சாம்பல் காடு
படித்தாலே
வீரம் சொட்டுகிற
நெஞ்சில் ஈரம்
சொட்டுகிற
வரலாற்றுப் பக்கங்கள் இது.
எழுதிய பக்கமே கூட
எரிந்து விடுமளவுக்கு
சுதந்திர இந்தியாவின்
சூடானப் பக்கங்கள்.
நாற்பத்தி நான்கு
மனித உயிர்களை
விறகாக எடுத்துவைத்து
அந்த நெருப்பிலே
கொடியவனொருவன்
தனக்கானத் தேநீரைத்
தயாரித்துக் கொண்ட வரலாறு.
இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த
அந்த இரண்டாம் நூற்றாண்டு
மனிதனின் பெயர்
கோபாலகிருஷ்ண நாயுடு.
*****
அன்றொருநாள்
பண்ணையார்கள்
தங்கள் கோரப்பற்களைக்காட்டிச்
சிரித்தார்கள்.
அவர்கள் அகராதியில்
சிரித்தார்கள் என்றால்
ஏழைகள் உயிரை
எரித்தார்கள் என்று பொருள்.
*****
ஒரு காட்டுமிராண்டிக்கூட்டம்
அந்தக் கிராமத்தில் நுழைந்து
அங்கே
மனிதகுலம் வாழ்ந்ததற்கான
அத்துணைச்சுவடுகளையும்
அழித்துவிட்டுப் போனது
*****
பெண்கள்
குழந்தைகளென
நாற்பத்தி நான்கு மனித உயிர்களை
உயிரோடு தீயிட்டுக்கொளுத்திய
வரலாறு காணாத
அந்த கோரமான காட்டுமிராண்டித்தனம்
அரங்கேறிய தினம்
1968 டிசம்பர் 24.
நமது பாவங்களைக் கழுவ
இயேசு கிறிஸ்து
இந்த பூமியில் அவதரித்த
அதே புண்ணிய தினத்திற்கு
முதல் நாள்தான்
இந்த பாவச்செயலும் அரங்கேறியது.
*****
பூமாதேவி
மொத்தமாய்த் தலை கவிழ்ந்த
அந்த இடத்தின் பெயர்...
பிசாசுகள்
இரண்டுமணிநேரம்
தாண்டவமாடிவிட்டுப்போன
அந்தக்கிராமத்தின் பெயர்...
நாற்பத்திநான்கு மனிதப்பூக்கள்
நெருப்பில் விழுந்து கருகிப்போன
அந்தப்புண்ணிய பூமியின் பெயர்
வெண்மணி
*****
ஏ பாரத மாதாவே!
கிழக்கே வங்கக்கடல்,
மேற்கே அரபிக்கடல்,
தெற்கே இந்துமாசமுத்திரம்,
வடக்கே இமயமலையென நீ
ஈரம்சூழ இருந்தாலும்
வெண்மணியில் எரிந்த நெருப்பு
எங்களை
வெட்கம் கொள்ளச்செய்கிறது.
*****
வியர்வை
உழைப்பின் சின்னம்
இரத்தம்
தியாகத்தின் சின்னம்
இந்த இரண்டுக்குமான ஊற்று
பாட்டாளி வர்கம்தான் என்பதை
வரலாற்றுச் சம்பவங்கள்
அடிக்கடி நிரூபித்துவிட்டுப் போகிறது.
ஆனால் ஆளும்வர்க்கம்
உழைக்கும் மக்கள்
வயிறார உண்பதை
எப்போதும் விரும்புவதில்லை
அதனால்தான்
கீழ்வெண்மணியிலே
விவசாயிகள் கூலி உயர்வு கேட்டபோது
அதைவிட
அதிகவிலை கொடுத்து
ஆளும்வர்கம்
அவர்களை அழிக்கத்தொடங்கியது.
ஆட்சியாளர்களும்
அவர்களோடு கை கோர்த்துக் கொண்டு
அந்த கோர சம்பவத்திற்கு
துணை போனார்கள்.
நிலப்பிரபுத்துவம் எனும் பூதம்
தனது இறுதி மூச்சை விட்டுக் கொண்டிருக்கும்
இந்த இருபதாம் நூற்றாண்டிலும் கூட
தனது நச்சுக் காற்றால்
மனித சமூகத்தை
அழித்துக் கொண்டுதானிருக்கிறது.
