விருட்ச சொப்பனங்கள்

அறிவேன் மரங்களின் மகோன்னதம்
அவை மட்டுமே
அதிமேதகு அந்தஸ்துடையவை!

சூரியனில் நெருப்பும்
நிலத்தில் நீரும் வாங்கி
சமைத்துண்ணும் புலமை
இங்கு யாருக்கிருக்கிறது!

எனினும் அவை கருகுவதில்லை
அவற்றின் மனமும் குறுகியதில்லை!
அறிவேன் மரங்களின் மகோன்னதம்
அவை மட்டுமே
அதிமேதகு அந்தஸ்துடையவை!

மரங்கள் தனக்காக
மட்டுமா சமைக்கிறது?
பறப்பவை,நடப்பவைக்கு பழங்கள்
பறித்துக் கொறிப்பவைக்கு கிழங்கு.

மரத்தில் பறித்து மரத்தையே
வெட்டி தீயிட்டு சமைத்து
மர மேசையில் பரிமாறுகிறோம்
மரம் அப்படியா செய்கிறது?

அறிவேன் மரங்களின் மகோன்னதம்
அவை மட்டுமே
அதிமேதகு அந்தஸ்துடையவை!

மரம் காற்றின் கீதங்களுக்கு
தலையசைக்கையில்-நாம்
மரத்தில் துளையிட்டு
கீதம் இசைக்கிறோம்!

மரத்திடம் மோகனமும் அழகும்
கூடிநிற்கின்றன- அவை
மாரியில் குளித்து
கோடையில் மணம் பரப்புகின்றன
அவற்றிடம் இரவல் மணம் இல்லை!
மரம் மணம் இருக்கையில்
பூக்களால் சிரிக்கிறது
நாம் பணம் இருக்கையில்
தூக்கத்திலும் சிரிக்கிறோம்

அறிவேன் மரங்களின் மகோன்னதம்
அவை மட்டுமே
அதிமேதகு அந்தஸ்துடையவை!

மரத்திற்கும் வறுமை இருக்கிறது
அப்போது நாம் வெட்டி
விறகாக்கி விடுகிறோம்
நம்மிடம் வறுமை இருக்கிறபோதிலும்
மரம் எதையெல்லமோ தந்து
சிறப்பாக்கிவிடுகிறது!

மரங்களிடம் விரோதிகளில்லை
அவை
வளர்வனவிற்கு வழிவிட்டே
வளர்கின்றன
மனிதன் மாதிரி
ஏறிய காலால் ஏணி உதைப்பதிலை!

மரங்கள்
ஜெபம் பண்ணமலேயே
பூமியை பரிசுத்தமாகுகின்றன
கரியமில வாயுவை சுத்திகரிப்பதால்

அறிவேன் மரங்களின் மகோன்னதம்
அவை மட்டுமே
அதிமேதகு அந்தஸ்துடையவை!

பிரபஞ்சம் ஓர் நாள்
புரட்டப்படும் போது
மனிதர்கள் மரங்கள்
போல் வாழ நேரிடும்
அன்று மரங்கள்
கடவுளராய் உயர்தினைக் கொள்ளும்!

எழுதியவர் : கே கே சோகியுஸ்மன் (29-Dec-12, 9:47 pm)
பார்வை : 144

மேலே