அஷ்டமத்தில் சனி

2020-ல் அஷ்டமச் சனி
(கவிதை)

வல்லரசுக் கனவுகளுக்கு
வாய்க்கரிசி வழங்கிவிட்டு
வாத்ஸாயணார் கோட்பாட்டுக்கு
வளைகாப்பு நடத்தும்
இந்தச் சீக்காளி சமூகத்திற்கு
வந்திறங்கப் போகிறது
அஷ்டமச் சனியெனும்
குஷ்டரோக வியாதி…2020-ல்!

அப்போது
ஊழலும் லஞ்சமும்
கட்டாயப் பாடங்களாய்
கல்வித் திட்டத்தில்!
வன்முறை மட்டும்
தொழிற்கல்விப் பிரிவில்!

ஆந்திர மாநில
அரசுக் கல்லூரியில்
“நக்ஸலைட்டாலஜி”க்கென
தனித்துறை!
பேராசிரியர்களாய்
அஸாம் மாநில
உல்பா தீவிரவாதிகள்!

கடத்தல் மென்பொருள்
தயாரிக்க
சட்டீஸ்கரில் ஒரு டைடல் பார்க்!
மாவோயிஸ்டுகள் மட்டுமே
ஸாப்ட்வேர் என்ஜினீயர்களாய்!

ரேஷன் கடைகளில்
ஏ.கே. 47-னும்
ஆர்.டி.எக்ஸ்.வெடி மருந்தும்
நியாய விலையில்
வினியோகம!;
கோடம்பாக்க கோலிவுட்டுக்கு
சவால் விட்டு
காஞ்சி மடக் காலிவுட்
காலர் உயர்ததும்!

சத்திய மங்கலத்தில்
இரண்டாம் வீரப்பன்
சாம்ராஜ்யம் துவங்கியிருக்க
அவன் சந்தன மாமூலில்
மத்திய பட்ஜெட்
முதுகு நிமிரும்!

காவிரிப் படுகைகளில்
காம்பளக்ஸ்கள் உயர
கம்ப்யூட்டர் மையங்கள்
கணிசமாயத் தோன்றியிருக்கும்!

உலக மயமாக்கலெனும்
உக்கிர வெயிலால்
பொருளாதாரப் பெண்ணின்
கர்ப்பகூடு கீழிறங்கும்
வருங்கால வாரிசுகள்
வயிற்றிலிருக்கும் போதே
அமரிக்கப் பாலுக்காய்
அம்மாவின் அடிவயிறு சுரண்டும்!

தஞ்சைக் கழனிக்கு
தான்சானியாவிலிருந்து
தவிட்டு உரம் வரும்
நம்மூர் விவசாயிக்கு
நார்வே நாட்டிலிருந்து
நாமக்கட்டி வந்திறங்கும்!

குளோனிங் குளறுபடியால்
காந்தியுருவில் ஒரு
காஷ்மீர் தீவிரவாதியும்
பின்லேடன் வடிவிலொரு
புத்த பிட்சுவும் உலா வர
அறிவியலின் அரைஞான்
அரைக் கம்பத்தில் பறக்கும்!

நிகழ்கால நிதர்சனமே
நித்தியானந்தமாய் நாற
எதிர் வரும் 2020-ஐ
எண்ணிடவே நடுங்குது..

ஆனாலுமொரு நம்பிக்கை..
இன்னொரு சுனாமி
வராமலா போகும்?
கொத்தோடு வாரிச் சென்று
அத்தோடு கதை முடிக்க!

----------------------------------------------------------------------------------------------------------------------------------முகில் தினகரன்
கோவை.

எழுதியவர் : முகில் thinakaran (24-Dec-12, 4:09 pm)
பார்வை : 160

மேலே