தனக்கு
நேரம் கிடைக்கும்போதெல்லாம்
அது
இந்திய நாட்டின்
ஏதாவதொரு கிராமத்தில் நுழைந்து
சில உயிர்களையாவது
பிடுங்கித் தின்று விட்டுச் செல்கிறது.
இதுபோன்ற
பல சம்பவங்கள்
வரலாற்றுப் பாதை முழுக்க
குவிந்து கிடக்கிறது.
அடடா
அதனால்தான்
அந்த மாமனிதன் காரல்மார்க்ஸ்
வர்க்கப்போராட்டங்களின் தொகுப்பே
வரலாறு என்றான்.
மர்மமான
இத்தகைய மணல் மேடுகளை
நம்முடைய
சின்னஞ்சிறு பேனா முனையால்
குத்திக் கிழித்து
நிலப்பிரபுத்துவத்தின் நாற்றங்களை
அம்பலப்படுத்த வேண்டும்.
ஆனால்
ஆளும் வர்க்கம்
மிக சாதுரியமாக
சம்பவங்களை நடத்திய கையோடு
அவற்றை
அழித்துவிட்டு வந்திருக்கிறது.
இன்றைய முற்போக்கு வாதிகளுக்கு
அவைகளை
குத்திக் கிழித்துத் தோண்டி
மீண்டும் சந்தைக்கு எடுத்துவர வேண்டிய
சமூக கடமை இருக்கிறது.
அப்படியொரு
கோர சம்பவத்தை
பதிவு செய்யும் நோக்கத்தோடு
எழுதப்பட்ட வரலாறுதான் இது.
(1)
பிசாசுகளின் தாண்டவத்திற்குப் பிறகு
அந்த ஊர் அமைதியாகி இருந்தது.
பேயொன்று
ஆட்சி செலுத்திவிட்டுப் போனதற்கான
அடையாளங்கள்
அந்த ஊரிலே
அப்படியே இருந்தது.
நொண்டி தைமூர்
படையெடுப்புக்குப் பின்
டெல்லி
நொண்டியானதைப் போல
அந்தக்கிராமமும்
காட்சியளித்த்து.
ஊரெல்லாம் போலீஸ்படை
லாரி லாரியாக இறங்குகிறது.
தெருவெல்லாம் போலீஸ்படை
சாரி சாரியாக நிற்கிறது.
இந்தப் பகுதியில்
நூற்றி நாற்பத்தி நாலு
அமுலுக்கு வந்துள்ளதாம்.
நாற்பத்தி நாலு
மனிதப்பூக்களை
உயிரோடு
தீயிட்டுக் கொளுத்திய
அந்தக் காட்டு மிருகங்களைப்
பாதுகாக்க
நூற்றி நாற்பத்தி நாலை
அமுலுக்குக் கொண்டு வந்தார்கள்.
நாற்பத்தி நாலு மனிதப்பூக்களை
தந்தூரி அடுப்பிலெரித்த
காட்டு மிருகங்களை
போலீஸ்படை
அற்புதமாய்ப்
பாதுகாத்துக் கொண்டிருந்தது.
வரலாற்றையே அழுக்காக்கிய
அந்த கோபாலகிருஸ்ண நாயுடு
ஊஞ்சலில் உட்கார்ந்து
பாதாம் பருப்புகளைச் சுவைத்துக் கொண்டே
ஆடிக்கொண்டிருக்கிறான்.
மின்விசிறி சுழல சுழல
ஆழ்ந்த சிந்தனையில்
மூழ்குகிறான்.
போலீஸ்படை
அவனுக்கான பாதுகாப்பில்
வேர்த்து விறுவிறுக்க
மூழ்கி கிடக்கிறது.
(2)
பிணக்காடாய் மாறியிருந்தது
அந்தச்சேரி.
அங்கேயொரு
குடிசை இருந்ததற்கு
அடையாளமாய்
மண்சுவர் மட்டும்
உயிர்த்திருந்த்து.
எலும்புத்துண்டுகளும்
சாம்பலும்
அந்தக்குடிசை முழுக்க
புதைந்திருந்தது.
கையகல மனிதக்குஞ்சுகள் கூட
கரிக்கட்டையாய்க்
கருகிப்போய்க்கிடந்தன.
