில் நாராயணனுக்குப்
பூணூல் மாற்றுவோம்!
பாகிஸ்தான் தலைநகரிலொரு
பண்ணாரியம்மன் கோயிலமைத்து
அறங்காவலராய் அதிபர்
முஷாரப்பை அமர்த்துவோம்!
பீகார் அண்ணனின் கண்ணீரை
ஒரிஸாத்தம்பி துடைக்கட்டும்!
கர்நாடகத் தங்கையின் கவலைகளை
தமிழகத் தமக்கை களையட்டும்!
ராஜஸ்தான் சகோதரியின் ராக்கியை
கேரளச் சேட்டன் கேட்டுப் பெறட்டும்!
சகோதரச் செக்கில்
தமிழ் முகம்…
தெலுங்கு முகம்
கன்னட முகம்..
மலையாள முகம்…என
எல்லா முகங்களையும்
சேர்த்தரைத்து
ஒரு
இந்திய முகம் செய்வோம்!
---------------------------
முகில் தினகரன், கோவை.