அந்த
எரிந்து போன ஹிரோஷிமாவை
ஓரிரு ஜீவன்கள்
வந்து பார்த்துச் சென்றன.
குடிசையைச் சுற்றிக்
கூக்குரல்.
குழுமியிருந்த மக்கள் கூட்டம்
அழுது அழுது
எரிந்து போன
தங்கள் இதயத்தின் சாம்பலை
கண்ணீராய்
வெளியேக் கொட்டினார்கள்.
அந்த
அழுகின்ற கூட்டத்திற்கு மத்தியில்
ஒருத்தி மட்டும்
நம்பிக்கையேந்தி
நிமிர்ந்து நிற்கிறாள்.
அவள் பெயர் பொன்னம்மாள்.
அந்தச் சேரியையே
சுடுகாடாக்கிய
மனித அநாகரிகங்கள் வருகிறார்கள்.
பொன்னம்மாளிடம் கேட்கிறார்கள்
“செங்கொடி செங்கொடின்னு
கத்துனிங்களே
பார்த்தீங்களா இப்ப
செங்கொடி
உங்களுக்கு என்ன தந்திருக்கு”-ன்னு
அந்த வீராங்கனை
கொடுங்கோலர்களுக்கு
பதிலிறுக்கிறாள்
“போங்கடா நாய்களா!
ஆளும் வர்க்கத்தின் நிழலில்
உயிர் வாழ்வதைவிட
செங்கொடியின் நிழலில்
மரித்துப் போவதையே
பெருமையாக நினைக்கிறோம்”
ஆம்!
அழிப்பதற்கும் கிழிப்பதற்கும்
செங்கொடியொன்றும்
துணியால் நெய்யப் பட்டதல்ல
எங்கள்
துணிச்சலால் நெய்யப்பட்டது.
இன்னொரு பெண்
அந்த எரிந்த குடிசைகளையே
பிரமை பிடித்தவளாக
பார்த்துக் கொண்டே இருந்தாள்.
பதினோரு பேரைப்
பலி கொடுத்தவள் அவள்.
எரிந்து போனவர்கள்
மீண்டும் வருவார்களென்ற
எதிர்பார்ப்போடு
அந்தக் குடிசைகளையே
பார்த்துக் கொண்டிருக்கிறாள்.
அவள் கண்களில்
ஒரு நியாய தீர்ப்பு நாளுக்கான
எதிர்பார்ப்பு.
திடீரென்று
நெஞ்சிலறைந்து கொண்டு
அழுகிறாள்.
பக்கத்திலிருந்த தூணில்
வேகமாக முட்டிக்கொள்கிறாள்,
மயங்கி விழுகிறாள்.
சுற்றி நின்ற பெண்கள் கூட்டம்
ஆதரவாய் தோள் கொடுத்து
தண்ணீர் ஊற்றி
எழுப்புகிறார்கள்.
அவள்
கூட்டத்தைக்
கட்டிப் பிடித்துக் கொண்டு
அழுகிறாள்.
அழுக்காகிப் போன
அந்த சரித்திரம்
கண்ணீரோடு கலந்து
அவள்
கண்களிலிருந்து வடிந்தது.
(3)
ஆளுயர நெற்கதிர்கள்
ஆடி மகிழும்
தென்னாட்டின் நெற்களஞ்சியமாம்
தஞ்சை பூமியில்
ஒரு குட்டி கிராமம்.
ஏராளமானோர்
தங்கள் புன்னகையைத் தொலைத்து
இயற்கையன்னையை
புன்னகை பூக்கச்செய்த
செழிப்பு பூமி.
மாடு கட்டி போரடித்தாலும்
மாளாத ஊரினிலே
மனிதர்களே போரடித்தார்கள்.
மேகமகள்
ஏமாற்றிய போதும்
ஓடைமகள்
ஓய்ந்துபோன போதும்
இவர்களின் வியர்வைதான்
பயிர்களின் வேர்களிலே
சொறியப்பட்டது.
இப்படி
பயிரின் வேரிலே
வேர்வை சொரிந்த தோழர்கள்
தங்கள் உயிரின் வேர்
அறுக்கப்படாமலிருக்க
கோரிக்கை வைத்தார்கள்.
”எட்டுப்படி நெல்
அறுவடை செய்தால்
ஒருபடி நெல் கூலி
தரவேண்டும்”
கும்பிடும் சாதி
கோரிக்கை வைப்பதாயென
கொதித்தனர்
கொடுங்கோலர்கள்.
(4)
கோபாலகிருஷ்ண நாயுடு
தோரணையாய்
மத்தியில் உட்கார
நிலமிராசுகளின் கூட்டம்
கூடுகிறது.
நிலபிரபுத்துவத்திற்கேயுரிய
அநாகரிக இரைச்சல்
எழுகிறது.
“இப்ப என்ன செய்யலாம்?”
”என்ன செய்யறது
எல்லாப்பரக்கழுதைகளையும்
வெட்டிச்சாய்க்க வேண்டியதுதான்”
நிலப்பிரபுத்துவம்
தனது கடாமீசையை
முறுக்கிக் கொள்கிறது.
கோபாலகிருஷ்ண நாயுடு
தீர்க்கமாய்ச் சொல்கிறான்
“ரொம்ப அவசரப் படாதீங்க
இத
எப்படி அடக்கணும்”ன்னு
எனக்குத் தெரியும்.
”எப்படி?”
”தலையிருந்தாதானே
வாலாடும்.
எல்லாப்பெரிய தலைகளையும்
வெட்டிச் சாய்க்க வேண்டியதுதான்”
“முதல்ல
அந்தப்பய முத்துசாமிய
முடிக்கனும்.
அவனாலதான்
எல்லோரும்
கெட்டு நாசமாப்போறாங்க”
கொடியவர்களின்
கூரிய ஆயுதமுனை
முத்துசாமியென்ற
எளிய மனிதனின் பக்கம்
திருகிறது.
(5)
என்றைக்கும் போலத்தான்
சூரியன் உதிக்கிறான்.
என்றைக்கும் போலத்தான்
அந்த டீக்கடை திறக்கப்படுகிறது.
ஆனால்
என்றைக்குமில்லாமல்
ஐந்து ரெளடிகள்
அந்த கடைக்குள்ளே
நுழைகிறார்கள்.
“அஞ்சு டீ போடுப்பா”
கடையின் உரிமையாளர்
முத்துசாமி
பவ்யமாக
கொண்டு போய்க்கொடுக்கிறார்.
உறிஞ்சிக் குடித்துவிட்டு
அந்த ஐந்து பேரும்
கடைக்காரரின் முன் வந்து
நிற்கிறார்கள்.
அதில் ஒருவன்
நெருப்புக்குச்சியை உரசி
தனது சிகரட்டைப்
பற்ற வைத்துக்கொள்கிறான்.
கடைக்காரர்
அந்த நெருப்பையே
உற்றுப் பார்க்கிறார்.
பாவம்
அவருக்குத் தெரியாது
நாற்பத்தி நான்கு
மனித உயிர்களை
ஈவிரக்கமில்லாமல்
சுவைத்துப் பார்க்கப்போகும்
விஷநாக்கு
இந்த நெருப்புதானென்று.
நன்றாக
உள்ளிழுத்தப் புகையைக்
கடைக்காரரின் முகத்தில்
ஒருவன் ஊதுகிறான்.
“ஆமா,
இரிஞ்சூர் ஐயாகிட்ட
வாங்கின பணத்தை
இன்னும் நீ திருப்பித் தரலியாமே?”
கடைக்காரருக்கு அதிர்ச்சி
ஏனென்றால்
அவர்
இரிஞ்சூர் ஐயாவிடம்
பணம் வாங்கியதே இல்லை.
“இன்னும்
பதினஞ்சு நாள்ல
பணத்தைத் திருப்பித் தரலைன்னா...”
ஐந்து பேரும்
தங்கள் இடுப்பில்
சொருகி வைத்திருந்த
ஆயுதத்தைக்
காட்டிவிட்டுச் சென்றார்கள்.
(6)
கடைக்காரர்
பஞ்சாயத்து தலைவரிடம்
ஓடுகிறார்.
பஞ்சாயத்து தலைவர்
ஆர அமர
வெத்தலையை மடித்து
வாய்க்குள் திணித்துவிட்டு
கேட்டார்
“சரி
குடுத்துற வேண்டியதுதானே?”
”ஐயா,
நான் பணமே வாங்கலியே”
“அது
எனக்கும் தெரியும் முத்துசாமி.
ஒன்னு
பணத்தைக்கொண்டு போய்க் குடுத்திடு.
இல்லைன்னா
நீங்க வச்சிருக்கீங்களே
விவசாயத்தொழிலாளர் சங்கம்,
அதைத் தலை முழுகிட்டு
நெல் உற்பத்தியாளர் சங்கக் கொடிய
தூக்கிப் பிடிங்க.
அப்படி செய்யலைன்னா
அவனுக
ஊர்ல புகுந்து
அடிக்கத்தான் செய்வானுக
என்ன சொல்ற?”
முத்துசாமி
சுற்றிலும் நோட்டமிடுகிறார்.
ஏவப்படுவதெற்கென்று
சில வெறிநாய்கள்
தயாராய் இருக்கிறது.
“நான் என்ன சொல்றது?
ஜனங்க்கிட்ட பேசி
ஒரு முடிவெடுத்துச் சொல்றேன்”
“நல்ல முடிவாச் சொல்லு.
இல்லைன்னா
எல்லாத்தையும்
அடிச்சு
நொறுக்கிப் புடுவோம் நொறுக்கி”
(7)
முத்துசாமி
விவசாயிகளிடம் சென்று சொல்கிறார்.
கருப்பு முகங்கள் அத்தனையும்
வெளுத்துப் போகிறது.
கடைசியில்
விவசாயத்தொழிலாளர்கள் முகாமிலிருந்து
பதில் போகிறது.
“செங்கொடி ஏந்தும் கைகளால்
வேறு எந்தக் கொடியையும்
தீண்டமாட்டோம்”
(8)
வீரர்கள் பதிலால்
ஆளும் வர்க்கம்
அவமானப்பட்டது.
நிலமுதலைகள்
அத்துணைப் பேரும்
ஒன்றாய்க்கூடினர்.
விவசாயிகளின்
அந்த தீர்க்கமான முடிவால்
அத்துணைப்பேருக்கும்
வியர்த்தது.
நிலமுதலைகளின்
தசைகள் துடித்தன.
கூட்டத்தின்
எல்லா திசைகளிலிருந்தும்
தேவையற்ற இரைச்சலே
வந்து கொண்டிருந்தது.
இறுதியாய்
கூட்டத்தில்
அந்த கோரமான முடிவு
எடுக்கப்பட்டது
செங்கொடி வீர்ர்கள்
அத்துணைப் பேரையும்
அழித்துவிடுவதென.
அழிப்பதற்கான
ஆயுதங்கள் வாங்குவதற்கும்
நீதி தேவதையின்
கண்களை மூடுவதற்கும்
லட்சக்கணக்கில்
பணம் திரட்டப்பட்டது.
பணம் தர மறுத்த
சின்னஞ்சிறு நிலச்சுவான்தாரர்களிடமிருந்து
அடித்து,
மிரட்டிப் பிடுங்கப் பட்டது.
ஆளும் வர்க்கம்
உழைக்கும் வர்க்கப் பிரதிநிதிகளை
அழிக்கும் வேட்டையில்
தீவிரமாய் இறங்கியது.
இரக்கமற்றவர்கள்தான்
எதையும் செய்வார்களே
இப்படித்தான் அன்று...
(9)
தோழர்.சின்னப்பிள்ளை
ஒரு போர்க்குணமிக்க இரவில்
நிலச்சுவான்தார்களால்
கட்த்திச் செல்லப்படுகிறார்.
அங்கே
நமது தோழர்கள்
செங்கொடியொன்றைக்
கண்டெடுக்கிறார்கள்.
சற்றுக் கவனமாகப்
பார்த்ததில் தெரிந்தது
அது கொடியல்ல
தோழர். சின்னப்பிள்ளையின்
ரத்தம் தோய்ந்த
வெள்ளைத்துண்டென்று.
*****
பட்டப் பகலில்
வெட்டவெளியில்
தோழர்.ராமச்சந்திரன்
வெட்டிச்சாய்க்கப் படுகிறார்.
காக்கிச் சட்டைகள்
அமைதியாக
தேநீர் அருந்திக் கொண்டே
அதை ரசிக்கின்றனர்.
*****
ஒரு ஊர்வலத்தில்
கலந்து கொண்டு
கபடமின்றி
நமது தோழர்.பக்கிரிச்சாமி
திரும்பி வரும்போது
நடுரோட்டில்
வெட்டிச்சாய்க்கப்படுகிறார்.
எப்போதும் போல
காக்கிச்சட்டைகள்
வேடிக்கையே பார்த்தன.
*****
முத்துசாமியும்
இன்னுமிரண்டுத்
தோழர்களும்
கட்த்திச்செல்லப்படுகிறார்கள்.
ராமானுஜம்
எனும் மிராசு வீட்டில்
அடைத்து வைக்கப்படுகிறார்கள்.
(10)
கடத்தப் பட்ட முத்துசாமியை
மீட்க
மக்கள் கூட்டம்
ஒன்றாய்த் திரள்கிறது.
மக்கள் சக்தியைப் பார்த்த
ஆளும் வர்க்கம்
தொடை நடுங்கத் தொடங்கியது.
அமைதியான முறையில்
முத்துசாமி
மீட்கப் படுகிறார்.
(11)
அனால் ஆளும் வர்க்கம்
தன்னுடைய
அத்துணைப் பலத்தையும்
இரண்டே மணிநேரத்தில்
திரட்டிக் கொண்டு
இரத்தம் குடிக்கப் புறப்பட்டது.
மிகப்பெரிய இரைச்சலைக்
கக்கிக்கொண்டே
ஒரு போலீஸ் வேனும்
இன்னுமிரண்டு லாரிகளும்
அந்த ஹரிஜன சேரிக்குள்
நுழைந்தது.
ஒன்றுமறியாத
மக்கள்கூட்டம்
போலீஸென பயந்து
ஓடி ஒழிய ஆரம்பித்தனர்.
ஆனால்
வண்டியிலிருந்து
ஏறத்தாழ
இருநூறு ரெளடிகள்
இறங்குகிறார்கள்.
கடைசியாக
ஒரு மிருகம்
கீழே குதிக்கிறது.
அது
ஓடி வந்து
ஒரு குழந்தையின் வயிற்றில்
மிதிக்கிறது.
கண்களை மூடிக்கொண்டு
கயவர்கள்
சுற்றிலும் சுட ஆரம்பித்தனர்.
ஆண்களில்
பாதிபேர் ஓடிவிட்டனர்.
ஐந்து நிமிடத்தில்
அந்தச் சேரியே
அமைதியானது.
வீடு வீடாய்ச் சென்று
கோழிக் குஞ்சுகளை
கவ்வி வருகிறது
காட்டு மிருகங்கள்.
எல்லா மிருகங்களிடத்தும்
கூரான ஆயுதங்கள்
ஈட்டி முனையால்
ஒரு யுவதியின் தொடையைக்
குத்திக் கீறுகிறான்
ஒரு கொடியவன்.
கண்ணில் கண்டவர்களையெல்லாம்
வெட்டினார்கள்.
ஐம்பது பேரை
ஆஸ்பத்திரிக்கு
அனுப்பிவைத்தார்கள்.
பிணக்காடாய் மாறியது
அந்தச் சேரி.
கண்முன்னே விரிந்தது
கலிங்கத்துப் பரணி.
நிராதரவாய் நின்றது
தர்மம்.
ஆதரவு ஏதுமின்றி
மக்கள் கூட்டம்
ஓடுகிறது.
மறைவிடம்
ஒன்றைத் தேடுகிறது.
கடைசியாக
மனிதாபிமானி
தோழர்.ராமையாவின் வீட்டைச்
சேருகிறது.
(12)
அது சின்னஞ்சிறிய வீடு.
நீளம் எட்டடி
அகலம் ஐந்தடி.
நாற்பத்தியெட்டு மனிதர்கள்
வீட்டுக்குள்ளே.
நெரிசல்...
நெரிசல்...
எங்கும் நெரிசல்.
அடுப்பு எது
அலமாரி எது
என்றுகூட
கண்டுபிடிக்க முடியவில்லை
அத்துணை நெரிசல்.
குழந்தைகளுக்கும்
சற்றுக் குள்ளமானவர்களுக்கும்
மூச்சு முட்டுகிறது.
உடம்போடு கல்லைக்கட்டி
கிணற்றில் போட்டது போல
மூச்சுத் திணறுகிறது.
அழுக்கு உடல்கள்
வியர்க்கிறது.
ஒவ்வொருவரின் உஷ்ணங்களும்
பரிமாறிக் கொள்ளப்படுகிறது.
அங்கே
வாழ்க்கைக்கும் மரணத்திற்கும்
இடையிலான போராட்டம்
நடைபெறுகிறது.
அத்துணை உயிரும்
மரணத்தின் வாசலைத்
தொட்டுவிட்டன
அல்லது
வாழ்வின் சூனியப்பகுதிக்குச்
சென்றுவிட்டன.
வெளியேயிருந்த மிருகங்கள்
தாழ்ப்பாள் போட்டு
கதவை
அடைத்துவிடுகின்றன.
அம்மா, அய்யோவென்று
மனிதர்கள் கத்தினார்கள்
அந்த அரக்கர்களின் செவிகளை
பணம்
அடைத்திருப்பது தெரியாமல்.
அரக்கர்கள்
தயாராய் வைத்திருந்த
பெட்ரோல்
கொண்டு வரப்படுகிறது.
நாற்பத்தியெட்டு
மனித உயிர்களின்
வாழ்க்கைக்கான போராட்டம் நடந்த
அந்த குடிசையின் மேல்
ஊற்றப் படுகிறது.
மனித உருவத்திலிருந்த
கோபால கிருஷ்ணநாயுடுயென்ற மிருகம்
தீக்குச்சியை உரசி
குடிசையின் மேல் போடுகிறான்.
குப்பென்று
பற்றிக்கொண்டது குடிசை.
கொளுந்து விட்டு எரிகிறது
நெருப்பு.
கொளுந்துவிட்டு எரியும்
நெருப்பிலே,
அந்த
ராட்சச தந்தூரி அடுப்பிலே
வைக்கோல்கள் கொண்டுவந்து போடப்படுகின்றன.
விறகுகளும் சுள்ளிகளும்
தீனியாக போடப் படுகின்றன.
தீ நாக்கு
சுவைத்து சுவைத்து
மக்களை விழுங்கியது.
மரண ஓலம்...
மரண ஒலம்...
உலகையே உலுக்கியெடுத்த
மரண ஓலம்.
வாழ்நாள் முடிந்தும் கூட
வரலாற்றைத் தாண்டி ஒலிக்கும்
மரண ஓலம்.
அந்த
பரந்த வயல் காடுகளைத் தாண்டி
மனிதகுலத்தின்
மரணக்குரல்
உலகமெங்கும் பரவுகிறது.
மனித குல வரலாற்றில்
எல்லா மக்களும்
அப்போதுதான்
சேர்ந்து அழுதார்கள்.
அரக்கர் குலம்
சுற்றி நின்று சிரிக்கிறது.
ஆறு இளைஞர்கள்
குதித்து வெளியேறுகிறார்கள்.
அரக்கர்கள் கண்களில்
மாட்டிக் கொண்டனர்.
நாலு பேர் ஒடிவிட்டனர்.
இரண்டுபேர் மாட்டிக் கொண்டனர்.
கைவேறு கால் வேறாக
வெட்டப்பட்டு
துண்டு துண்டாக
நெருப்பில்
தூக்கி எரியப்பட்டனர்.
ஒரு தாய்
தனது
இரண்டு பிள்ளைகளையும்
தூக்கி வெளியே எறிகிறாள்.
அவள்
உள்ளேயே எரிகிறாள்.
அந்த வீரப்பெண்ணின்
இரத்த சம்பந்தம் எதையும்
விட்டுவைக்க
அரக்கர்களுக்கு மனமில்லை.
அந்தப்
பச்சைக் குழந்தைகளிரண்டையும்
தூக்கி
ஈவு இரக்கமின்றி
கை கால்களை பிய்த்து
மீண்டும் நெருப்பிலே
தூக்கிப் போடுகிறார்கள்.
இதயத்தை தொலைத்தவர்கள்
தங்கள் கரைப் பற்களைக்காட்டி
காடே அதிரும்படி
கடைசியாய் ஒருமுறை
சிரித்துக் கொண்டார்கள்.
மனிதகுலத்தின் மரண ஓலம்
ஒரு மணிநேரத்தில்
நிரந்தரமாய் அடங்கிவிட்டது.
உலகமே
அமைதியில் மூழ்கியது.
ஊருக்கு ஒதுக்குப் புறத்தில்
எதோவொரு வயல்காட்டில்
ஒரு நாய்
குரைத்துக் கொண்டிருப்பது மட்டும்
நன்றாக கேட்டது.